கருணாநிதி நினைவு நாள்: தொண்டர்களின் முழக்கத்திற்கு பதிலில்லாத நாள் - ஆகஸ்ட் 7, 2018

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

சுமார் ஒன்றரை ஆண்டு காலம் உடல்நலம் குன்றியிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மரணத்திற்கு முந்தைய சில தினங்களில் என்ன நடந்தது?

2018 ஆகஸ்ட் 7ஆம் தேதியைவிட, தி.மு.க. தொண்டர்களால் மறக்க முடியாத ஒரு நாள் 2018 ஜூலை 30ஆம் தேதி.

மாலை ஆறு மணி. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் உடல்நலம் குறித்து மோசமான தகவல்கள் பரவ ஆரம்பித்தன. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே மிக வேகமாக தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். மாலை 7.30 மணியளவில் மருத்துவமனையின் வாயில் பகுதி முழுவதும் தி.மு.க. தொண்டர்களின் தலை மட்டுமே தென்பட்டது.

கருணாநிதியின் உடல்நலம் மோசமடைந்தது என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பிக்க, மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழத் துவங்கின. "எழுந்து வா.. எழுந்து வா.. எங்கள் தலைவா எழுந்து வா..", "எழுந்து வா.. எழுந்து வா.. அண்ணாவின் தம்பியே எழுந்து வா.." என்ற கோஷங்களை மாறிமாறி தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தனர்.

அதே நேரத்தில் மழையும் பெய்ய ஆரம்பித்தது. அந்த மழையில் நின்றபடி, பல தொண்டர்கள் அழுதபடி இந்த கோஷங்களை எழுப்பிக்கொண்டேயிருந்தனர். இந்த நிலையில் இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் கருணாநிதியின் உடல்நலம் பின்னடைவைச் சந்தித்தது உண்மை தான் என்றாலும் தற்போது மருந்துகளின் உதவியால் அவரது உடல்நலம் மேம்பட்டுவருவதாக கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகே, தொண்டர்கள் தங்கள் கோஷங்களைக் குறைத்தனர். பல தொண்டர்கள் தங்களுடைய 'எழுந்து வா' கோஷத்தினாலேயே தி.மு.க. தலைவர் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டதாக நம்பினர்.

இது அன்றைக்கு மாலையில் நடந்த சம்பவம் மட்டுமல்ல, ஜூலை 27ஆம் தேதி கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அங்கு குவிந்திருந்த தொண்டர்கள், ஒவ்வொரு இரவும் இதுபோல தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதிவரையிலான அடுத்த பதினொரு நாட்கள், காவிரி மருத்துவமனையே தமிழகச் செய்திகளின் மையப் புள்ளியாக இருந்தது. தொண்டர்களைப் போலவே, ஊடகத்தினரும் அடுத்த பதினொரு நாட்களுக்கு அங்கேயே உண்டு, உறங்கினர்.

ஒரு சூரிய அஸ்தமனத்தின் துவக்கம்

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே கருணாநிதி உடல்நலம் குன்ற ஆரம்பித்தார். அந்த மாதம் 26ஆம் தேதி கருணாநிதிக்கு மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு அவரது உடல்நலம் மேலும் குன்ற, டிசம்பர் 1ஆம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துமனையில் இருந்த நாட்களில்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவும் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதற்குப் பிறகு டிசம்பர் 7ஆம் தேதி வீடு திரும்பிய கருணாநிதி, மூச்சுத் திணறல் காரணமாக 15ஆம் தேதி இரவில் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டது. இதற்குப் பிறகு வீட்டிலேயே ஓய்வெடுத்தும், சிகிச்சை பெற்றும்வந்தார் கருணாநிதி.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதியிலிருந்தே கருணாநிதியில் உடல்நலத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்தன. 27ஆம் தேதி நள்ளிரவில் அவர் மீண்டும் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மரணத்தை நோக்கிய பயணம்

அவரது உடல்நிலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்கள் இருந்த நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர் பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தது. அன்றைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவர் கருணாநிதியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

ஆகஸ்ட் ஆறாம் தேதியன்றும் கருணாநிதியின் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அன்று மாலை ஆறரை மணியளவில் காவிரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. "தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பின் காரணமாக, அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை தக்கவைப்பது சவாலாக இருக்கிறது.

அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே ஏதும் கூற முடியும்" என அந்த அறிக்கை தெரிவித்தது.

இதற்கு முந்தைய அறிக்கைகளில் இருந்த நம்பிக்கையூட்டும் தொனி, இந்த மருத்துவ அறிக்கையில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் சென்னையை நோக்கி வர ஆரம்பித்தனர்.

ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று காலையில் இருந்தே காவேரி மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். பிற்பகலில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

மாலை ஐந்து மணியளவில் மருத்துவனை வெளியிட்ட அறிக்கையில், மு. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதும் மருத்துவமனை முன்பாகக் கூடியிருந்த தொண்டர்கள் கதறி ஆழ ஆரம்பித்தனர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே முழங்கிவரும், "எழுந்து வா தலைவா.. எழுந்து வா" என்று கோஷத்தை மீண்டும் தொடர்ச்சியாக முழங்க ஆரம்பித்தனர்.

இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, மு. கருணாநிதியின் மகள் செல்வி, மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஆகியோர் மருத்துவமனையைவிட்டு வெளியேறி, கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றனர்.

மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

4 மணி அளவிலேயே தனியார் அலுவலகங்கள் மூடப்பட ஆரம்பித்ததால், அனைவரும் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முயன்றதில் சென்னையின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஐந்தரை மணிக்குப் பிறகு கருணாநிதியின் இதயத் துடிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. 6.10 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மு. கருணாநிதி மரணமடைந்தது குறித்த அறிவிப்பை சுமார் ஆறு நாற்பது மணியளவில் காவிரி மருத்துவமனை வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில், "07.08.2018 மாலை 6.10 மணியளவில் நம் நேசத்திற்குரிய டாக்டர் எம். கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். எங்களது மருத்துவக் குழுவினரும் செவிலியரும் அவரை உயிர்ப்பிக்க முயன்றும், அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான அவரது மறைவு குறித்து வருந்துகிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள், அவரது குடும்பத்தினரின் சோகத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.

மருத்துவமனை வாயிலில் கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் கதறியழ ஆரம்பித்தனர். ஆனால், மறைந்த தலைவரின் உடலை எங்கு நல்லடக்கம் செய்வது என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து சலசலப்பு நீடித்தபடியே இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயல் கிரிஜா வைத்தியநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, சென்னை சர்தார் படேல் சாலையில் காமராஜர் நினைவிடத்திற்கு அருகே இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. தி.மு.கவின் சார்பில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே இடம் ஒதுக்கக்கோரப்பட்டிருந்தாலும், சட்டச் சிக்கல்களின் காரணமாக அங்கே இடம் ஒதுக்க முடியவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி பரவியதும் இரவு எட்டு மணியளவில் காவேரி மருத்துவமனை முன்பாகக் குவிந்திருந்த தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.

அதற்கடுத்து, காவிரி மருத்துவமனை முன்பாக வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளைத் தூக்கியெறிந்தும் அடுத்து நொறுக்கியும் தங்கள் எதிர்ப்பைக் காண்பித்தனர். இதையடுத்து காவல்துறை தடியடியில் இறங்கியது.

இதற்கு சில நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் மூலம், மு. கருணாநிதியின் உடல் மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியதால் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

இரவு பதினொரு மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் மு. கருணாநிதியின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அதே நேரத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலை தயார் செய்யும் பணிகள் துவங்கின. தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அதிகாலை ஒரு மணிவரை கோபாலபுரம் இல்லத்திலிருந்த அவரது உடல், பிறகு சி.ஐ.டி. காலனி இல்லத்தில் சென்று வைக்கப்பட்டது. அங்கிருந்து அதிகாலை மூன்று மணியளவில் ராஜாஜி ஹாலுக்குப் புறப்பட்டது. காலை நான்கு மணியளவிலிருந்து தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மு. கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தி.மு.கவின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி வெளியானதும், ராஜாஜி ஹாலின் முன்பாக கூடியிருந்த தொண்டர்கள் கதறலுடன் கோஷங்களை எழுப்பினர்.

மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கதறியழுதனர். இதற்குப் பிறகு, மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் நினைவிடத்திற்குப் பின்னால், ஒரு இடம் குறிக்கப்பட்டு, கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டன.

ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை. ராஜாஜி ஹாலிலிருந்து மு. கருணாநிதியின் பூதவுடலை ஏற்றிய வாகனம் வாலாஜா சாலை வழியாக அண்ணா நினைவிடத்தை வந்து அடைந்தது. அங்கு அவரது குடும்பத்தினர், முக்கியத் தலைவர்கள் கூடியிருக்க அரசு மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கின.

அவரது உடலைப் போர்த்தியிருந்த தேசியக் கொடி மடிக்கப்பட்டு, மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சந்தனைப் பேழைக்கு மாற்றப்பட்டது.

ராணுவ வீரர்கள் 21 குண்டுகளை முழக்கிய பிறகு, அந்த சந்தனப் பேழை இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :