வங்கி மேலாளர் என்று கூறி முதலமைச்சர் மனைவியிடம் பணம் மோசடி

பிரனீத் கவுர் படத்தின் காப்புரிமை Getty Images

இன்று இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "பஞ்சாப் முதல்வரின் மனைவியிடம் 23 லட்சம் மோசடி"

வங்கி மேலாளர் என்று கூறி பஞ்சாப் முதலமைச்சர் மனைவியிடம் செல்பேசியில் பேசி, வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் பின், சிவிசி, ஓடிபி நம்பர் உள்ளிட்டவற்றைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் எம்.பி. ஆவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் டெல்லியில் உள்ள பிரனீத் கவுருக்கு சில நாட்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் என்று கூறி, சம்பளத்தை டெபாசிட் செய்வதற்காக வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.

வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் பின், சிவிசி மற்றும் ஓடிபி எண் அனைத்தையும் அந்த நபர் கேட்டுப் பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே பிரனீத் கவுரின் வங்கிக் கணக்கில் இருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, செல்பேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்து, மோசடி நபரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கைது செய்துள்ளனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி: கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

படத்தின் காப்புரிமை RANDY BROOKS

தொடர் மழையின் காரணமாக இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்ததாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"டி20 தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் ஆட்டம் கயானாவில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்றது.

ஆனால் பலத்த மழையால் மைதானத்தில் நீர் தேங்கிய நிலையில், பிட்ச்சை பணியாளர்கள் பாதுகாப்பாக மூடினர். இதனால் டாஸ் போடுவது தாமதமானது. பின்னர் ஊழியர்கள் நீரை வெளியேற்றிய நிலையில், மீண்டும் வானிலை தெளிவானது. பின்னர் இந்திய அணி டாûஸ வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

40 ஓவர்களாக குறைப்பு: முதலில் 43 ஓவர்களாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, பின்னர் காலநேரத்தை கருதி இரு அணிகளும் 40 ஓவர்கள் வீச வேண்டும் என நடுவர்கள் தீர்மானித்தனர்.

5.4 ஆவது ஓவரின் போது மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அதன் பிறகு தொடங்கிய ஆட்டம், 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை மேற்கிந்திய தீவுகள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனால் நடுவர்கள் இறுதியாக ஆய்வு செய்து மழை பாதிப்பால் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - பசுமை தூதுவராக நியமிக்கப்பட்ட சிறுமி

படத்தின் காப்புரிமை Twitter

ஒன்பது வயது சிறுமி மணிப்பூரின் பசுமை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"மணிப்பூரின் காக்சிங் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சில வாரங்களுக்கு மரங்கள் வெட்டப்பட்டன. அதை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமியான ஏலங்பாம் வாலெண்டைன் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழத் தொடங்கினார். அந்த காணொளி அம்மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது.

இந்நிலையில், ஒன்பதே வயதான சிறுமியின் மரங்கள் மற்றும் இயற்கை மீதான அன்பையும், அக்கறையையும் பாராட்டும் வகையில், அடுத்த ஓராண்டுக்கு அவரை மாநிலத்தின் பசுமை தூதுவராக நியமிப்பதாக மணிப்பூர் அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்