'வேலூர் வெற்றியில் நிச்சயமாக தி.மு.கவிற்கு எச்சரிக்கை இருக்கிறது'

தி.மு.கவின் வேலூர் வெற்றி, வெற்றிக் கணக்கில் வராதா? படத்தின் காப்புரிமை ARUN SANKAR

(வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்து முடந்த தேர்தலில் தி.மு.கவின் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால், இது முழுமையான வெற்றியல்ல என்கின்றன திமுகவை எதிர்க்கும்கட்சிகள். இந்த விமர்சனம் குறித்தும், நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் உடன் பேசினார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான ஆழி செந்தில்நாதன். அந்தப் பேட்டியிலிருந்து: )

அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெறுவார் என்பதுதான் நம்முடைய தேர்தல் முறை. அந்த வகையில் இது தி.மு.கவுக்கு வெற்றிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற தி.மு.க.

அதனைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது தி.மு.க. வெற்றிபெற்றாலும் அது வெற்றியில் சேர்த்தியில்லை என்று சில பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கருத்தை உடைப்பதற்காகவே இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால், இந்த வெற்றியில் நிச்சயமாக தி.மு.கவிற்கு எச்சரிக்கை இருக்கிறது. தி.மு.க. ஏன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவில்லை என்பது மட்டுமே இதில் கேள்வியில்லை. இப்போது தமிழ்நாட்டி்ல இருப்பது மிகவும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு அரசு.

இப்படி வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் ஒரு அரசு இவ்வளவு வாக்குகளை எப்படி வாங்குகிறது? அதுதான் தி.மு.கவைப் பொறுத்தவரை கவலைக்குரிய விஷயமாக பார்க்க வேண்டும். தி.மு.கவின் வாக்கு சேகரிக்கும் திறம் குறைந்துவிட்டதா என்ற ரீதியில் இதனை ஆராயக் கூடாது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்ற கட்சி தி.மு.க. இப்போது தேர்தல் நடைபெற்ற வேலூர் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வாக்குகள் வரை கணிசமான அளவுக்கு இருக்கின்றன. மேலும், துரைமுருகன் வேலூரில் வலிமை வாய்ந்த ஒரு மனிதர். தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருபவர்.

இது தவிர, தி.மு.க.கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை வலுவாக இருக்கக்கூடிய ஒரு பகுதி வேலூர்.

Image caption ஆழி செந்தில்நாதன்

அப்படியிருந்தும்கூட தி.மு.கவால் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெல்ல முடிகிறது என்றால் அவர்கள் தங்கள் வியூகங்களை பரிசீலனை செய்யவேண்டும். இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்திற்கு என்ன காரணம் என யோசிக்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசு மிகவும் வெறுப்புக்குள்ளான ஓர் அரசாக இருக்கிறது. நரேந்திர மோதி தலைமையில் மீண்டும் பதவியேற்ற மத்திய அரசு மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் புதிதாக எதையும் செய்துவிடவில்லை. இருந்தும் அவர்கள் எப்படி இவ்வளவு வாக்குகளைப் பெற்றார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

கடந்த முறை தி.மு.க. பெற்ற வெற்றியில் ஒரு பாதி, அக்கட்சியின் தலைமை, கூட்டணி ஆகியவற்றால் கிடைத்த வெற்றி. மற்றொரு பாதி மோதிக்கு எதிரான, எடப்பாடி அரசுக்கு எதிரான அலையால் கிடைத்த வெற்றி. அது ஒரு பெரிய அலையாக வீசியது.

ஆகவே, கடந்த முறை கிடைத்த வெற்றி தி.மு.க. தன்னுடைய முயற்சியால் மட்டும் பெற்ற வெற்றி அல்ல. மக்கள் அவர்களுக்கு அளித்த அங்கீகாரம். எங்கள் கருத்துகளை நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள் அல்லது பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக கொடுத்த அங்கீகாரம். எங்கள் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகக் கொடுத்த வெற்றி அது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

அப்படி இருக்கும்போது இரண்டொரு மாதங்களிலேயே இதெல்லாம் எப்படி மாறியது? அலைவீசும் தேர்தலில் வெற்றிபெறுவது எளிது. ஆனால், எந்த அலையும் இல்லாத ஒரு தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறுவது கடினமா என்ற கேள்வி எழுகிறது.

அந்தக் கட்சியில் துடிப்பான இளைஞர் படை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. உடனே, அ.தி.மு.கவில் மட்டும் அப்படி ஒரு படை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே தனித் தனி டிஎன்ஏ இருக்கிறது. ஒரு கட்சியின் மீதான கேள்வியை இன்னொரு கட்சியின் மீது அப்படியே வைக்க முடியாது. தி.மு.க. மீது வைக்கப்படும் கேள்விக்கு தி.மு.கதான் பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. மீது வைக்கப்படும் கேள்விக்கு அ.தி.மு.கதான் பதில் சொல்ல வேண்டும். தி.மு.க. வயதானவர்களின் கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது மாறவேண்டும்.

நாடாளுமன்றத்தில் தி.மு.கவுக்கான கடமை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் கிளம்பியபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கான குரலாக தி.மு.க. ஒலித்தது.

அந்தக் குரல் தேசிய விவகாரங்களில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். அப்போதுதான், அரசுக்கு எதிரான குரலின் மையமாக தி.மு.க. மாறும். பல கட்சிகள் அந்த மையத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். தி.மு.க. இப்படி ஒலிப்பது காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளுக்கும்கூட நல்லது. தேசிய பாதுகாப்பு முகமை விவகாரத்தில் தவறான முடிவெடுத்த தி.மு.க. காஷ்மீர் விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுத்தது. இது தொடர வேண்டும்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

தி.மு.க. 38 இடங்களில் வெற்றிபெற்ற பிறகு ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அதாவது, ஆளுங்கட்சிக் கூட்டணியில் இல்லாமல் தி.மு.கவால் என்ன சாதிக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார்கள். இப்படிகேள்வியெழுப்புபவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள்.

ஒரு ஜனநாயக சமூகத்தில் ஆளும் கட்சி - எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே முக்கியம். எதிர்க் கட்சி உறுப்பினர்களால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வியின் பின்னால் இருக்கும் சித்தாந்தம் ஆபத்தானது. முதலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் என்ன செய்ய முடியும் என்பார்கள்.

பிறகு, மாநிலக் கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பார்கள். பிறகு, தேசியக் கட்சிகளிலும் தாங்கள்தான் வெற்றிபெறும் கட்சி; எனவே தங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பார்கள். இந்த ஆபத்தான சிந்தனைதான், எதிர்க்கட்சியினருக்கு வாக்களிக்கக்கூடாது என்கிறது.

இந்த வேலூர் தேர்தல் முடிவுகளில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள். கிட்டத்தட்ட 2.5 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் அக்கட்சி பெற்றிருக்கிறது. ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி இதைவிட அதிகமான வாக்குகளையே பெற்றது. அப்படிப் பார்க்கும்போது, அக்கட்சியின் வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலைவிட சரிந்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை எட்டியிருக்கும் அக்கட்சி, தொடர்ந்து 5, 10, 15 என வாக்கு சதவீதத்தை அதிகரித்துச் செல்வதன் மூலம்தான், தேர்தல் களத்தில் மேலேறிச் செல்ல முடியும். தவிர,சில வெற்றிகளும் அவசியம். எதிர்காலத் தேர்தல்களை அவர்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதுதான், அக்கட்சியின் எதிர்காலத்தை முடிவுசெய்யும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்