காஷ்மீர் பிரிவினை மசோதா: யாரும் நிலம் வாங்கலாம் என்ற மாற்றம் உடனடி விளைவை ஏற்படுத்துமா?

அமித் ஷா படத்தின் காப்புரிமை Hindustan Times

இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 370 வழங்கிய சிறப்புரிமையை அடிப்படையாகக் கொண்டே, 1947 இன் பிற்பகுதியில் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது காஷ்மீர். நேரு, அவரது அரசாங்கம் மற்றும் காஷ்மீரின் அரசியல் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கான முடிவாக அது அமைந்தது.

தற்போது ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, ஒருதலைபட்சமாக இந்த சிறப்புரிமையை நீக்கியுள்ளது. 1950களுக்கு பிறகு காஷ்மீரின் அரசியலமைப்பு நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் இது.

நடைமுறையில் பார்த்தால், இது பெரியது இல்லை என்பது போலத் தெரியும். உறுப்புரை 370ன் விதிகள் கடந்த சில தசாப்தங்களில் தளர்த்தப்பட்டுக் கொண்டேதான் வந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என்று தனி அரசமைப்பு மற்றும் தனிக் கொடி உள்ளது. இதைத் தவிர இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அங்கு பெரிய சுயாட்சி இல்லை.

உறுப்புரை 370-ல் இருக்கும் விதிப்படி, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் சொத்தோ நிலமோ வாங்க முடியாது. இதனை ரத்து செய்வதால், காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலை மாறலாம் என்ற அச்சம் எழலாம். ஆனால், உடனடியாக எந்த தாக்கமும் ஏற்படாது.

இந்த நடவடிக்கையின் அடையாள முக்கியத்துவம்தான் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பாஜக, பல தேர்தல் அறிக்கைகளில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. காஷ்மீர் இந்தியாவோடு ஒருங்கிணைந்து இருந்தால், அம்மாநிலம் வளர்ச்சி பெறும் என்று பாஜக கூறியது. மேலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் ஜம்மு காஷ்மீரை வேறு மாதிரி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாஜக கூறுகிறது.

கடந்த மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெற்றதால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்ற இந்து தேசியவாதிகளின் கோரிக்கையை அக்கட்சியால் நிறைவேற்ற முடிந்துள்ளது. இது அவர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.

ஆனால், இந்த முடிவை காஷ்மீரிகள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று அரசு கவலைப்பட்டதால்தான், அங்கு அவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கூடுதலாக காஷ்மீருக்கு படைகள் அனுப்பப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன, இணையம் மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டன, மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, ஜம்மு மற்றும் காஷ்மீரை தனி யூனியன் பிரதேசமாகவும், குறைந்த மக்கள் தொகை கொண்ட லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கிறது இந்திய அரசின் மசோதா. இந்த முடிவு ஜம்மு மற்றும் லடாக் மக்களிடையே ஆதரவைப் பெற்றாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்களை கோபமடைய வைக்கும்.

இந்தியாவின் மிகவும் பதற்றமுள்ள மற்றும் அரசாங்கத்தின் மீது திருப்தியற்ற மக்களைக் கொண்ட அப்பகுதி இந்த முடிவால் மேலும் மோசமாகலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :