சர்ச்சைக்குரிய கருத்தும், அசாம் கானின் பத்து நொடி மன்னிப்பும் உணர்த்துவது என்ன?

அசாம் கான் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அசாம் கான்

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசாம் கானை மன்னிப்பு கேட்க வைத்த அனைத்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள், பெண்ணுரிமை அமைப்புகள், சாதாரண பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னதாக, சென்ற வாரம், மக்களவை துணை சபாநாயகர் ரமா தேவிக்கு எதிராக தரக்குறைவான கருத்தை முன்வைத்த சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசாம் கான், உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து, அசாம் கானின் செயல்பாட்டுக்கு எதிராக உடனடியாக நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் குரல் கொடுத்ததன் விளைவாக, இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் பத்து நொடிகள் மன்னிப்புக்கோரி உள்ளார்.

இல்லையெனில், ஒரு பெண் அரசியல்வாதி மற்றுமொருமுறை தனக்கு எதிராக ஒரு ஆண் முன்வைத்த பாலியல் ரீதியிலான கருத்தை வேடிக்கையாக கருதி மறந்திருக்க வேண்டியதாகி இருக்கும்.

இதுவே அவர் அரசியலமைப்புக்கு உட்பட்ட ஒரு பதவியில் இல்லாதவராக இருந்திருந்தால், எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல், அவர் ஒரு சாதாரணமான பெண் என்பதன் அடிப்படையில் இந்த விவகாரம் அப்படியே விடப்பட்டிருக்கும். அதாவது, இந்த பதவியில் அமர்வதற்காக அவர் எவ்வளவு சிரமப்பட்டு, எதிர் நீச்சல் அடித்து கடுமையாக உழைத்திருக்கக் கூடும் என்பது கவனிக்கப்பட்டிருக்காது.

என்னை மன்னிக்கவும், இது நகைச்சுவை அல்ல; இறுமாப்பு. ஆண்கள், பெண்களுக்கு எதிராக மட்டும் கட்டவிழ்க்கும் வெறுக்கத்தக்க நடத்தை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரமா தேவி

ஒரு ஆண் அரசியல்வாதியிடம் ஒருவர் இப்படி பேசுவதை நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?

இது மிகவும் அருவருப்பானது. ஆனால், இங்கு அருவருப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் சில முறை நாடாளுமன்றத்திலும், சில வேளைகளில் மற்ற இடங்களிலும் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து ஒரு பெரிய சலசலப்பு உருவாகி, பரவலான கண்டனம், தொலைக்காட்சி விவாதங்கள் போன்றவை நடக்கின்றன; செய்தித்தாள்களில் சிறப்பு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

இவையெல்லாம் நடந்து முடிவதற்குள் அந்த சம்பவத்தின் விமர்சனங்கள் முற்றிலும் நின்றுவிடுகின்றன. ஆனால், அசாம் கான் விவகாரத்தை போன்று எப்போதாவது அதிசயம் நிகழும் பட்சத்தில், பத்து நொடிகள் மன்னிப்பு கேட்கப்படும்.

"அதுபோன்ற எண்ணத்துடன், சபாநாயகர் நாற்காலியை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பார்க்க முடியாது. ஆனால், என்னுடைய செயல்பாடு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன்" என்று அசாம் கான் கூறினார்.

அதாவது, தான் கூறிய நகைச்சுவையை பெண்கள்தான் புரிந்துகொள்ளவில்லை என்றும் அது அவர்களுடைய தவறு என்பது போலவும் அசாம் கானின் மன்னிப்பு கோரல் உள்ளது.

அசாம் கான் மன்னிப்புக் கோரியதும் தனது நாற்காலியிலிருந்து எழுந்து பேசிய ரமா தேவி, "எனக்கு மன்னிப்பு வேண்டாம். ஆனால், நடத்தையில் நீடித்த மாற்றத்தை கொண்டுவரும் முயற்சிகள் வேண்டும்" என்று பதில் கூறினார்.

ஆனால், அசாம் கானின் மன்னிப்பை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது. தங்களது கடமை முடிந்தது என்று தெரிந்ததும், அனைவரும் அடுத்த வேலையை நோக்கி சென்றுவிட்டனர்; மத்திய அரசின் ஒரு மசோதா குறித்த விவாதம் உடனடியாக ஆரம்பித்தது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், நாடாளுமன்றம் தனது செயல்களால் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான அதன் நோக்கத்தை நிரூபிக்க முடியவில்லை என்பது போல, இதுபோன்ற விவகாரங்களில் நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ரமா தேவியின் வலியுறுத்தல் அத்தோடு மறைந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

அசாம் கானின் இந்த நடத்தை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, தனிநபர்களுக்கோ மட்டும் உரித்தானது அல்ல; இதுபோன்ற நடத்தை ஒவ்வொரு நாளும் சாதாரணமான ஒன்றாக ஆக்கப்படுகிறது.

பெண்களின் மீது இழைக்கப்படும் அனைத்து அநீதிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் அவர்களையே மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அலுவலகங்கள், குடும்பங்கள் என சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் பெண்கள் மீதான அவதூறுகளுக்கு, பாரபட்சத்துக்கு இடமளிக்கப்படுகிறது.

அதாவது, ஒரு பெண் மீது நகைச்சுவை என்ற பெயரிலும், அவர்களது தொழில்ரீதியிலான வாழ்க்கையின் முன்னேற்றத்தில் அவரது அழகு ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், எவ்வளவு அளவுடன் பேச வேண்டும், பொறுமை காக்க வேண்டும் என்ற பெயரிலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

தங்களுக்கு எதிராக சமூகத்தின் பல்வேறு நிலைகளால் தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து பெண்கள் போராடுகிறார்கள். அதற்கு பலனாக கிடைக்கும் இதுபோன்ற பத்து நொடிகள் மன்னிப்பும் ஒருவித முன்னேற்றம்தான்.

இதுபோன்ற இழிவான சம்பவங்கள் மக்களில் மனதில் இடம்பெற்றால், அடுத்ததாக அவர்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது ஒரு வேட்பாளருக்கு அவரது நடத்தையின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் எழக் கூடும்.

அது நடக்கவில்லையென்றாலும் கூட, அடுத்தமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு எதிராக எழும் குரலின் வீரியம் மிகப் பெரிய அளவில் இருக்கக் கூடும்.

அதேபோன்று, ஒவ்வொருமுறை கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படும் போது, அது மிகப் பெரிய முன்னெடுப்பாக அமையும்.

பெண்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு தரப்படும் இதுபோன்ற பதிலடிகள், நீண்டகால அடிப்படையில் சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்