சோனியா காந்தியுடன் மோத கன்னடம் கற்றுக்கொண்ட சுஷ்மா ஸ்வராஜ்

சோனியா காந்தியுடனான பனிப்போரில் சுஷ்மா ஸ்வராஜ் வெற்றிபெற்றது எப்படி? படத்தின் காப்புரிமை Getty Images

வெளிநாட்டில் பிறந்தவரும், இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியை அரசியல் களத்தில் எதிர்த்த விதத்திற்காக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்த முன்னாள் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்றும் இந்திய அரசியல் வரலாற்றில் அறியப்படுவார்.

இத்தாலியில் பிறந்து, இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியை எதிர்த்து, கர்நாடகத்தின் பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிட்டார். அதாவது, சோனியா மற்றும் சுஷ்மாவுக்கு இடையிலான இந்த போட்டி 'உள்நாடு Vs வெளிநாடு' என்ற அளவுக்கு வர்ணிக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த சோனியா காந்தி, கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

அதையறிந்த சுஷ்மா, வாஜ்பேயியின் ஒப்புதலை பெற்று மறுநாளே வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதுதான் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாளும்கூட.

படத்தின் காப்புரிமை Getty Images

"வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சிறிது நேரமே இருந்ததால், பெங்களுருவின் புறநகர் பகுதியிலிருந்து பெல்லாரிக்கு சுஷ்மா ஹெலிகாப்டரில் சென்றார். அவருக்கு தேவையான சில ஆவணங்களை நான் எடுத்துச் சென்றேன்," என்று பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீதர் பிபிசியிடம் கூறினார்.

காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் பெல்லாரி தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் எப்போதுமே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது வழக்கம். ஆனால், அதை சிறிதும் கண்டுகொள்ளாத சுஷ்மா, பெல்லாரியில் கால் பதித்த நாள்முதல், பலரும் ஆச்சர்யப்படும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

எனினும், அந்த தேர்தலில் 56,100 வாக்குகள் வித்தியாசத்தில் சுஷ்மா தோல்வியை தழுவினார். "நான் சண்டையில் தோற்றுவிட்டேன்; ஆனால் போரில் வென்றுவிட்டேன்" என்று கூறிய சுஷ்மா, சோனியாவுக்கு எதிரான போரை அதற்கு பின்னரும் கூட நிறுத்தவேயில்லை.

"நாம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டின் உட்சபட்ச அதிகாரம் படைத்த பதவிக்கு (பிரதமர்) வெளிநாட்டவர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை பார்க்கிறோம். இதன் மூலம், நாட்டிலுள்ள 100 கோடி மக்களால் ஒரு இந்தியரைத் தேர்தெடுக்க முடியவில்லை என்றே பொருள்படுகிறது. இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடும்," என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை T.C. MALHOTRA

2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டதை மறுத்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார். இதன் மூலம், தன்னுடனான போட்டியிலிருந்து சோனியாவே வெளியேறினார் என்றார் சுஷ்மா.

எனினும், கர்நாடகாவுடனான தனது தொடர்பை விட்டுவிடாத சுஷ்மா, கன்னட மொழியை கற்றுக்கொண்டு அனைவரையும் வியக்க வைத்தார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, பாஜகவின் மூத்த தலைவரும், பெல்லாரி தொகுதியில் சுஷ்மாவுக்கு வேட்புமனுத்தாக்கலின்போது முன்மொழிந்தவருமான ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, "ஒரே வாரத்தில் சுஷ்மா கன்னட மொழியை கற்றுக்கொண்டு விட்டார். ஒவ்வொரு நாளும் பிரசாரத்தை முடிந்த பின்பு, சுமார் 45 நிமிடங்கள் அவர் கன்னட மொழியை கற்றுக்கொண்டார். அதன் பிறகு, அவர் எனது குடும்பத்தினருடன் ஆங்கிலத்தில் உரையாடவே இல்லை; அந்தளவுக்கு கன்னடத்தில் புலமை பெற்றுவிட்டார்" என்று அவர் கூறுகிறார்.

ஆரம்ப காலத்தில் தனது உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் கன்னடத்தில் பேசிய அவர், ஒருமுறை பிரசாரத்திற்காக வாஜ்பேயி வந்த பொதுக்கூட்டத்தில் 20 நிமிடம் முழுவதும் கன்னடத்திலேயே பேசி அசத்திவிட்டார். அவரது உரையை கேட்பதற்காகவே பலர் பொதுக்கூட்டத்துக்கு வரத் தொடங்கினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெல்லாரியில் பிரசாரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே, பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட சுஷ்மா, தான் கன்னடம்/ இந்தி/ ஆங்கிலம் ஆகிய எந்த மொழியில் உரையாட வேண்டுமென்று கேட்டு அனைவரையும் வியக்க வைத்ததுண்டு.

"பிரசாரத்திற்காக பெல்லாரியில் சுஷ்மா தங்கியிருந்தபோது, ஒருநாள் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது நான் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்றபோது, என்னிடம் இயல்பாக பேசியதுடன், எனது தொழில், குடும்பத்தினர் குறித்தும் அவர் விசாரித்தார். பிறகு, எனது இல்லத்திலேயே ஏனைய நாட்கள் தங்க விரும்புவதாக சுஷ்மா கூறியதை நான் உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்," என்று மருத்துவர் மூர்த்தி கூறுகிறார்.

சுமார் 18 நாட்கள் மருத்துவர் மூர்த்தியின் இல்லத்தில் தங்கிய சுஷ்மா, பிரசாரத்தில் ஈடுபட்டு, ஓய்வு நேரத்தில் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டதுடன், அதன் பிறகு வந்த ஒவ்வொரு வரமஹாலக்ஷ்மி தின வழிபாட்டுக்கு எங்களது வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆண்டுதோறும் கர்நாடகாவுக்கு வரும் சுஷ்மா, முதலில் பெங்களுருவில் தரையிறங்கியவுடன், மறைந்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் இல்லத்திற்கு சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு, பெல்லாரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பெல்லாரியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சுஷ்மாவுக்கு அறிமுகமாகி, அதன் மூலம் தொழிலில் வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ரெட்டி சகோதரர்கள் மீதான சுரங்க முறைகேடு நிரூபிக்கப்பட்டு ஜனார்த்தன ரெட்டி சிறைக்கு சென்றது சுஷ்மாவுக்கு பின்னடைவை அளித்தது.

1999 முதல் 2012ஆம் ஆண்டு வரை பெல்லாரிக்கு ஆண்டுதோறும் வருவதை வழக்கமாக கொண்டிருந்த சுஷ்மா, இந்த சம்பவத்திற்கு பின்பு, பெல்லாரிக்கு திரும்ப வரவேயில்லை. "இந்தாண்டு வரமஹாலக்ஷ்மி வழிபாட்டுக்காவது வர முடியுமா என்று சென்ற வாரம்தான் நான் அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால், அவர் இந்த முறை இயலாது என்று கூறிவிட்டார்," என்று மருத்துவ மூர்த்தி கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :