வேலூரில் தி.மு.க - அ.தி.மு.க வெற்றியை தீர்மானிக்க போகிறதா நாம் தமிழர்? பிபிசி தமிழ் கள நிலவரம்

வேலூரில் தி.மு.க - அ.தி.மு.க வெற்றியை தீர்மானிக்க போகிறதா நாம் தமிழர்? படத்தின் காப்புரிமை FACEBOOK/ GETTY IMAGES

பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இந்தத் தொகுதியின் வெற்றி - தோல்வி எதையும் தீர்மானிக்காது என்றாலும், தி.மு.கவும், அ.தி.மு.கவும் கடும் போட்டியில் இறங்கியிருக்கின்றன.

நான் தலைவர் கலைஞரோட பேரன்

வெயிலுக்குப் பெயர்போன வேலூர் மாவட்டம் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பசுமையாகக் காட்சியளிக்கிறது. கடுமையான வெயிலுக்கும் அனல் காற்றுக்கும் பெயர் போன வேலூர் மாவட்டம் இந்த மழையால், அனல் காற்றிலிருந்து சற்று தப்பியிருக்கிறது. ஆனால், வேலூர் தேர்தல் களத்திலும் அனல் பறக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். வேட்பாளர்கள் பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் மட்டும் கோஷங்களும் கொடிகளும் தென்படுகின்றன. பிற இடங்களில் சுவரெழுத்து விளம்பரங்களைப் பார்ப்பதுகூட அரிதாக இருக்கிறது.

வேலூரில் இருந்து ஆம்பூர் செல்லும் வழியில் உள்ள விரிஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம். ஊர் மந்தையில் இருக்கும் மரத்தடி மேடை. தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துடன் மேடை ஏறுகிறார் அந்த நட்சத்திரம்.

"நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு. மன்னிச்சுக்கங்க" என்றபடி இயல்பாக பேச ஆரம்பிக்கிறார் தி.மு.க. இளைஞரணியின் மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

"நான் தலைவர் கலைஞரோட பேரன். நான் சொல்றேன்... உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்க..." என்று அவர் பேச ஆரம்பித்தவுடன், நரிக்குறவர்கள் குழுவொன்று மேடை ஏறி அவருக்கு பாசி மணி மாலை அணிவித்து, செல்ஃபி எடுத்துக் கொள்கிறது.

பிறகு தொடர்ந்து பேசும் உதயநிதி, சாதாரணமான முறையில் அங்கிருக்கும் மக்களுடன் பேசி தி.மு.கவுக்கான வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார். உதயநிதியும் சரி, தி.மு.க. பிரசாரகர்களும் சரி, ஜெயலிதாவின் மரணம் குறித்து பிரசாரத்தில் பேசத் தவறுவதேயில்லை. இது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும்கூட.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஏ.சி. சண்முகம் தன்னுடய பிரசாரத்தில் பல வாக்குறுதிகளை அளிக்கிறார். திறந்த ஜீப்பில் பயணம் செய்யும் அவர், ஒவ்வொரு கிராமத்திலும் நன்று சில நிமிடங்கள் பேசுகிறார். "நான் வெற்றிபெற்றால், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு திருமண மண்டபம் என ஆறு திருமண மண்டபங்களைக் கட்டித் தருவேன். மருத்துவ முகாம்களை நடத்துவேன். என்னுடைய கல்லூரிகளில் இலவசமாக இடங்களைத் தருவேன்" என்று தான் செய்யப்போகிறவற்றைப் பட்டியலிடுகிறார்.

கதிர் ஆனந்திற்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் எ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுச் சென்றிருக்கின்றனர்.

பரபரக்கும் நாம் தமிழர் சீமான்

இந்த இருவரைத் தவிர, களத்தில் கவனிக்கப்படுபவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீபலட்சுமி. இவருக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதான சாலைகளில் வாக்குக் கேட்டு வலம் வருகிறார். அவரைப் பொறுத்தவரை, பண ரீதியாக வலுவானவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் இந்தத் தேர்தல் முறையையே மாற்ற வேண்டும் என்கிறார். அவர் செல்லும் இடங்களில் இயல்பாகக் கூட்டம் திரள்கிறது.

வேலூர் கோட்டையை ஒட்டிய சாலையில் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கும் சீமான், "நாங்கள் ஒரு மாற்றுச் சித்தாந்தத்தை முன்வைக்கிறோம்" என்கிறார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. தேனி தொகுதியை மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

எந்த கட்சியின் கோட்டை வேலூர்?

2009ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியனான்குப்பம் (தனி), வாணியம்பாடி, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றன.

இந்தத் தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் கட்சியும் மூன்று முறை தி.மு.கவும் இரண்டு முறை அ.தி.மு.கவும் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு முறையும் நான்கு முறை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் வெற்றிபெற்றிருக்கின்றன.

2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த பி. செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் 3,24,326வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் எம். அப்துல் ரகுமான் சுமார் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையே பிடித்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவான அலை வீசியது ஒருபுறமிருக்க, தி.மு.கவினர் ஒத்துழைக்காததும் இந்தத் தோல்விக்கு ஒரு காரணம் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவே நேரடியாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டது. தி.மு.கவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் இந்தத் தொகுதி பல கல்வி நிறுவனங்களின் உரிமையாளரான ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் நெருங்கிய நிலையில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களது இடங்களில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து, இந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஏப்ரல் 16ஆம் தேதியன்று இந்தியத் தேர்தல் ஆணயம் அறிவித்தது.

இந்த நிலையில்தான், வேலூர் தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கடுமையாக போட்டியிடுகின்றன.

மகனை கரை சேர்க்க துடிக்கும் துரைமுருகன்

வெளிப்பார்வைக்கு, இந்தத் தேர்தலின் முடிவுகள் பெரிதாக எதையும் மாற்றிவிடப்போவதில்லை என்றுதான் தோன்றும். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே பல்வேறு கணக்குகளை மனதில் வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.

தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஏ.சி. சண்முகம் ஏற்கனவே இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த முறை பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர். பா.ஜ.க. பெரும் பலத்தோடு ஆட்சியில் இருக்கும் இந்தத் தருணத்தில் தான் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென நினைக்கிறார். "கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியால் மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற, நான் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். இந்த முறை இருவரும் இணைந்து நிற்கிறோம். ஆகவே வெற்றி எங்களுக்குத்தான்" என்கிறார் அவர்.

தற்போது மக்களவையில் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஏ.சி. சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த எண்ணிக்கை இரண்டாக உயரும். ஆனால், ஏதாவது ஒரு தருணத்தில் கூட்டணிக் கட்சியினரை அமைச்சரவையில் இணைக்க பா.ஜ.க. விரும்பினால், ஏ.சி.சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வியெழும். இதுவும் ஒரு தரப்புக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

என்னென்ன பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன?

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, தேசிய பிரச்சனைகள் பெரிதாக பேசப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியிலிருக்கும் நிலையில், உள்ளூரில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லித்தான் இருதரப்பும் வாக்கு சேகரிக்கிறார்கள்.

குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் என தமிழ்நாட்டின் பொதுவான பிரச்சனைகள் இந்தத் தொகுதியிலும் உண்டு என்றாலும் தோல் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு, பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் தடுப்பணைகள் கட்டப்படுவது ஆகியவை பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன.

"இந்தப் பிரச்சனைகளை எந்தக் கட்சியினரும் பேசுவதில்லை. முன்பு ஒரு தோலை உரித்தால், அது செருப்பாக மாற, ஷூவாக மாற 48 நாட்களாகும். இப்போது 48 மணி நேரத்தில் ஷூவாகிவிடுகிறது. அந்த அளவுக்கு ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதோ தென்னை மரங்களைப் பாருங்கள். நிலத்தடி நீர் மாசுபட்டு எல்லாம் வாடிப்போய் கிடக்கின்றன. இதைவிட்டுவிட்டு வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது தவிர, வேலூரை இரண்டாக பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது, ஆம்பூரை ஒரு தனி மாவட்டமாக்க வேண்டும்" என்கிறார் வேலூரின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான சுரேஷ்.

வேலூர் தொகுதி சுமார் பதிமூன்றரை லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர். இவர்களைத் தவிர, வன்னியர், முதலியார், நாயுடு ஆகிய சமூகத்தினரும் இந்தத் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

ஏ.சி. சண்முகத்தைப் பொறுத்தவரை இந்தத் தொகுதியில் உள்ள முதலியா் சமூக வாக்குகளை மொத்தமாக அள்ளிவிடலாம் என நினைக்கிறார். தி.மு.கவோ வன்னியர் மற்றும் இஸ்லாமியர் வாக்குகளைப் பெருமளவில் நம்பியுள்ளது. இருந்தபோதும், பாட்டாளி மக்கள் கட்சியினரை பிரச்சாரத்தில் பயன்படுத்துவதன் மூலம் வன்னியர்களின் வாக்குகளைத் தான் பெற்றுவிட முடியுமென நம்புகிறார் ஏ.சி. சண்முகம்.

தி.மு.கவுக்கு கைக்கொடுக்கும் முத்தலாக் சட்டம்

வேலூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும், அந்தத் தொகுதிக்குள் வரும் சட்டமன்றத் தொகுதிகளான குடியாத்தம், வேலூர் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த இரு தொகுதிகளிலுமே தி.மு.கவே வெற்றிபெற்றது. தவிர, முத்தலாக் சட்டத்தின் காரணமாக பா.ஜ.க. மீதும் அ.தி.மு.க. மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அவர்களது வாக்குகளும் தங்களுக்கே கிடைக்குமென தி.மு.க. நம்புகிறது.

வேலூரின் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினர் இந்தத் தேர்தலில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது, தேர்தல் முடிவுகளில் வலுவாக எதிரொலிக்கும். தேர்தல் நெருக்கத்தில் முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஒரு சிறிய அச்ச உணர்வை அந்த சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. "முத்தலாக் என்பது ஷரீயத் படியே தவறுதான். அதை யாரும் ஏற்பதில்லை ஆனால், அதற்காக இப்படி சட்டமியற்றப்படுவதுதான் அச்சமூட்டுகிறது" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அரபுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது அ.தி.மு.க. எடுத்த நிலைப்பாடும் இச்சமூகத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொகுதியில் பண விநியோகம் எப்படி?

கடந்த முறை பண விநியோகத்தால் வாக்குப் பதிவே நின்றுபோன இந்தத் தொகுதியில் இந்த முறை நிலவரம் எப்படியிருக்கிறது? கடந்த முறையே பல இடங்களில் கொடுத்து முடித்துவிட்டதால் , விட்டுப் போன இடங்களில் விநியோகம் நடக்கிறது. ஒன்றாம் தேதியன்று விரிஞ்சிபுரம் பகுதியில் பெருமளவில் பரிசுப் பொருட்களும் பணமும் விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பகுதியில் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். அப்போது வீடுவீடாக பணம் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பறக்கும் படையினர் வந்ததும், பண விநியோகம் செய்தவர்கள் அந்தப் பணத்தைத் தூக்கிவீசிவிட்டு ஒடினர். இருந்தபோதும், கடந்த முறையோடு ஒப்பிட்டால் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்படுவது இந்த முறை மிகவும் குறைவுதான்.

வேலூர் தொகுதியில் பிரச்சாரம் நிறைவடையும் நிலையை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. - அ.தி.மு.க ஆகிய இரு தரப்புமே நம்பிக்கையுடன் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடக்கிவருக்கும் இந்தத் தேர்தல், இரு கட்சிகளுக்கு இடையிலான மோதல் என்பதைவிட, சிலரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். யார் வெற்றிபெற்றாலும், தோல்வியடையும் கட்சியைவிட அதன் வேட்பாளருக்குத்தான் சேதம் அதிகமாக இருக்கும்.

Gang Rape, Mysterious deaths & BJP MLA - Full details of Unnao Rape Case in Tamil

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்