படைகள் குவிப்பு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கமா?

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கமா? படத்தின் காப்புரிமை Paula Bronstein

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கமா? - பாஜக பதில்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரங்களுக்கான பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அவினாஷ் ராய் கன்னா, அம்மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீரில் எப்போது தேர்தல் நடந்தாலும், பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகளை நீக்குவது குறித்து மத்திய அரசு உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கும். அந்த முடிவு, நாட்டுக்கும், காஷ்மீருக்கும் நலன்பயப்பதாக அமையும்," என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: குவிக்கப்படும் படைகள்; பதற்றப்படும் மக்கள் - என்ன நடக்கிறது காஷ்மீரில்?

இந்து தமிழ் - "வேலூர் மாவட்டத்தை பிரிக்க பரிசீலனை"

படத்தின் காப்புரிமை Facebook

வேலூர் பெரிய மாவட்டம் என்பதால், தேர்தலுக்குப் பிறகு மாவட்டத்தைப் பிரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அணைக்கட்டில் நேற்று மாலை நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியபோது, அணைக்கட்டு தொகுதியில் மேல் அரசம்பட்டு அணை கட்டுவதற்கு பரிசீலனை செய்யப்படும். வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டம் என்பதால் தேர்தலுக்குப் பிறகு பிரிக்க பரிசீலிக்கப்படும்.

ஆட்சியை கவிழ்க்கிறேன் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். எங்களிடம் இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி தனியாக பிரித்துச் சென்று இன்று நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்'' என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "எம்பிபிஎஸ், பிடிஎஸ்: படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம்"

படத்தின் காப்புரிமை Getty Images

நடப்பாண்டில் எம்.பி.பி.ஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளில் இருந்து விலகும்பட்சத்தில் அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அதனைத் தொடர விரும்பாவிட்டால் சனிக்கிழமைக்குள் (ஆக. 3) கல்லூரியில் இருந்து விலகி அந்த இடங்களை திரும்ப ஒப்படைக்கலாம். அதேவேளையில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (ஆக. 4, 5) கல்லூரியை விட்டு நிற்கும்பட்சத்தில், கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதிச் சான்றின்படி ரூ.1 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 6ஆம் தேதி அல்லது அதன் பிறகு கல்லூரிகளில் இருந்து விலகுபவர்கள் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, பி.டி.எஸ். இடங்களைப் பெற்றவர்கள், படிப்பைத் தொடர விரும்பாவிட்டால், ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஆக. 4) தங்களது இடங்களைத் திரும்ப ஒப்படைக்கலாம். அதே, ஆக. 5 அல்லது 6ஆம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால் ரூ.1 லட்சமும், அதன் பிறகு கல்லூரிகளை விட்டு நின்றால் ரூ.10 லட்சமும் அபராதமாகச் செலுத்த வேண்டும்" என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்