வேலூரில் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல்: 72.62% வாக்குப் பதிவு

வேலூர் படத்தின் காப்புரிமை A.D.BALASUBRAMANIYAN

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்து முடிந்த தேர்தலில் 72.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக அமைதியான சூழலில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் போட்டியிட்டனர். ஏ.சி. சண்முகம் அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இதுதவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் களத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

இந்தத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கியது. மாலை ஆறு மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 133 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், துவக்கத்திலிருந்தே வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது. காலை 11.15 நிலவரப்படி 14.61 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. பிறகு பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி, 52.32 சதவீத வாக்குகளும் மாலை ஐந்து மணி நிலவரப்படி 62.94 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

வாக்குப் பதிவு 6 மணிக்கு நிறைவடைந்தது. ஆறு மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முடிவில், இந்தத் தேர்தலில் 72.62 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். அதிகபட்சமாக கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 82.62 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 70.51 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 67.05 சதவீத வாக்குகளும் அணைக்கட்டு பகுதியில் 75.04 சதவீத வாக்குகளும் குடியாத்தத்தில் 68.9சதவீத வாக்குகளும் வாணியம்பாடியில் 73.22 சதவீத வாக்குகம் பதிவாகியிருக்கின்றன.

இது தோராயமான கணக்கு என்பதால், துல்லியமான வாக்குப் பதிவு விவரங்கள் நாளை வெளியாகக்கூடும்.

மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றபோது சுமார் 30 எந்திரங்கள் பழுதாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன.

வாணியம்பாடி தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா செய்ததாக இருவரை தி.மு.கவினர் சிறைபிடித்தனர். பிறகு, அவர்கள் மீட்டுச் செல்லப்பட்டனர். இந்த ஒரு சம்பவத்தைத் தவிர, பெரிதாக வேறு விரும்பத்தகாத சம்பவங்களோ, வன்முறைச் சம்பவங்களோ நடைபெறவில்லை.

வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குப் பதிவு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியில் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?

தேர்தலுக்கு முன்பு, அதாவது மார்ச் 30-ம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தப் பின்னணியில்தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் 16-ம் தேதி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஒன்று இதுவரை இவ்விதமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களவைத் தேர்தல் ஒன்று ரத்து செய்யப்பட்டது அதுவே முதல் முறை. தவிர, தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதிக்கு மட்டும்தான் தேர்தல் நடைபெறவில்லை.

ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :