காஷ்மீர் முடக்கம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

காஷ்மீர் படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் சட்ட உறுப்புரை 370இன் உட்பிரிவுகள் நீக்கம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டபின், அங்கு முன்னறிவிப்பின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இணையதள சேவைகள், போக்குவரத்து ஆகியவை முடக்கப்பட்டுள்ளது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் சட்டவிரோதத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெஹ்சீன் பூனாவாலா என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது. உரிய அமர்விடம் இந்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

எனவே இந்த வழக்கு தலைமை நீதிபதியை உள்ளடக்கிய அமர்வால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிவினைவாத தலைவர்களை கைது செய்வது நியாயமானது என்றாலும், இந்திய ஒன்றியத்துடன் ஜம்மு - காஷ்மீரை இணைக்கப் பங்காற்றிய அரசியல் தலைவர்களையும் கைது செய்வது கேள்விக்குரியது என அந்த மனு தெரிவிக்கிறது.

நீதி விசாரணைக்கு குழு ஒன்று அமைக்கப்பட்டு, காஷ்மீரின் கள நிலவரம் குறித்த அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அம்மனு கோருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஊரடங்கு, இணையதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் முடக்கம் ஆகியன இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை) மற்றும் பிரிவு 21 (வாழ்தல் மற்றும் தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமை) ஆகியவை முடக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு நிகரானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973இன் பிரிவு 144 மூலம் அங்கு அமலாகியுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அங்கு அவசர நிலை போன்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதார சேவைகள், வங்கி வசதி, உணவு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாமல் அங்குள்ள மக்கள் இருப்பதாக அந்த மனு தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: