முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது: அதிமுக வெளிநடப்பு

முஸ்லிம் பெண் படத்தின் காப்புரிமை Getty Images

முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தை பேச அழைத்தார். அவர் மசோதாவை எதிர்த்துப் பேசினார். இதையடுத்து மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதையடுத்து மசோதா வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Rajya Sabha TV
Image caption குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முத்தலாக் மசோதா நிறைவேறியதாக அறிவித்தார்.

ஆனால், எத்தனை பேர் எதிர்த்தும், எத்தனை பேர் ஆதரித்தும் வாக்களித்தனர் என்ற விவரம் சரி பார்க்கப்பட்டு தீர்மானத்தை 99 பேர் ஆதரித்ததாகவும், 84 பேர் எதிர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மூன்று முறை தலாக் சொல்வதன் மூலம் முஸ்லிம் பெண்களை அவர்களது கணவர்கள் மணவிலக்கு செய்துவிட முடியும் என்ற நடைமுறை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது. எனவே இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றவேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன. இந்த மசோதா, உரிமையியல் பிரச்சனையை, குற்றவியல் பிரச்சனையாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

"முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா" என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

மதிமுக எம்.பி. வைகோ இதனை கருப்பு நாள் என்று கூறினார். ஆனால் அமைச்சர் அதை தாக்கல் செய்யட்டும் அதன் பிறகு இது குறித்து கருத்துத் தெரிவிக்கலாம் என்று அவைத் தலைவர் தெரிவித்துவிட்டார்.

பிறகு நடந்த விவாதத்தில், முத்தலாக் கூறுவதை கிரிமினல் குற்றமாக மாற்றப்படுவதை குறிப்பாக திமுக எம்.பி. திருச்சி சிவா எதிர்த்துப் பேசினார். ஏற்கெனவே, சட்டப்படி முத்தலாக் கூறுவது ஏற்கப்பட முடியாதபோது, மூன்றுமுறை தலாக் சொன்னாலும் கணவன், கணவனாகவே நீடிக்கிறான். அப்படி இருக்கும்போது ஏன் அவன் சிறைக்கு அனுப்பப்படவேண்டும். சிறைக்கு அனுப்பினாலும் பிணையில் வரமுடியும் என்கிறார்கள். வெளியில் வருகிறவன் எங்கே செல்வான்? மீண்டும் அவன் மனைவியோடு சேர்ந்து வாழ்வானா? என்று கேள்வி எழுப்பினார் சிவா.

வெளிநடப்பு

காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் இந்த வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் இல்லை என்று தற்போது சர்ச்சை எழுகிறது. அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 25 எம்.பி.க்கள் வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் இல்லை என்று கூறப்படுகிறது. இவற்றில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருந்தது.

தமிழக கட்சிகளான அதிமுகவுக்கு 11 இடங்களும், திமுகவுக்கு 5 இடங்களும், மதிமுகவுக்கு ஒரு இடமும், பாமக-வுக்கு ஒரு இடமும் மாநிலங்களவையில் உள்ளது. இதில் அதிமுக எதிர்த்துப் பேசியிருந்தாலும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதிமுகவில் முரண்பாடு

இந்த மசோதாவின் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று கூறினார்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் சிலவற்றைப் படித்துக்காட்டிய அவர், இந்த மசோதா இந்த உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை கையாள்வதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முஸ்லிம் திருமணங்கள் என்பவை உரிமையியல் வகைப்பாட்டுக்குள் வருகின்ற ஒப்பந்தங்கள் என்றும், இந்த உரிமையியல் (சிவில்) ஒப்பந்தத்தை மீறும் செயல்களை எப்படி குற்றவியல் (கிரிமினல்) குற்றமாக வகைப்பாடு செய்யமுடியும் என்று அவர் கேட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
முத்தலாக்: “குற்றவியலில் சேர்ப்பது திருமண முறிவுக்கு வழிவகுக்கும்”

முத்தலாக் அளிக்கும் முறை ஏற்கெனவே செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது. அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. முஸ்லிம்கள் சட்டத்தில் அது அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஒரு முஸ்லிம் கணவன் மூன்று முறை தலாக் சொல்வது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

குழந்தைகள் யார் பாதுகாப்பில் இருப்பது என்பது ஏற்கெனவே மதச்சார்பற்ற சட்டத்துக்கு உட்பட்ட விவகாரமாக இருக்கிறது என்று நவநீதகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை ஆழமாகப் பரிசீலிப்பதற்கு தேர்வுக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்று நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் மக்களவையில் உள்ள ஒரே அதிமுக எம்.பி.யான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்குமார் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசியதாக ஒரு சர்ச்சை நிலவுகிறது.

இந்த முத்தலாக் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற ஆதரவளித்த கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி சொல்லி, பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பதிவில், முத்தலாக் முறையால் துன்பம் அனுபவித்துள்ள பெண்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும், இந்த முத்தலாக் முறை ஒழிக்கப்படுவதால் சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரமும், மரியாதையும் கிடைக்கும் என்றும் மோதி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :