முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: பாலின நீதிக்கு நன்னாளா, கருப்பு நாளா?

முஸ்லிம் பெண். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாலின நீதிக்கு இது நன்னாளா?

முத்தலாக் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை ) மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. 11 எம்.பி.க்களைக் கொண்டுள்ள அதிமுக எதிர்த்து கருத்துத் தெரிவித்தது. ஆனால் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

இந்நிலையில் 99-84 என்ற வாக்கு கணக்கில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

தடுப்பரண்

இந்த மசோதாவை எப்படிப் பார்க்கிறார் என்று திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பதர் சயீத்திட்டம் பிபிசி தமிழ் கேட்டது.

"பாலின நீதிக்கு இது ஒரு நன்னாள்" என்றார் அந்த முன்னாள் அதிமுக பெண் அரசியல்வாதி.

படத்தின் காப்புரிமை Getty Images

"ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முத்தலாக் செல்லாததாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் வரம்புக்குள் முத்தலாக்கை கொண்டுவரும் இந்த சட்டம் தேவையற்றது" என்று விமர்சகர்கள் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு,

"அதன் பிறகும், முத்தலாக் சொல்கிறவர்களை அப்படிச் செய்யாமல் தடுப்பதற்கான தடுப்பரணாக இந்த சட்டம் பயன்படும். முதல் மனைவிக்கு முத்தலாக் சொல்லாவிட்டாலும் அவரைப் பிரிந்து சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வழி இருக்கிறதே," என்றார் பதர் சயீத்.

"அப்படி இரண்டாவது திருமணம் செய்துகொள்வதைத் தடுக்க இந்த சட்டம் உதவுமா?" என்று கேட்டபோது, அதற்கு பின்னால் ஒரு வேளை சட்டம் வரலாம் என்றார்.

கருப்பு நாள்

ஆனால், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இது அரசமைப்புச் சட்டத்துக்கு, அது வழங்குகிற உரிமைகளுக்கு கருப்பு நாள் என்கிறார். சாயிரா பானு வழக்கில் ஏற்கெனவே முத்தலாக் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், முத்தலாக் சொன்னாலும் அது திருமண முறிவுக்கு வழிவகுக்காது என்ற நிலையில், இதனை உரிமையியல் பிரச்சனையாக இருந்து குற்றவியல் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார்கள். இந்த மசோதா நிறைவேறியதால், முத்தலாக் சொல்லும் கணவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Jawahirullah

"அப்படி சிறையில் இருக்கிற கணவன் எப்படி அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க முடியும்?

இந்த முத்தலாக் முறை தவறு, இதனை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த சட்டம் முஸ்லிம்களை, குறிப்பாக முஸ்லிம் ஆண்களை பழிவாங்கும் நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கணவனால் கைவிடப்பட்ட 23.7 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள் இவர்களில் 0.8 சதவீதம் பேர்தான் முஸ்லிம்கள். இந்த கைவிடப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் இந்துப் பெண்கள்தான்" என்றார் ஜவாஹிருல்லா.

சந்தர்ப்பவாதம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் இந்த வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் இல்லை. ஐக்கிய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 25 எம்.பி.க்கள் வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் இல்லை என்று கூறப்படுகிறது. இவற்றில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருந்தது.

ஒருவேளை அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் முதலிய கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்திருந்தால், அவையில் இல்லாமல் போன சில எம்.பி.க்கள் அவையில் இருந்திருந்தால் இந்த மசோதா நிறைவேறியிருக்காது.

மசோதாவுக்கு கருத்து அளவில் எதிர்ப்புத் தெரிவித்த கட்சிகள் சில எதிர்த்து வாக்களிக்காமல் விலகி இருந்தது எதைக் காட்டுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனிடம் கேட்டோம்.

படத்தின் காப்புரிமை Elangovan Rajasekaran

"இது தப்பித்தல்வாதம்தான். துணிந்து நின்று அவரவர் அவரவர் கருத்துக்கு ஏற்ப வாக்களித்திருக்கவேண்டும். ஆனால், எல்லா அரசியல் உறவுகளுக்கான வாய்ப்புகளையும், கதவுகளையும் திறந்து வைத்திருக்க விரும்புகிறார்கள் இவர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. பொதுவாக திருமண பந்தத்தில் பெண்களின் உரிமையை பாதுகாக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், உரிமையியல் சார்ந்த இந்த விவகாரத்தை குற்றவியல் விவகாரமாக மாற்றியதைத்தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள். அது தவிர, இதனை எதிர்க்கிற முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் உண்டு" என்று கூறினார் இளங்கோவன்.

தவிர, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார், மக்களவையில் இதை ஆதரித்ததும் அந்தக் கட்சிக்குள் இருக்கும் பிளவைக் காட்டுவதாக பல செய்திகள், விமர்சனங்கள் வெளியாகின்றன. ஆனால், அதிமுகவின் அன்வர் ராஜா, இது தகவல் குளறுபடியால் நடந்திருக்கலாம் என்கிறார்.

மறுபுறம், முஸ்லிம்கள் அதிகம் உள்ள வேலூர் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே, பாஜகவையும் அதிகம் கோபப்படுத்தாத, அதே நேரம் முஸ்லிம் வாக்காளர்களையும் சமாதானப்படுத்துகிறவிதமாக ஒரு நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் பலர் கருத்துக் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :