கருணாநிதியின் கூட்டாட்சி தத்துவ வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்து பேராட வேண்டும்” - மம்தா

ஸ்டாலின் மம்தா பேனர்ஜி. படத்தின் காப்புரிமை DMK

கருணாநிதி மறைந்தாலும் நமது இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வழியில் நின்று சர்வாதிகாரத்தை நாம் எதிர்த்து பேராட வேண்டுமென மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அழைப்புவிடுத்துள்ளார்.

மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் முதலாண்டு நினைவு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர் இவ்வாறு பேசினார்.

முன்னதாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலையை மம்தா பேனர்ஜி திறந்துவைத்தார். கருணாநிதி அமர்ந்த நிலையில், கையில் அட்டையை வைத்து எழுதுவதைப்போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டவர்கள் பெயரில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் அங்குள்ள சூழலின் காரணமாக அவர் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

ஐந்து நிமிடங்களில் இந்த விழா நிறைவடைந்த பிறகு, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மம்தா பேனர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

இதற்குப் பிறகு, ராயப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பேனர்ஜி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சினிமா பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுவையில் கருணாநிதிக்கு வெண்கலத்தில் சிலை அமைக்கப்படுமெனத் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழகத்தில் கருணாநிதியின் பெயரில் இருக்கை ஒன்று உருவாக்கப்படுமென்றும் கூறினார்.

இதற்குப் பிறகு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, தனது பேச்சை தமிழில் துவங்கி சிறிது நேரம் பேசினார். அதனை அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். இதற்குப் பிறகு, அவர் தன் பேச்சை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

"கருணாநிதி கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தார். நாம் இந்தியர்கள். ஆனால், அனைவரும் தனியுரிமை கொண்டுள்ளோம். நமக்கென தாய்மொழி உள்ளது" என்று கூறிய மம்தா பேனர்ஜி, இங்கு இருக்க வேண்டிய ஃபரூக் அப்துல்லா, இங்கே வர முடியாத சூழல் குறித்தும் பேசினார்.

"தமிழகத்தைப் பற்றியோ, மேற்கு வங்கத்தைப் பற்றியோ முடிவெடுக்க வேண்டுமானால், அந்த மாநில மக்களிடம் கேட்க வேண்டும். ஆனால், அப்படி கேட்காமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்று மம்தா குறிப்பிட்டார்.

தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி என்றும் எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தவர் என்றும் அவரது வழியில் நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்றும் பேசி முடித்த மம்தா பேனர்ஜி, ஜெய் பங்ளா, ஜெய் தமிழ்நாடு என்று கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.

"தேசபக்தி பாடத்தை தி.மு.கவுக்கு யாரும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை"

இதற்குப் பிறகு பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "இப்போது அறிவாலயம், முரசொலி அலுவலகம், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதியின் சிலையை அமைத்திருக்கிறோம். விரைவிலேயே தமிழ்நாட்டின் பல ஊர்களில் கலைஞர் சிலை திறக்கப்படும்" என்று கூறினார்.

மேலும், மாநில சுயாட்சி குறித்து கருணாநிதி அமைத்த ராஜமன்னார் ஆணையத்தை சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின், மாநில உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டிரு்பபதாகத் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த மாநிலத்திற்கென சட்டமன்றம் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, அவர்களது ஒப்புதலோடுதான் முடிவுகளை எடுக்க வேண்டுமென குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், தங்களது தேசபக்தி குறித்து கேள்வி எழுப்பப்படுவது குறித்து பதிலளித்தார்.

படத்தின் காப்புரிமை DMK
Image caption சிலை திறந்த மம்தா.

"பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் யுத்தம் ஏற்பட்டபோது, இந்த தேசத்தோடு நின்றவர்கள் நாங்கள். எங்களுக்கு யாரும் தேசபக்தி குறித்து பாடம் எடுக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் மு. கருணாநிதி குறித்த நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :