தமிழக அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு

கேபிள் தொலைக்காட்சி

மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2007ல் தொடங்கப்பட்டாலும், 2011ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ல் மேம்படுத்திய பின்னர், ரூ.70 மாத சந்தாவில் 100 சேனல்களை அரச கேபிள் டிவி சேவையை மக்கள் பெற்றுவந்தனர். அந்த மாத சந்தா படிப்படியாக ரூ.206 வரை உயர்ந்த நிலையில், இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிவந்தனர்.

2017ல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெறப்பட்டு, துல்லியமான சேவை செட்டாப் பாக்ஸ் முறையில் பொதுமக்கள் விரும்பும் சேனல்களை வழங்கிவருகிறது என புதன்கிழமை (ஜூலை 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, மாத சந்தாவை மக்களின் கோரிக்கையை ஏற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ரூ.130 + ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கேபிள் டிவி கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என திமுக வலியுறுத்தியிருந்தது.

இந்தியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை மாநில அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அளிக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியது. 2011-16 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பியதுடன், இரண்டுமுறை பிரதமரிடம் நேரில் கோரிக்கைவைத்தது குறிப்பிடத்தக்கது.

2016ல் உடுமலை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழக அரசு கேபிள் டிவியின் நிறுவன தலைவராக சமீபத்தில் பதவியேற்றார். கேபிள் டிவி கட்டணம் குறைப்பு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என முன்னர் அவர் தெரிவித்திருந்தார்.

கால் நடை துறை அமைச்சராக உள்ள ராதாகிருஷ்ணன், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்