கர்நாடகத்தில் பெரும்பான்மை பெறுகிறது பாஜக; 17 உறுப்பினர்கள் தகுதிநீக்கம்

எடியூரப்பா படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பதவி விலகல் கடிதம் கொடுத்த, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் 14 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அங்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்யும் என்று கருதப்படுகிறது.

கட்சித் தாவல் தடை சட்டத்தின் சரத்துகளை 11 காங்கிரஸ் மற்றும் மூன்று மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் மீறி விட்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சார்ந்த கட்சிகள் சபாநாயகரிடம் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

சபாநாயகரின் முடிவுக்கு இந்த இரு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த 14 பேருடன் சேர்த்து, குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபின் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

2023இல் இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும்வரை அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிகபட்சமாக ஒரே முறையில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டபின் இவ்வளவு உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2017இல் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இப்போது கர்நாடக சட்டமன்றத்தின் பலம் 225இல் (ஒரு ஆங்கிலோ-இந்தியன் நியமன உறுப்பினர் உள்பட) இருந்து 208ஆக குறைந்துள்ளது. ஆகவே பெரும்பான்மையை நிரூபிக்க 105 உறுப்பினர்கள் போதும்.

பாஜகவுக்கு கர்நாடக சட்டமன்றத்தில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு சுயேச்சையின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 65 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தலத்துக்கு 34 உறுப்பினர்களுமே உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு இருக்கும் ஒரே உறுப்பினர் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கட்சியின் தலைவர் மாயாவதியின் உத்தரவை மீறி, நம்பிக்கை வாக்கெடுப்பிலேயே கலந்துகொள்ளவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, சட்டமன்றம் முழு பலம் பெற்ற பின்னரே 113க்கும் மேலான இடங்களைப் பெற்று எடியூரப்பா தலைமையிலான அரசு நிலையாக நீடிக்குமா என்பது தெரியவரும்.

தகுதிநீக்கத்துக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். அந்த வழக்கின் தீர்ப்பு வரும் முன்பு இடைத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பும் குறைவுதான்.

இப்போதைய முக்கியக் கேள்வி, பதவி விலகல் கடிதம் கொடுத்தபின் கட்சியின் கொறடா உத்தரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொருந்துமா என்பதே.

தாங்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்த பின்னரே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்ட்து என்பதால் அது தங்களுக்கு பொருந்தாது என்பதே தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்