காஷ்மீரி இன அடையாளத்தை இழக்கிறோம்: சென்னையில் வாழும் காஷ்மீர் இளைஞர் வேதனை

ஷகிர் பயஸ்
Image caption ஷகிர் பயஸ்

''காஷ்மீரி என்ற இன அடையாளத்தை இழந்துவிட்டோம். எங்கள் கொடியை, எங்கள் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அடையாளத்தை, எங்கள் அரசியலமைப்பை இழந்துவிட்டோம். இந்தியர்களாக மாற்றப்படுகிறோம்.''

இந்திய சுதந்திரத்திற்கு பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அதிகாரத்தை பறித்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான மசோதா மாநிலங்களவையில் (5 ஆகஸ்ட் 2019) நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இந்த மசோதா தங்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட முடிவாக கருதும் காஷ்மீர் இளைஞர் ஷகிர் பயஸ்ஸின் சொற்கள் அவை. ஆய்வு படிப்பிற்காக சென்னையில் வசிக்கும் அவர், இந்த மசோதா குறித்து பேசமுன்வந்தார்.

மசோதா நிறைவேறிய பின்னர் நாம் அவரை சந்தித்தபோது ஒருவித படபடப்புடன் இருந்தார்.

''கடந்த இரண்டு நாட்களாக யாரிடமும் பேசமுடியவில்லை. எங்கள் ஊரில் என்ன நடக்கிறது என்பதை ஏன் வெளிப்படையாக பேசமுடியாது. தரைவழி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரங்கள் நடந்தபோது அலைபேசி சேவை, இணையம் முடக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தரைவழி தொலைபேசி வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துகிறது,''என்கிறார் ஷகிர் பயஸ்.

காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம், தீவிரவாதிகள் இருப்பதாக அரசியல்வாதிகள் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தார்கள் என்றும் காஷ்மீர் மக்கள் அமைதிக்காக ஏங்கிகொண்டிருந்தார்கள் என்றும் கூறுகிறார் ஷகிர் பயஸ்.

''ஒவ்வொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை விதைக்கப்படும். மோதி அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்த்தும் அதுதான். ஆனால் மக்களை இருட்டில் இருக்கவைத்து, அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, என்னவிதமான ஜனநாயக முறையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்று புரியவில்லை,''என்கிறார்.

''எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அதன் விலை எங்களின் சுயமரியாதையாக இருக்கக் கூடாது. பல என்கவுண்டர் மரணங்கள், எதிர்த் தாக்குதல், கண்ணீர்புகைகுண்டு வீசப்படுவது, கற்கள் வீசப்படுவது என பல சம்பவங்களை காஷ்மீர்வாசிகள் பார்த்துள்ளனர். ஆனால் எங்கள் தாய்மண்ணில் நாங்கள் காஷ்மீரியாகவே இருக்கவிரும்பினோம். எங்களை இந்தியர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்,''என பயஸ் கூறும்போது அவரது விழிகள் குளமாகின.

படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA

நிர்வாக மேம்பாடு, இந்திய தேசத்தின் அங்கமாக மாற இந்த புதிய ஏற்பாடு உதவிசெய்யும் என அரசியல்வாதிகள் கூறுவதை ஏன் ஏற்க மறுக்கிறார் பயஸ். அவர் பதில் சொல்ல யோசிக்கவில்லை.

''நான் காஷ்மீரி என்ற அடையாளத்தை விரும்புகிறேன். எங்கள் ஊரில் இந்திய கொடியை நாங்கள் அதிகம் பார்த்ததில்லை. எங்கள் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க மக்களிடம் கருத்து கேட்கவில்லை. இதனால் நாங்கள் எப்படி இந்தியர்களாக உணர்வோம்,''என கேள்வியை முன்வைக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சிறப்பு அந்தஸ்து போனதால் என்ன விளையும் என்ற பயம் அவரை துரத்துவதாக சொல்கிறார்.

''எங்கள் காஷ்மீர் அழாகான மாநிலமாக இருந்தது. இப்போது, சிறப்பு அந்தஸ்து இல்லை என்பதால், வணிகரீதியாக பல கடைகள், நிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் என்று தோன்றுகிறது. யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என விதிகள் மாறுவதால், எங்கள் மண்ணை நாங்கள் இழக்கும் நிலை ஏற்படும். மெல்ல மெல்ல காஷ்மீரி என்ற இனஅடையாளத்தை இழந்துவிடுவோம்,''என்கிறார் ஏக்கத்துடன்.

அவரது அலைபேசியில் புதிய செய்திகள் எதுவும் வரவில்லை. அதை எதிர்பார்த்தபடியே இருக்கிறார் பயஸ். ''நான் கடைசியாக தொடர்புகொண்டபோது, என் தம்பி மட்டும் வீட்டில் இருப்பதாக கூறினான். அம்மா,அப்பா ஹஜ் யாத்திரைக்கு சென்றுவிட்டார்கள். அதனால் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள் என்ற உணர்வு ஒருபக்கம் நிம்மதியை தந்தாலும், தம்பியிடம் பேசமுடியவில்லை. லடாக்கில் உள்ள ஒரு உறவினர் ஒருவரிடம் பேசமுடிந்தது. ஆனால் எங்கள் ஊரில் என்ன நிலைமை என்பதை நான் யாரிடமாவது பேசினால்தான், மனம் அமைதியடையும்,''என்கிறார்.

நாளை காஷ்மீர் செல்வதற்கான விமான டிக்கெட் அவரிடம் உள்ளது. ஆனால் தாம் செல்லமுடியுமா என்பது கேள்விக்குறி என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :