ஜம்மு - காஷ்மீரில் மேலும் 25,000 காவல் படையினர்; அதிகரிக்கும் பதற்றம்

காஷ்மீர் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து - காஷ்மீரில் கூடுதல் படைகள்

ஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே 10,000 கூடுதல் காவல் படையினர் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 25,000 படையினரை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வியாழனன்று இந்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்றவற்றில் மிகப்பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு நடக்கும் மாற்றங்களால் உண்டாகியுள்ள அச்சத்தால் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை அந்த மாநில மக்கள் வாங்கி வைத்து வருகின்றனர்.

அமர்நாத் யாத்திரை காவல் பணியில் இருந்தவர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு காவல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25,000 பேர் தங்கள் மாநிலம் வந்துள்ளதாக ஜம்மு - காஷ்மீர் மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - போக்ஸோவின் கீழ் மரண தண்டனை

படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தைகளுக்கு எதிரான பெரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழக்கும் வகையில் போக்ஸோ சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் வியாழனன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநிலங்களவையில் கடந்த ஜூலை 29 அன்று நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் 6.2 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

இந்து தமிழ்: ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை கொடுத்து பணம் பெறலாம்

படத்தின் காப்புரிமை AAVIN

பொதுமக்கள் ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஆவின் பால் பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு உகந்தவை. காலி கவர்களை குப்பைகளில், கால்வாய்களில் வீசுவதால் அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது, நீரோட்டத்தை தடுக்கிறது. இதைத்தவிர்க்க ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் பாலினை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள், மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி பாக்கெட் கவர் ஒன்றுக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :