காஷ்மீர் சர்ச்சை: காஷ்மீரை பிரிக்கும் மசோதா மாநிலங்களவை நிறைவேறியது

காஷ்மீர் சர்ச்சை படத்தின் காப்புரிமை RSTV

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது.

மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், 61 வாக்குகள் எதிராகவும் பதிவாகியிருந்தன. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் பாஜக எம்பிக்கள் கைக்குலுக்கி வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

”பாஜகவின் ஆதிக்கப்போக்கை கண்டிக்கிறோம்” - கமல் ஹாசன்

இந்திய கூட்டாட்சி வரலாற்றில் இருண்ட நாள் இன்று - மு.க.ஸ்டாலின் கருத்து

படத்தின் காப்புரிமை John Moore
Image caption பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

03:00 PM - "இந்தியா ஓர் ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.

இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," என்று பாகிஸ்தான் ஊடகமான துனியா நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

12.45 PM - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படை குவிக்கப்பட்டு, தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், கூச்சல் குழப்பத்துடன் நடந்துவரும் நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார். அவை என்னென்ன என்பது குறித்து சட்டத்துறை செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி கூறுகிறார்.

1. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்குவதற்கான மசோதா.

2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.

3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் 35ஏ வைநீக்குவதற்கான மசோதா.

4. ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் ஆக்குவதற்கான மசோதா.

12.10 PM - ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப் பிரிவு 370 தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

12:19 PM சட்டப்பிரிவு 370ல் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இது ஒரு தைரியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று கூறியுள்ளார்.

11:45 AM இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இது - மெஹபூபா முஃப்தி

இன்று இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்கியது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். இன்னொரு ட்வீட்டில் தம்மை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்த மெஹபூபா, தம்மால் எவ்வளவு நேரம் தகவல் தொடர்பு செய்ய முடியும் என்பது தெரியாது. இதுதான் நாம் ஏற்றுக்கொண்ட இந்தியாவா என்று கேட்டுள்ளார்.

11.44 AM கூச்சல் தொடர்ந்ததால், இரண்டு உறுப்பினர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

11. 40AM- வெங்கய்யா நாயுடுவை பார்த்து - நீங்கள் அவசரநிலையால் பாதிக்கப்பட்டவர், இப்போது அவசரநிலை திரும்பி வந்துள்ளது, இது ஜனநாயகப் படுகொலை என்றார் வைகோ. இது அர்ஜன்சி - எமர்ஜன்சி அல்ல என்றார் வெங்கய்ய நாயுடு.

11.38AM - இந்தப் பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்புவது தொடர்ந்தது. ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார் அமித்ஷா. ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் தனி யூனியன்பிரதேசமாக இருக்கும். அதற்கு சட்டமன்றம் இருக்காது.

11. 36AM - மசோதாக்களின் நகல் முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆட்சேபனை தெரிவித்தார்.

11.28AMஅமித்ஷா இந்தியில் பேசினார். கூச்சல் குழப்பம் தொடர்ந்தது.

11.25 AM:ஒரு சட்டம் தவிர, பிற சட்டங்களுக்கான அச்சிடப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை என்று டெரக் ஓ பிரையன் எழுப்பிய பிரச்சனையில் நியாயமிருப்பதாக தாம் கருதுவதாக அவைத்தலைவர் வெங்கைய நாயுடு கூறினார். ஆனால், தொடர்ந்த அவையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டுக்கொண்டே இருந்ததால், பிற மசோதாக்களையும் தாக்கல் செய்யும்படி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்தார் வெங்கய்யா நாயுடு.

BREAKING 11.20 AM - ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.

11:15 AM அமித் ஷாவை பேசவிடாமல் கூச்சலிடும் எம்பிக்கள்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து அமித் ஷா பேசுகையில், அவரை பேச விடாமல் எம்பிக்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள். 

இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

ஆனால், கூச்சலுக்கு மத்தியிலும் தனது உரையை வாசித்தார் அமித் ஷா.

11:10 AM நாடாளுமன்றத்தில் கூச்சல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்தும் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார் குலாம் நபி ஆசாத்.

படத்தின் காப்புரிமை ANI

இது தொடர்பாக பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார் வெங்கையா நாயுடு.

ஒரே நாளில் சட்டத்திருத்தம் கொண்டுவர அனைத்து உரிமைகள் இருப்பதாகவும், ஆனால் இதனை படிக்க போதிய நேரம் அளிக்கப்படவில்லை என்றும் கூறினார் மேற்கு வங்கத்தின் டெரிக் ஓ பிரயான்.

11:00 AM நாடாளுமன்றம் வந்தடைந்தார் பிரதமர் மோதி

11:00 AM நாடாளுமன்றம் கூடியது

10:45 AM சட்டப்பிரிவு 370 மற்றும் 35A

இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

35-ஏ என்ன சொல்கிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளன. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.

10:30 AM காஷ்மீர் விவகாரத்தில் மோதி அரசாங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கப்படலாம் என்று யூகங்கள் நிலவுகின்றன.

எனினும் அமித் ஷாவின் நாடாளுமன்ற உரையின் முடிவில் இந்த விவகாரம் குறித்து தெளிவான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10: 18 AM 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் அமித் ஷா

10: 14 AM பிரதமர் வீட்டில் நடைபெற்ற கேபினட் கூட்டம் முடிவடைந்தது

படத்தின் காப்புரிமை Getty Images

10: 12 AM மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் போரட்டம்

காஷ்மீரில் நிலவி வரும் சூழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்களான நசீர் அஹமத் மற்றும் மிர் மொஹமத் ஃபயாஸ் ஆகியோர் நாமாளுமன்ற வளாகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்

10:08 AM காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

10:05 AM கூடுகிறது கேபினட்

காஷ்மீர் விவகாரம் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று கேபினட் கூடுகிறது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:01 AM ஜம்மு நகரில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :