‘காஃபி டே’ நிறுவனர் சித்தார்த்தா திடீர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்

வி ஜி சித்தார்த்தா படத்தின் காப்புரிமை Getty Images

மங்களூரில் காணாமல் போன கஃபே காஃபி டேயின் நிறுவனரை தேடும் பணி நடைபெற்று வருவதாக கர்நாடக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்திய உணவு செயின் நிறுவனமான கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மங்களூர் புறநகர் பகுதியில் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நேத்ராவதி ஆற்றுக்கு அருகே ஓரிடத்தில் காரை நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.

''காரில் இருந்து இறங்கிய சித்தார்த் ஓட்டுநரிடம் அவர் அங்கிருந்து செல்லலாம் என்றும் தான் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவதாகவும் கூறினார்'' என்று பிபிசியிடம் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் நேரமாகியும் சித்தார்த் வராததால் அச்சமடைந்த ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது என போலீசார் மேலும் கூறினர்.

இதனிடையே நேத்ராவதி ஆற்றுக்கு அருகே காணாமல் போன சித்தார்த்தை தேடும் பணி நடைபெற்று வருவதாக மங்களூர் போலீஸ் ஆணையர் சந்தீப் பாட்டில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா முழுவதும் கிட்டதட்ட 1750 கிளைகளுடன் நாட்டின் முன்னணி காஃபி பப்பாக இருந்துவரும் கஃபே காஃபி டேக்கு மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் போட்டியால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் இந்தியாவில் உள்ள பல சிறிய பப்களை இந்நிறுவனம் மூடியது.

கோகோ கோலாவுடன் தனது நிறுவனம் தொடர்பாக சித்தார்த்தா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த மாதத்தில் சில ஊடகங்கள் கருது வெளியிட்ட நிலையில், அதனை யாரும் உறுதி செய்யவில்லை.

முன்னாள் கர்நாடக மாநில முதல்வரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எனபது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அவசர கூட்டம் நடத்திய பின்னர், அவைரும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஊடக அறிக்கையும், ஜூலை 27ம் தேதி வி. ஜி. சித்தார்த்தா கையெழுத்திட்டு வழங்கிய கடிதம் ஒன்றின் பிரதியையும் அதில் இணைத்துள்ளனர்.

இந்த அறிக்கையில், கஃபே காஃபி டேயின் நிறுவனரும், தலைவரும், நிர்வாக இயக்குநருமான வி. ஜி. சித்தார்த்தாவை திங்கள்கிழமை மலையில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தை திறம்பட நடத்த முடியும் என்று செயற்குழு உறுப்பினர்கள் நம்புவதகாவும், முன்புபோல இந்த நிறுவனம் செயல்படுவதை தலைவர்கள் குழு உறுதி செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைய நிலைமையை ஆய்வு செய்து, இந்த நிறுவனத்தின் வியாபாரம் பாதிக்கப்படாமல், அதிகாரிகளோடு ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ள அவர்கள், ஜூலை 27ம் தேதி வி. ஜி. சித்தார்த்தா அளித்த கடிதத்தை உரிய அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், கடன் வழங்கியோர், ஒப்பந்ததாரர்கள், ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகள் உள்பட எல்லா பங்குதாரர்களிடம் மிகவும் தேவையான இந்த நேரத்தில் ஆதரவைகோருவதாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.

எந்தவித அனுமானங்களையும் தவிர்ப்பதோடு, குடும்பத்தின் அந்தரங்க உரிமையை மதிக்குமாறு ஊடகங்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜூலை 27ம் தேதி வி. ஜி. சித்தார்த்தா கையெழுத்திட்டு வழங்கிய கடிதத்தில், நிறுவனம் நட்டமாக இங்குவதற்கு தானே பொறுப்பு என்றும், புதிய நிர்வாகத்தை தேர்வு செய்து வியாபாரத்தை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.

மேலும், யாரையும் ஏமாற்றும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை, தொழில் முனைவோராக தான் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனை புரிந்து கொண்டு தன்னை மன்னிக்க வேண்டுமெனவும் வி. ஜி. சித்தார்த்தா தெரிவித்திருப்பதாக இந்த கடிதம் குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்