திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் ஒருவர் கைது

உமா மகேஸ்வரி படத்தின் காப்புரிமை Twitter

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயரான தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 21ஆம் தேதியன்று ரெட்டியார் பாளையத்தில் இருந்த அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடன் அவருடைய கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

உமா மகேஸ்வரி தி.மு.கவின் நெல்லை மத்திய மாவட்ட மகளிர் அணியின் துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவரது கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.

இந்தக் கொலை எதற்காக நடந்தது என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவராத நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிவதில் துவக்கத்தில் பிரச்சனைகள் இருந்தன. மேலும் உமா மகேஸ்வரியின் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால், யார் அவருடைய வீட்டிற்கு வந்து சென்றது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்குப் பிறகு அவரது வீட்டிற்கு வரும் சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அதில் ஒரு வாகனம் கொலை நடப்பதற்கு சற்று முன்பு உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு சற்று தூரத்தில் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த செல்போன் எண்களும் ஆராயப்பட்டன. அந்த செல்போன் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

அதில்தான் தி.மு.கவைச் சேர்ந்த சீனியம்மாள் என்பவர் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீனியம்மாள் தன்னை காவல்துறையினர் விசாரித்தது குறித்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனக் கூறினார்.

இந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவெண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அது சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனின் (39) பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்துவந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் கார்த்திகேயனிடம் விசாரித்தபோது, கொலைக்கான காரணங்கள், கொலை செய்த விதம் ஆகியவை குறித்து முன்னுக்குப் பின்னான தகவல்களைத் தெரிவித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கொலை நடந்தபோது உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம் ஆகியவற்றையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி காவல்துறைத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்