மெஹபூபா முஃப்தி பேட்டி: "காஷ்மீருக்கு துரோகம் இழைத்துவிட்டது இந்தியா "

மெகபூபா முப்தி படத்தின் காப்புரிமை EPA

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளரான ஆத்திஷ் தசீர் பிபிசிக்காக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தியை நேர்காணல் எடுத்தார்.

ஆத்திஷ் :இப்போது நடந்திருக்கும் விஷயத்துக்கு உங்களுடைய கருத்து என்ன?

மெபூபா: வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய ஜனநாயகத்தில் இன்றைய தினத்தை மிகவும் கருப்பான நாளாக நான் கருதுகிறேன். மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவுடன் சேர்ந்து, இரண்டு நாடுகள் என்ற கோட்பாட்டை நிராகரித்த காஷ்மீர் தலைவர்கள் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு, பாகிஸ்தானை நிராகரித்து இந்தியாவுடன் சேருவதற்கு முடிவு எடுத்தது தவறாகிவிட்டதோ என்று உணர்கிறோம். நாடாளுமன்றம் கூட எங்களைக் கைவிட்டுவிட்டது. இந்தியாவில் அதுதான் ஜனநாயகத்தின் கோவில். அந்த அமைப்பு எங்களைக் கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு காஷ்மீர் என்ற நிலப்பகுதி மட்டும் தான் வேண்டும், மக்களைப் பற்றிக் கவலையில்லை என்பதைப் போலத் தெரிகிறது. நாங்கள் எங்கெ செல்வது? நீதி கேட்டு ஐ.நா. மன்றத்துக்குச் சென்றவர்களின் செயல் சரியானது தான் என்று இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. இந்திய அரசியல்சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த நாங்கள் தவறாக முடிவு செய்துவிட்டோம் என்று தோன்றுகிறது. எந்த நாட்டிடம் எங்களை ஒப்படைத்துக் கொண்டோமோ அந்த நாடே எங்களைக் கைவிட்டுவிட்டது. உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன் - என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒருதலைபட்சமான இந்த முடிவு ஒட்டுமொத்தமாக இந்த துணைக் கண்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். பாருங்கள் இது பேரழிவாக இருக்கப் போகிறது. என்ன சொல்வதென உண்மையில் எனக்குத் தெரியவில்லை, நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

கேள்வி:370வது பிரிவை ரத்து செய்ததன் முழுமையான நோக்கம் என்ன? காஷ்மீர் பள்ளத்தாக்கில் என்ன செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்?

பதில்: இது வஞ்சகம் நிறைந்த திட்டம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. புவியியல் ரீதியில் மாற்றங்களைச் செய்ய அவர்கள் விரும்புவதாக நினைக்கிறேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி ஜம்மு காஷ்மீர். மத அடிப்படையில் பிரிவினை செய்யும் எண்ணத்தை நிராகரித்துள்ளது. இப்போது யூனியன் பிரதேசத்தை உருவாக்கியதன் மூலம், சமுதாய அடிப்படையில் இன்னொரு பிரிவினையை அவர்கள் செய்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தின் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, மற்ற மாநிலங்களைப் போல ஆக்கி, முஸ்லிம்களை சிறுபான்மையினராக மாற்றிவிடுவதற்கான முயற்சி இது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எங்களை முழுமையாக அதிகாரம் இழக்கச் செய்வதற்கான முயற்சி இது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரசின் முடிவினை அலகாபாத்தில் கொண்டாடும் பா.ஜ.கவினர்

கேள்வி: காஷ்மீர் மக்கள் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்? காஷ்மீர் மக்களின் எதிர்காலம் எப்படியானதாக இருக்கும்? காஷ்மீர் பள்ளத்தாக்கை வரையறுக்கும் விசேஷ அடையாளம் எப்படி இருக்கும்?

காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல் இது - எதற்கெல்லாம் காஷ்மீர் பிரபலமாக இருந்ததோ அவற்றின் மீதான தாக்குதல். காஷ்மீர் மக்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்? இந்தப் பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப் பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த பாதுகாப்புப் படையினருடன், பெருமளவில் வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். மறுப்பு தெரிவிப்பதற்கான உரிமையும் கூட எங்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. இதுவரை எங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து என்பது, ஏதோ பரிசாகக் கொடுக்கப்பட்டது கிடையாது. இதே அரசியல் சாசனத்தால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தால் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் அவை. அது எல்லாமே அரசியல்சாசனத்தின்படி அளிக்கப்பட்டவை. காஷ்மீரை அவர்கள் மேலும் தனிமைப்படுத்தி விட்டார்கள் என்று கருதுகிறேன். காஷ்மீரை காஜா பகுதியாக மாற்றுவதற்கான வஞ்சகமான திட்டம் இது. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் என்ன செய்ததோ அதை காஷ்மீர் விவகாரத்தில் இவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றி காணப் போவதில்லை. ஏனெனில் அமெரிக்காவைப் பாருங்கள். அவர்கள் வியட்நாமை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இந்த நாட்டுடன் ஒத்திசைவாக இருந்த, இந்த நாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களையும் அடக்குமுறைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். எனவே எதிர்காலம் ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமான நாட்டுக்கும், துணைக் கண்டத்துக்கும் மிக மோசமானதாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இது தனிமைப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தொலைநோக்கில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கான அடையாளமா இது?

இந்திய முஸ்லிம்களை மேலும் தனிமைப்படுத்துவதாக மட்டுமின்றி, அவர்களை அச்சுறுத்துவதாகவும் இது இருக்கப் போகிறது. இந்தியாவின் அனைத்து முஸ்லிம்களும் - அவர்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு மிஞ்சியிருக்கும் கண்ணியத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதற்கான எச்சரிக்கை இது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, கும்பலாக சேர்ந்து நடத்திய கொலைகள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியுமா? ஜம்மு காஷ்மீர் மட்டும் தான் ஒரே முஸ்லிம்கள் மாநிலம். ஜம்மு காஷ்மீரில் அவர்கள் தொடக்கத்தை செய்திருக்கிறார்கள். இந்திய முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கும் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்திலேயே, எதிர்கருத்து தெரிவிக்கும் உரிமை மறுக்கப்படும் நிலையில், மற்ற பகுதிகளில் என்ன நடக்கும் என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. அநேகமாக எங்களைவிட இந்திய முஸ்லிம்கள் அதிக அளவிற்கு கையறு நிலையில் உள்ளார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. முஸ்லிம்கள் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலம் வேறுபட்ட வரையறைகளுடன் இந்தியாவுடன் இணைந்தது. இப்போது அவையெல்லாம் மறுக்கப் படுகின்றன.

பாட்டிலில் அடைத்து வைத்திருந்த பூதம் வெளிப்படுவதைப் போன்றது இது. சில காலத்துக்குப் பிறகு அதை எப்படி மீண்டும் பாட்டிலில் அடைப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை அவர்கள் உணரப் போகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் எப்படி தோன்றியது என்று இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

அடிப்படையில் நிலப்பரப்பு மாற்றி அமைந்துள்ள இந்த நிலையில் உங்களுடைய, உங்கள் தலைமையின் பங்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மாநிலத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு எதிராக, நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த அமைப்புகளே எங்களுக்கு முழுமையாக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதுகிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு கூட இயலாத அளவுக்கு இது ஆரம்பகட்டமாக உள்ளது. இந்தப் பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ற வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும், மதத்தவர்களும், மற்றவர்களும் - எங்கள் மாநிலத்தில் உரிமைக்கு உரிய அனைவரும் - ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் வந்துவிட்டது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இது காஷ்மீர் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது கட்டாயம் என்ற நிலை வந்துவிட்டது. என்ன நடக்கிறது என்று சர்வதேச சமூகம் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ஏனெனில் அரசியல்சாசன உறவு என்பது, சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்பதாக மாறிவிட்டது. எனவே அதற்காகத்தான் இப்போது நாங்கள் போராடப் போகிறோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :