அப்துல் கலாம்: நான்காம் ஆண்டு நினைவு நாளில் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அமைச்சர்கள்

அப்துல் கலாம் நினைவு

அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அப்துல் கலாமின் கனவை நனவாக்கி ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்குவோம் என இளைஞர்கள் மாணவ, மாணவிகள் அவரது நினைவிடத்தில் இந்த நாளில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் அஞ்சலி

இராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை கலாமின் குடும்பத்தினர், பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

காலையில் கலாமின் அண்ணன் முத்து மீரா மரக்காயர் மற்றும் அவரது உறவினர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தியபின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர் வளையம் வைத்து மரியதை செலுத்தினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

கலாமின் நினைவு நாள் அரசு விழாவாக நடத்த கோரிக்கை

அப்துல் கலாமின் நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு கலாமின் தேசிய நினைவிடத்தில் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர், பிபிசி தமிழிடம் பேசிய பொன்ராஜ், “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் உறுதிமொழி எடுத்துச் செல்கின்றனர். ஆனால் தமிழக அரசிலிருந்தும், மத்திய அரசியிலிருந்தும் அரசு பிரதிநிதி ஒருவர் கூட இந்த விழாவிற்கு வரவில்லை. 'கலாமின் நான்காவது நினைவு தினத்திலேயே மாநில அரசும், மத்திய அரசும் அப்துல் கலாமை புறக்கணித்துள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் “அப்துல் கலாமின் நினைவு தினத்தை அரசு விழாவாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து இனிவரும் ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

கலாம் தேசிய நினைவகத்தை பார்வையிட்ட மாணவி தானிய அனுஸா, “இன்று நான் இங்கு (கலாம் நினைவிடம்) வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு அப்துல் கலாம் அய்யாவை மிகவும் பிடிக்கும், அவரை போல் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது கனவு. இன்று அவருடைய வாழ்கை வரலாற்றை அறிய வந்த பின்னர், 5 மரக்கன்றுகளாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை பிறந்துள்ளது” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அப்துல் கலாம் அவர்களின் படங்களை பார்த்தேன்; அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது உள்ள காட்சிகளை பார்த்தேன்; அனைத்தும் பிரமிப்பூட்டின. .அவரது நினைவு நாளான இன்று அவரை ரோல் மாடலாக எடுத்து கொண்டு வாழ உறுதி எடுத்து கொண்டதாக மாணவி பாக்கியா கூறினார்.

“ ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் இன்று கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் பல திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அதிகமான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சாதாரண நிலையில் இருந்து இந்திய முதல் குடிமகனாக

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

இவர் பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த அறிஞர்.

அப்துல்கலாம் தனது பதவிக்காலம் முடிந்த பின் டெல்லியில் ராஜாஜிமார்க்-கில் அமைந்துள்ள 10ம் நம்பர் வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த 2015 ஜூலை 27ம் தேதி மேகாலய மாநிலத்தின் ஷில்லாங்கிலுள்ள இண்டியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிலையத்தில் மாணவர்கள் மத்தியில் மேடையில் பேசிகொண்டிருந்த போது மயங்கி விழுந்து காலமானார்.

அதனையடுத்து அவரின் உடல் அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்க்கு கொண்டுவரப்பட்டு பேக்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கட்டுமானபணிகள் மேம்பாட்டுதுறை சார்பில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி தேசிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். அன்றே பொது மக்களின் பயன்பாட்டிற்கும் அது திறக்கப்பட்டது. இந்த தேசிய நினைவகத்தில் கலாம் பயன்படுத்திய பொருட்கள், அவர் அணிந்த உடைகளின் மாதிரி ராக்கெட் உள்ளிட்ட 3டி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்