அமித் ஷா - "அரசியல் சட்டப்பிரிவு 370தான் தீவிரவாதத்தின் ஆணி வேர்"

அமித் ஷா படத்தின் காப்புரிமை Hindustan Times

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370தான் தீவிரவாதத்தின் ஆணி வேராக இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா மற்றும் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த தீர்மானம் ஆகியவற்றின் மீது இன்று மாநிலங்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

மசோதாவுக்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 61 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

இச்சூழலில், வாக்கெடுப்பு நடைபெறுவதற்குமுன் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜனநாயகம் தழைக்காமல் இருந்ததற்கு மூன்று குடும்பங்களின் ஆட்சியே காரணமாக இருந்ததாகவும், அரசியல் சட்டப்பிரிவு 370தான் காஷ்மீரில் தீவிரவாதத்தின் ஆணிவேராக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும்,"இந்த அரசியல் சட்டப்பிரிவால், மாநிலத்தில் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை 100 ரூபாய் அதிகமாக இருந்தது. மாநிலத்தின் நில மதிப்பும் உயரவில்லை," என்றார்.

அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ காரணமாக காஷ்மீர் வறுமையில் இருந்ததாக கூறிய அமித் ஷா, இந்த சட்டப்பிரிவுகளால் நிலம் வாங்க முடியாமல் சுற்றுலா வளர்ச்சி அடையாமல் இருந்ததாகவும், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இந்த சட்டப்பிரிவுகள் தடையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

"இந்த சட்டப்பிரிவுகளால் புதிய தனியார் மருத்துவமனைகள் அமைக்க முடியாமல் காஷ்மீரில் சுகாதாரம் முடங்கி போயிருந்தது. சரியான தக்க நேரத்தில் இயல்பு நிலை திரும்பும்போது, காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும், " என்று உரையாற்றினார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :