வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி - வாக்கு விவரங்கள்

மு.க.ஸ்டாலின் - கதிர் ஆனந்த் படத்தின் காப்புரிமை M.K.Stalin/Facebook
Image caption கதிர் ஆனந்த் - மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பின்பு தனியாக வாக்குப்பதிவு நடந்த வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இறுதிச் சுற்று எண்ணி முடிக்கப்பட்டு, விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு கதிர் ஆனந்தின் வெற்றி அறிவிக்கப்பட்டது.

"விதிவிலக்கான, இணையில்லாத வெற்றி" - மு.க.ஸ்டாலின்

வெற்றி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

பொதுத்தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை, திட்டமிட்டு சதி செய்து, தி.மு.க மீது பழிபோட்டு, வெற்றியைத் தடுத்துவிடலாம் என நப்பாசை கொண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே! தனியாக நடைபெற்ற தேர்தல் என்பதால் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு, அதிகார அத்துமீறல்களுடன் ஆட்டம் போட்டனர். எதிர்க்கட்சியான தி.மு.கழகம் தனது தொண்டர் பட்டாளத்தையும், தோழமைக் கட்சிகளின் பலத்தையும், பொதுமக்களின் பேராதரவையும் நம்பிக் களமிறங்கியது. மக்களவைத் தேர்தலில் தி.மு.க., மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவதுபோல வாக்காளர்களை ஏமாற்றிவிட்டது என தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தி, இழிவு செய்த முதலமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும், மத்திய-மாநில ஆட்சியாளர்களின் எதிர்மறைச் செயல்பாடுகளினால் மக்கள் சந்திக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் வகையிலும், கழகத் தலைவர் என்ற முறையில் நானும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களப்பணியாற்றினோம்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption கதிர் ஆனந்த்

அயராத உழைப்பும், சரியான வியூகமும் கொண்டு செயல்பட்ட உடன்பிறப்புகளின் தொண்டும், வேலூர் வாக்காளர்கள் தந்த ஆதரவும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையைக் கழகத்தின் வெற்றிக் கோட்டையாக்கியிருக்கிறது. இந்தியா எதிர்பார்த்த இந்தத் தொகுதியின் முடிவு, தி.மு.கழகத்திற்குச் சாதகமாகியிருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை நிலைநிறுத்தி, அதற்கான எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கிறது. இடைத்தேர்தல் போன்ற இத்தகைய தேர்தலில், ஆளுங்கட்சியைத் தோற்கடித்து, எதிர்க்கட்சி பெறுகின்ற வெற்றியே விதிவிலக்கான இணையிலா வெற்றிதான், என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின், பேசிய மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி முழுமையானது என்று தெரிவித்தார்.

"அதிமுக செல்வாக்கை உணர்த்துகிறது" - இபிஎஸ், ஓபிஎஸ்

வேலூர் தொகுதி முடிவுகள் குறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், இந்த தேர்தல் முடிவுகள், அதிமுக செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை ஏ.சி.சண்முகம் இழந்திருக்கிறார் என்றாலும் இது, அதிமுகவைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

'ஸ்டாலின் மீதான நம்பிக்கை'

இந்த வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையின் அடையாளமாகக் கருதுவதாக திமுக பொருளாளரும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

ஏற்றம் - இறக்கம் - இறுதியில் திமுக வெற்றி

ஆகஸ்டு 5ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை எட்டு மணிக்கு தொடங்கியது.

வேட்பாளர் வாக்குகள் பெற்ற வாக்கு சதவீதம்
கதிர் ஆனந்த் - திமுக 4,85,340 47.3
ஏ.சி.சண்முகம் - அதிமுக 4,77,199 46.51
தீபலட்சுமி - நாதக 26,995 2.63
நோட்டா 9,366 0.92

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,77,199 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது, அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை வகித்தார். பிறகு, தி.மு.க முன்னிலை வகித்தது.

ஒருகட்டத்தில் சுமார் 15,000 வாக்குகள் முன்னிலையில் இருந்த ஏ.சி. சண்முகம் தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தார். அவருக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்திற்கும் இடையிலான வித்தியாசம் தொடர்ந்து குறைந்துவந்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் ஏ.சி. சண்முகத்தைத் தாண்டிச் சென்றிருக்கிறார் கதிர் ஆனந்த்.

முதல் ஏழு சுற்றுகளின் முடிவில் அதிமுக முன்னிலையில் இருந்தது. எட்டாவது சுற்று முதல் திமுக முன்னிலை பெற்றது.

படத்தின் காப்புரிமை facebook

இன்றைய வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஐந்து வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் விவிபேட் ரசீதுகளும் எண்ணப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வேறுபட்டால் விவிபேடில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையே கணக்கில் கொள்ளப்படும்.

ஆகஸ்டு 5ஆம் தேதி அமைதியான சூழலில் நடந்து முடிந்த வாக்குப் பதிவில் சுமார் 71.51% வாக்குகள் பதிவாகின.

28 வேட்பாளர்கள்

இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் போட்டியிட்டனர். ஏ.சி. சண்முகம் அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இதுதவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் களத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

டிடிவி தினகரனின் அமமுக, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 133 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?

தேர்தலுக்கு முன்பு, அதாவது மார்ச் 30-ம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தப் பின்னணியில்தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை A.D.BALASUBRAMANIYAN

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் 16-ம் தேதி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஒன்று இதுவரை இவ்விதமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களவைத் தேர்தல் ஒன்று ரத்து செய்யப்பட்டது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. தவிர, தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதிக்கு மட்டும்தான் தேர்தல் நடைபெறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: