காஷ்மீர் விவகாரம்: தமிழ்நாடு ஏன் உங்களுடன் இல்லை தெரியுமா? - டி. ஆர் பாலு எழுப்பிய கேள்விகள்

காஷ்மீர் விவகாரம்: தமிழ்நாடு ஏன் உங்களுடன் இல்லை தெரியுமா? - டி. ஆர் பாலு படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் மாநில சட்டமன்றத்திடம் கேட்காமல் எப்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரையில் நீங்கள் மாற்றம் கொண்டு வர முடியும்? என்று மக்களவையில் இன்று நடந்த விவாதத்தின் போது கேள்வி எழுப்பினார் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு.

"சட்டமன்றம் இப்போது அங்கு இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால், மக்களின் கருத்தை கேட்காமல் நீங்கள் இப்படி இந்த மாற்றத்தை கொண்டு வரலாம். அரசமைப்பின்படி இது சரியென நீங்கள் கூறலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் எண்ணம் இங்கு பிரதிபலிக்கவில்லை. சட்டமன்றம் இருந்தால் மட்டுமே மக்களின் எண்ணம் பிரதிபலிக்கும்" என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் டி.ஆர். பாலு.

மசோதாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன

"தற்போதைய நாடாளுமன்றம் தினமும் இரண்டு, மூன்று மசோதாக்களை நிறைவேற்றுகிறது. மசோதாக்களை உற்பத்தி செய்யும் அவையாக அது இருக்கிறது. மக்களவை தலைவரும் இன்முகத்துடன் எந்த விவாதமும் இல்லாமல் அனைத்துக்கும் ஒப்புதல் அளிக்கிறார். சரி நான் நேரடியாக கேட்கிறேன். இதன் மூலமாக நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? இந்த மசோதாவையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு முழு பெரும்பான்மை உள்ளது. எங்களுக்கு இல்லை. நாங்கள் ஒன்று எதிர்ப்பு தெரிவிப்போம் அல்லது வெளிநடப்பு செய்வோம். ஆனால், இதுவெல்லாம் எங்கு போய் முடியும்? இதன் முடிவானது என்ன?" என்று வினவினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் அவர், "வலிமை பொருந்திய சட்டமன்றத்தை முனிசிபாலிட்டியாக மாற்றுகிறீர்கள். ஒரு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு இரண்டு முனிசிபாலிட்டியாக மாற்றுகிறீர்கள். ஆளுநர் ஆட்சி நடைபெறும் போது, அந்த மக்களின் எண்ணம் பிரதிபலிக்காத போது, அந்த மக்களைப் பற்றி யார் கவலைப்படுவர்?" என்று கேட்டார்.

உங்களது இந்த நடவடிக்கையால் எதுவும் மாறப் போவதில்லை. நிலைமை மேலும் சிக்கலாகப் போகிறது என்று குறிப்பிட்டார் டி.ஆர்.பாலு.

மக்களின் எண்ணம்

மீண்டும் சொல்கிறேன் சட்டப்பேரவை மட்டும்தான் அந்த மாநில மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும். இந்த நாடாளுமன்றம் அல்ல. அங்கு சட்டப்பேரவை இல்லாத சமயத்தில் உங்களால் நிர்வாக ரீதியாக செயல்பட முடியுமே தவிர, மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாது என்ற பாலு, "மக்களின் எண்ணத்தை நீங்கள் பிரதிபலிக்கவில்லை. உங்கள் கட்சியின் எண்ணத்தை மட்டுமே செயல்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்" என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA

மக்களிடம் கருத்தை கேட்டு ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்திதான் நீங்கள் இதனை செய்திருக்க வேண்டும். உங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

"உங்களால் இப்படி தென் மாநிலங்களில் செயல்பட முடியாது. தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ நீங்கள் இவ்வாறாக செயல்பட முடியாது. தமிழ்நாடும், கேரளாவும் உங்களுடன் இல்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :