’சிலை கடத்தல் சம்பவங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ - திண்டுக்கல் சீனிவாசன்

'சிலை கடத்தல் சம்பவங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை' - திண்டுக்கல் சீனிவாசன் படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/GETTY IMAGES

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி

தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்களில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் மறுத்து உள்ளதாக தினத்தந்தியின் செய்தி தெரிவிக்கிறது.

சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறி எங்களுடைய இருவரின் படம் மற்றும் பெயரோடு தனியார் தொலைக் காட்சியில் பொய்ச் செய்தி வெளியிட்டு உள்ளார்கள். சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு இல்லை.

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் எங்கள் பெயரை குறிப்பிட்டு ஐகோர்ட்டில் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாத நிலையில், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இல்லாத ஒன்றை செய்தியாக வெளியிட்டு உள்ளனர். பொய் தகவல்களை பரப்பி இருக்கிறார்கள்" என்று அவர்கள் தங்களது கூட்டு பேட்டியின்போது தெரிவித்ததாக செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: 'டெல்லி'யின் பெயர் 'டில்லி'யாக மாறப்போகிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர் விஜய் கோயல் பேசியபோது, 'டெல்லி'யின் பெயரை 'டில்லி' என்று மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக விவரிக்கிறது தினத்தந்தியின் மற்றொரு செய்தி.

விஜய் கோயல் மேலும் பேசுகையில், "டெல்லி என்ற பெயர் எப்படி வந்தது என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், டெல்லியை ஆண்ட மவுரிய வம்ச மன்னரான 'டில்லு' என்பவரின் பெயர் அதற்கு சூட்டப்பட்டு 'டில்லி' என மாறியதாக பொதுவாக கூறப்படுகிறது.

இருப்பினும், டெல்லியா, டில்லியா என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. தலைநகரின் பெயர், அதன் கலாசாரத்தையும், வரலாறையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எனவே, டெல்லியின் பெயரை 'டில்லி' என்று மாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் "டில்லி என பெயர் மாற்றக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து அதுகுறித்து உரிய முடிவு எடுக்கப்படும்" என உறுதி அளித்ததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: மின்னணு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு

படத்தின் காப்புரிமை Getty Images

மின்னணு முறையிலான கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று (வியாழக்கிழமை) அளித்த பதிலில்:

சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டுகளை முதல்கட்டமாக 2.2 கோடி பேருக்கு வழங்க வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. டிஜிட்டல் முறையில் கையொப்பம் பெறப்பட்டு அவை சிப்பில் பதிவு செய்யப்படும். அந்த சிப் தற்போதைய புத்தக வடிவ கடவுச்சீட்டுடன் பதிக்கப்படும். யாரேனும் சிப்பில் மாற்றம் செய்ய முற்பட்டால், அதைக் கண்டறிந்து உங்கள் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிப்பு வரும் வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

இந்துதமிழ் திசை - "ராணுவத்தில் இணைந்த தோனி"

படத்தின் காப்புரிமை Twitter

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்து 2 மாத பயிற்சியை நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி, லெப்டினென்ட் அந்தஸ்தில் 2011-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது வளரும் இளைஞர்களை ராணுவப் பணியில் ஆர்வத்துடன் சேர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான விழிப்புணர்வாக அவர் அதைச் செய்து வருகிறார்" என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :