ஒரே மொய் விருந்தில் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி

மொய் விருந்தின் மூலம் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி படத்தின் காப்புரிமை Twitter

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: மொய் விருந்தின் மூலம் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி

புதுக்கோட்டை அருகே, ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் ரூ.4 கோடி வசூலானது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்களும் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி பெரிய அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, விருந்து வைக்கப்பட்டது.

இந்த மொய் விருந்தையொட்டி, சுமார் 50 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. 200-க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 1 டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ உணவு தனியாக பரிமாறப்பட்டது. சுமார் 100 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில் மாலை விருந்து முடிந்த நிலையில் வசூல் செய்யப்பட்ட மொய் பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.4 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது என்று கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "கோலியுடன் உரசல் முற்றுகிறதா?"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா இடையே உரசல் நிலவுவதாக வதந்திகள் எழுந்த நிலையில், அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா ஒரு செயல் செய்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை ஃபாலோ செய்துவந்த ரோஹித் சர்மா, திடீரென அவரை அன்-ஃபாலோ செய்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இடையிலான உரசல் இருப்பதை இந்த செயல் வலுப்படுத்துவதாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவை ஃபாலோ செய்கிறார் விராட் கோலி. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, ரோஹித்தையும், அவரின் மனைவி ரித்திகாவையும் பாலோ செய்யவில்லை. அதேபோல ரோஹித்தின் மனைவி ரித்திகாவும், கோலியையும், அவரின் மனைவி அனுஷ்காவையும் பாலோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "பிரதமர் மோதிக்கு ஆதரவாக 61 பிரபலங்கள் கடிதம்"

படத்தின் காப்புரிமை NurPhoto

வெறுப்பின் பேரில் அரங்கேறும் கும்பல் கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோதிக்கு பிரபலங்கள் அனுப்பிய கடிதத்துக்கு பதிலடியாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 வேறு பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கடிதம் அனுப்பியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"கும்பல் கொலை செய்பவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத வழக்கை பதிவு செய்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, திரைப்பட இயக்குநர்கள், திரை கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கையொப்பமிட்ட கடிதம் பிரதமர் மோதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரபல இயக்குநர்கள் மணி ரத்னம், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் அதில் கையொப்பமிட்டிருந்தனர்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, பிரபல இயக்குநர்கள் மதூர் பண்டார்கர், விவேக் அக்னிஹோத்ரி, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் அனிர்பன் கங்குலி உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 பிரபலங்கள் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் ஆதரவாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

கும்பல் கொலைக்கு பிரதமர் மோதி எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துவிட்டார்.

இனி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக வெளிச்சத்துக்காக இதுபோன்ற கடிதம் அனுப்பாமல், கும்பல் கொலைகளைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்