வெள்ளத்தில் தத்தளிக்கும் நீலகிரி, கர்நாடகம்; கேரளாவில் 22 பேர் பலி

அதிதீவிர மழையால் ஆடிப்போன நீலகிரி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா படத்தின் காப்புரிமை AFP

தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்டுள்ள கனமழையால் உண்டான வெள்ளப்பெருக்கு, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் அந்த மாவட்டத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநில அரசுத் துறைகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 500 பேர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) பகல் நேர நிலவரப்படி அங்கு இதுவரை 1,700 பேர் உதவி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கேரளா

படத்தின் காப்புரிமை TWITTER

கடந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்புகளால் உயிர் மற்றும் பொருட் சேதங்களை சந்தித்த கேரளாவின் சில மாவட்டங்களில் இந்த ஆண்டும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

கேரளாவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 315 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 22,165 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வயநாடு மற்றும் நிலம்பூரில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயநாட்டில் இதுவரை ஒன்பது மாத கர்பிணி பெண் உள்ளிட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 250 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பிணராயி விஜயன், ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வயநாடு மாவட்டத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பல்வேறு இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டுப்பாட்டு அறை எண்கள் : 0471-251 7500, 0471-232 2056

வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்படி எனும் இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

தற்போது பொழிந்து வரும் கனமழை மேலும் சில நாட்களுக்கு தொடருமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிவரை கொச்சி விமான நிலையத்தின் செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட 22,165 மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 315 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரளாவின் பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பொழிந்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்திய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மெப்பாடி மற்றும் வயநாடு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் மிகவும் மோசமானவை என்றும், அதை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பரிதவிக்கும் கர்நாடகா

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழை காரணமாக இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து இதுவரை 43 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16,000 பேர் மாநிலம் முழுவதுமுள்ள 272 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை BS Yediyurappa/Twitter

நாட்டின் மேற்கு மாநிலங்களை தென் மாநிலங்களுடன் இணைக்கும் கர்நாடகாவின் முக்கிய ரயில்பாதைகள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அம்மாநிலம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்த 13 பிரிவுகள், இந்திய ராணுவம் மட்டுமின்றி பெல்காம் மற்றும் உத்தார கன்னடா ஆகிய மாவட்டங்களில் இந்திய கப்பற்படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நிலவி வரும் அவசர நிலையை கருத்திற்கொண்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வரும் 15ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டாம் என்று உயரதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தத்தளிக்கும் மகாராஷ்டிரா

படத்தின் காப்புரிமை UDAY DEOLEKAR

கடந்த சில வாரங்களாகவே தலைநகர் மும்பையை புரட்டியெடுத்த மழை, தற்போது கோலாப்பூர், சாங்கிலி, சட்டரா ஆகிய உள்மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் இருந்து மட்டும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 22 அணிகள், இந்திய கப்பற்படையை சேர்ந்த 13 அணிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை UDAY DEOLEKAR

மாநிலம் முழுவதும் பெருமழை காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை குறித்து நேற்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெவ்வேறு தடங்களில் 8 பேருந்துகள் கோலாப்பூர் அருகே வெள்ளப்பாதிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், அதிலிருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த நான்கு நாட்களாக அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

"நான் எனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த நான்கு நாட்களாக இங்கு செய்வதறியாது தவித்து வருகிறேன். எங்களது சூழ்நிலை குறித்து விசாரிப்பதற்கு இதுவரை ஒருவர் கூட வரவில்லை. எனினும், உள்ளூர் மக்கள் அளிக்கும் உணவு, தண்ணீரை கொண்டு வாழ்ந்து வருகிறோம்" என்று பர்வேஸ் கான் என்பவர் கூறுகிறார்.

ஒரிசா நிலவரம் என்ன?

படத்தின் காப்புரிமை ANI

ஒரிசாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராயக்கடா எனும் நகரத்தை ஒட்டிய ஐந்து கிராமங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் தீவிர மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்