நலமான பொருளாதாரத்தை சுட்டும் 5 அம்சங்கள் - இந்தியாவின் நிலை என்ன?

நலமான பொருளாதாரத்தை சுட்டுகின்ற ஐந்து அம்சங்கள் படத்தின் காப்புரிமை Construction Photography/Avalon/getty Images

2024-25ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ஐந்து ட்ரில்லியன் டாலர் ஆகவேண்டும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோதி நிர்ணயித்துள்ளார்.

தற்போது இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 2.7 ட்ரில்லியன் டாலராகும்.

நரேந்திர மோதி நிர்ணயித்துள்ள பொருளாதார இலக்கை அடைய வேண்டுமென்றால், ஒவ்வோர் ஆண்டும் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) எட்டு சதவீதமாக இருக்க வேண்டும்.

ஆனால், இந்த இலக்கிற்கு நேர்மாறாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பல துறைகள், பல ஆண்டுகள் காணாத சரிவை கண்டு வருகின்றன.

ஒரு நாட்டின் நல்ல பொருளாதார நிலையை சுட்டுகின்ற ஐந்து அம்சங்கள் இதோ:

ஜிடிபி வளர்ச்சி

படத்தின் காப்புரிமை Gideon Mendel/Getty Images

2016-17 முதல் 2018-19 வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி விகிதம் முறையே 8.2%, 7.2%, 6.8% என சரிவடைந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

8.2% முதல் 6.8% வரையான வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி சுமார் 1.5% புள்ளிகள். மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி மிகவும் கணிசமான சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிடிபி வளர்ச்சியில் வீழ்ச்சி காண்பதன் மூலம், மக்களின் வருமானம், வாங்கும் திறன், சேமிப்புகள், முதலீடுகள் என அனைத்தும் பாதிக்கப்படும். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் பணியிடக் குறைப்பால் வேலை நீக்கம் செய்யப்படுவது அறிவிக்கப்படுகின்றது.

பொருளாதார வீழ்ச்சியை போக்குகின்ற எந்தவொரு பெரிய நடவடிக்கைகளையும் இந்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

வாங்கும் திறன்

மக்களின் வருமானம் குறைந்துள்ளதால், பொருட்களை வாங்கும் திறனும் குறைத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விற்பனை வளர்ச்சியில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலைவர ஆய்வு நிறுவனமான நீல்சன் தெரிவித்திருக்கிறது. 2019ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 9.9% என இருந்த விற்பனை வளர்ச்சி, ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாவது காலாண்டில் 6.2% என குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/Getty Images

வாகன தொழிற்துறை மிக பெரிய சரிவை சந்தித்து வருவதன் விளைவாக, அதிக பணிக் குறைப்புகள் நடைபெறுகின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் எல்லா வாகனங்களின் விற்பனையும் 12.36% குறைந்தன. மொத்தம் 60,85,406 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன என்று இந்திய வாகன தயாரிப்பு சொசைட்டி தகவல் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் மொத்தம் 69,42,742 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன.

கடந்த ஓராண்டாக வாகன விற்பனை மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி, ஜூலை மாதம் மட்டுமே ஆண்டு விற்பனை விகிதத்தில் 36% வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க, இந்த நிறுவனங்கள் பணி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வாகன தயாரிப்பு தொழில்துறை இந்தியா முழுவதும் 2 லட்சம் பணியிடங்களை குறைத்துள்ளதாக இந்திய வாகன டீலர் கூட்டமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

கடந்த ஏப்ரல் வரை ஒன்றரை ஆண்டில் மட்டும் நடைபெற்ற இந்த பணி குறைப்பு நடவடிக்கைகளில் இந்தியா முழுவதுமுள்ள 271 நகரங்களில் 286 வாகன விற்பனை கடைகளை மூடியபோது மட்டும் 32 ஆயிரம் தொழிலாளாகள் பணியிழந்தனர்.

இந்தியாவில் 15 ஆயிரம் டீலர்களால் இயக்கப்படும் சுமார் 26 ஆயிரம் வாகன விற்பனை கடைகள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 25 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். மேலும் 25 லட்சம் பேர் மறைமுகமாக இந்த டீலர்ஷிப் அமைப்பில் வேலைகளை பெறுகின்றனர்.

வாகன தயாரிப்பு துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் வாகன தயாரிப்பை குறைத்துள்ளன.

படத்தின் காப்புரிமை Koichi Kamoshida/Getty Images

ஜாம்ஷெட்பூரிலும், அதன் அருகிலுமாக சுமார் 30 ஸ்டீல் தொழில்துறை நிறுவனங்கள் மூடப்படும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு டஜன் டாட்டா நிறுவன தயாரிப்பு நிலையங்கள் கடந்த இரு மாதங்களாக, மாதத்திற்கு 15 நாட்களே இயங்கி வருகின்றன.

சேமிப்புகளும், முதலீடுகளும்

பொருளாதார பிரச்சனையால் மிகவும் அவதிப்படும் இன்னொரு துறை ரியல் எஸ்டேட் துறையாகும்.

இந்தியாவில் முன்னிலை வகிக்கும் 30 நகரங்களில் சுமார் 12 லட்சத்து 76 ஆயிரம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளதாக இந்தத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு விற்கப்படாமல் இருக்கும் வீடுகளை விற்பதற்கு கொச்சியில் 80 மாதங்கள், ஜெய்பூரில் 59 மாதங்கள், லக்னோவில் 55 மாதங்கள், சென்னையில் 72 மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது விற்கப்படாத வீடுகளை இந்த நகரங்களில் விற்று முடிக்க ஐந்து முதல் ஏழு அண்டுகள் வரை ஆகலாம் என்று பொருள்படுகிறது.

வருமானத்தில் வளர்ச்சி குறைவு, விற்கப்படாத உடைமைகளாக சேமிப்புகள் இருத்தல் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் மக்களின் சேமிப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

2011-12ம் ஆண்டு இருந்த ஜிடிபியில் 34.6% சேமிப்பு என்கிற உச்சநிலை, 2018-19ம் ஆண்டு 30% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Construction Photography/Avalon/Getty Images

வங்கிகளில் மக்களால் வைக்கப்படும் வைப்புத்தொகைகளை சேர்த்துதான் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. எனவே, சேமிப்புகள் பாதிக்கப்படும்போது, வங்கி வழங்கும் கடன்களும் பாதிக்கப்படும். நிறுவனங்கள் வளரவும், புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் வங்கிக் கடன்கள் மிகவும் முக்கியமாகும்.

வங்கிகள் வழங்குகின்ற கடன்களின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது மாதமாக மே மாதம் 12.5% என குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் வரை இருந்த 13% என்பதில் இருந்து இது குறைவாகும்.

சேவைத் துறை மற்றும் தொழிற் துறைகளுக்கு வங்கிகள் வழங்குகின்ற கடனின் வளர்ச்சியில் பெரும் சரிவு காணப்படுகிறது. சேவைத் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட 16.8%-தை ஒப்பிடும்போது மே மாதம் குறைவாக 14.8%தான் வழங்கப்பட்டுள்ளது,

ஏற்றுமதி

இந்தியாவில் தேவை குறைவாக இருக்கின்றபோது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்ய தொழிற்துறைகள் விரும்பும்.

இதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன. நாட்டின் ஜிடிபி-யின் வளர்ச்சிக்கு ஏற்றுமதியின் பங்களிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்மறையாகவே உள்ளது.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி ஜூன் மாதம் -9.7% என இருந்தது. மே மாத வளர்ச்சியான 3.9%-யோடு இதனை ஒப்பிடும்போது, கடந்த 41 மாதங்களில் இது மிக குறைந்த வளர்ச்சியாகும்.

வெளிநாட்டு முதலீடுகள்

பொருளாதாரம் பற்றிய கவலைகள் வெளிநாட்டு முதலீடுகளை பாதித்தன.

கடந்த ஏப்ரல் மாதம் 7.3 பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு, மே மாதம் 5.1 பில்லியனாக குறைந்தது.

ஜூன் 11ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தற்காலிக தரவுகள், பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தைகளில் செய்யப்படும் ஒட்டுமொத்த அந்நிய முதலீடு ஏப்ரல் மாதம் இருந்த மூன்று பில்லியன் டாலர் என்பதில் இருந்து மே மாதம் 2.8 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

நரேந்திர மோதியின் பொருளாதார இலக்கில் என்ன தவறு?

முதலீடுகள் குறைதல், உற்பத்தி குறைதல், கிராமப்புறங்களில் சிக்கல்கள், ஒழுங்கற்ற வருமானங்கள், ஏற்றுமதியில் மந்தம், வங்கி மற்றும் நிதி துறைகளில் குழப்பம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் தள்ளாடி கொண்டிருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களின் குறியீடுகள் மற்றும் கார் தயாரிப்பில் செய்யப்படும் தொடர் குறைப்புகள், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதை உறுதி செய்கின்றன.

படத்தின் காப்புரிமை Mario Tama/Getty Images

நரேந்திர மோதி மற்றும் மன்மோகன் சிங் உள்பட அவருக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், பல ஆண்டுகளாக சீர்திருத்தம் செய்யாமல் போனதன் உச்சக்கட்ட விளைவுகள்தான் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பாலான பிரச்சனைகள்.

2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின்னர், 2014ம் ஆண்டு நரேந்திர மோதி பதவியேற்ற பின்னர், ஜிடிபி வளர்ச்சி மந்தநிலையிலிருந்து படிப்படியாக மீட்சி பெறுவதாக தெரிந்தது.

ஆனால், இந்த மீட்சி தொடர்ந்து இல்லாமல் போனதால், மீண்டும் மந்தநிலை தோன்றியது.

பொருளாதார மந்தநிலையை இப்போது வெளிப்படுத்துவது, அதிர்ச்சியின் விளைவாக வருவதல்ல.

2008 முதல் 2011ம் ஆண்டு வரை ஏற்பட்ட குழப்பங்களை போல அல்லாமல், சர்வதேச எண்ணெய் விலை அல்லது கடன்களை செலுத்துவதில் திடீரென மோசமான நிலை எதுவும் தோன்றவில்லை.

விலைவாசி, தயாரிப்பு பொருட்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கைகள், தொழிலாளர் கொள்கைகள், நிலப்பயன்பாடு கொள்கைகள் ஆகியவற்றில் அடுத்தடுத்து வந்த அரசுகளின் கொள்கை முடிவுகளின் விளைவால்தான் இத்தகைய முடிவுகள் வந்துள்ளன.

சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன்தொகை சென்றடையும் வகையில் வங்கித்துறை சீரமைக்கப்படவேண்டும்.

தொடக்கத்தில் நன்றாகவே தொடங்கிய நரேந்திர மோதியின் அரசு விரைவில் திசை மாறியது. அமைப்பு ரீதியிலான மாற்றத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்த்த திட்டங்கள் 2015ம் ஆண்டு முடிவில் கைவிடப்பட்டன.

பண மதிப்பிழப்பு மற்றும் மிக மோசமாக திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி வரி அமலாக்கம் போன்ற அரைகுறையான சீர்திருத்தங்கள் போன்றவை மோசமான வழிகளுக்கு இட்டுச்சென்றன.

நிதி அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள் அனுப்பியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்டபோதே ஏற்பட்ட நிதித்துறை சிக்கல்களுக்கு பெரிய அளவில் கவனம் அளிக்கப்படவில்லை.

பொருளாதாரத்தின் அமைப்பு ரீதியிலான பிரச்சனைகளுக்கு மிக சிறப்பாக உருவாக்கப்பட்ட பொருளாதார தீர்வுகள் அவசியம்.

ஆனால், தகுதியான பொருளாதார வல்லுநர்கள் மோதி அரசிலிருந்து வெளியேறுவதை பார்த்தால், இத்தகைய தீர்வுகள் வெகுதொலைவில் இருப்பதாகதான் தென்படுகின்றன.

இல கட்நாயக், ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், அரவிந்த பனாகாரியா, அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் விரால் அச்சாரியா போன்ற தகுதியான பொருளாதார வல்லுநர்கள் மோதியின் அரசிலிருந்து வெளியேறியுள்ளதை பார்த்திருக்கிறோம்.

இந்திய பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்ற பிரச்சனைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு உதவ, நிதித்துறையில் முனைவர் பட்டம் வென்ற குடிமை பணி அதிகாரி ஒருவர் கூட இல்லாமல் இருப்பது பல தசாப்பதங்களில் இதுவே முதல்முறையாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: