தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - இப்போது வாங்கினால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தை பார்க்கும் பெண் படத்தின் காப்புரிமை Getty Images

தங்கத்தின் விலை விரைவாக அதிகரித்து வருகிறது. எது லாபகரமானது? விற்பதா அல்லது வாங்குவதா?

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் தேவைக்கு இறக்குமதியையே இந்தியா முழுமையாக நம்பியிருக்கிறது.

எனவே, டாலரின் மதிப்பு உயரும்போது எல்லாம், தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வு, கடந்த காலத்தில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை போன்றதல்ல என்பது குறிப்பிடத்தக்கது..

ஆகஸ்ட் 8-ம் தேதி மட்டும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,113 அதிகரித்தது,

தற்போது இருக்கும் நிலையை பார்த்தால், விலை மேலும் அதிகரிக்கும் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி மட்டுமே ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ. 650 அதிகரித்தது.

இதே மாதிரி விலை அதிகரிக்குமானால், இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40 ஆயிரத்தை தொடும் என்று தொழிற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

தங்கத்தின் விலை அதிகரிப்பது ஏன்?

இந்தி நாற்காட்டியின் 'ஷ்ரவன்' மாதத்தில் தங்கம் அதிகமாக விற்பதால் விலை உயாந்துள்ளது என்று அனுமானிப்பது இயற்கையே.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.

உலகமயமாக்கத்தின் பின்னர், உள்நாட்டு பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின் விலையை பாதிக்கின்றன.

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அரசால் சமர்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10-%ல் இருந்து 12.5 %ஆக அதிகரிக்கப்பட்டது.

அண்மையில், 4-வது முறையாக தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வட்டி விகிதங்களை குறைத்துள்ளார்.

"ரெப்போ வட்டி விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் குறைத்திருப்பது வங்கிளுக்கும், கடன் பெறுபவர்களுக்கும் பயன் அளிப்பதாகும். இருப்பினும், தங்கத்தின் விலைக்கு இது இன்னொரு தடங்கலாகியுள்ளது."

"ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கப்படும் தொகைக்கு வங்கிகள் கொடுக்கக்கூடிய வட்டி விகிதம்தான். இந்த வட்டியை குறைப்பது என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் அதிக பணம் கடன் வாங்கும் திறனை உருவாக்கும்."

"இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்களிடம் அதிக பணம் இருப்பதால், வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்கும். நிதிப் புழக்கம் பொதுவாக அதிகரிக்கும். இதனால், நிறுவனங்களும், மக்களும் இந்தப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வர். இதனால் தங்கத்திற்காக தேவை அதிகரிக்கும். விளைவு, தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்," என்று வர்த்தக ஆய்வாளர் சதீஷ் மன்தாவா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை LS TV

நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய நிலைமை

தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் பங்கு சந்தை சரிவை சந்தித்து வருகிறது.

30 நாட்களில் முதலீட்டாளர்கள் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

"இந்த அம்சங்களோடு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370-இன் சரத்துகளை ரத்து செய்திருப்பது, ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருப்பது, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருப்பது ஆகியவை முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளன. சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. தங்கத்தின் தேவைக்கு முற்றிலும் இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியா இந்த மாற்றத்திற்கு தயாராக இல்லை. டாலர் ரூபாயைவிட வலிமையாவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.1000 உயர காரணமாகியது" என்கிறார் சதீஷ் மன்டாவா.

காஷ்மீர் நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார கண்ணோட்டம் இப்படியே தொடர்ந்தால், இந்த ஆண்டின் முடிவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 40 ஆயிரமாக உயரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அவர் கூறுகிறார்.

சர்வதேச நிகழ்வுகளின் பங்களிப்பு

இந்தியாவின் உள்நாட்டு காரணிகளோடு, சர்வதேச அம்சங்களும் இணைந்து தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் உலக நாடுகளின் பங்கு சந்தைகளில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

நாஸ்டாக் (NASDAQ) மற்றும் டவ் ஜோன்ஸ் (Dow Jones) திங்கள்கிழமை தொடங்கி சரிவை சந்தித்து வருகின்றன.

நிக்கி (Nikkei), யூரே ஸ்டாக்ஸ் (Euro Stocks), கேன்ட் செங் (Hand Seng), ஷாங்காய் காம்போசிட் (Shanghai Composite) ஆகியவையும் இறங்குமுகம் கண்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவுகளுக்கு பின்னர், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமைகள் அனைத்தும் முதலீட்டாளர்களிடம் பயத்தை உருவாக்குகின்றன.

தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டுள்ள முதலீட்டாளாகள் தங்கத்தில் இருந்து முதலீட்டை திரும்பி வருகின்றனர்.

இதே நேரத்தில் பல்வேறு நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தொடங்கிவிட்டன. இதனால், தங்கத்திற்கு தேவை அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு இணையாக சீனாவும் அதிக தங்கத்தை வாங்கி வருகிறது, அமெரிக்காவை விஞ்சுவதற்கு சீனா எடுத்து கொள்ளும் முயற்சிகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

சமீபத்தில் சீன நாணயமான யுவானின் மதிப்பு பத்து ஆண்டுகள் காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது.

பிபிசி பிஸ்னஸ் திரட்டிய தரவுகளின்படி ஒரு டாலருக்கு ஏழு யுவான் என்ற அளவில் யுவான் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது சீன நாணயம் மிக குறைவான பரிமாற்ற மதிப்பை அடைந்தது குறிப்பிடத்கத்கது.

அப்போது ஒரு டாலருக்கு 7.3 யுவான் என்ற நிலை இருந்தது. இப்போதைய மதிப்பு அதனைவிட குறைவாக உள்ளது.

சர்வதேச சந்தையில் தன்னை நிலைப்படுத்தி கொள்வதற்காக கடந்த காலத்தில் வியூக செயல்பாடாக யுவான் மதிப்பை சீனா குறைத்துள்ளது.

ஆனால், சமீபத்தில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 300 பில்லியன் டாலர் மதிப்பில் 10 சதவீதம் அதிகரித்தது,

படத்தின் காப்புரிமை AFP

இதன் காரணமான எதிர்காலத்தில் யுவான் மதிப்பில் மேலும் 5 சதவீதம் சரிவு ஏற்படும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆண்டின் முடிவில் ஒரு டாலருக்கு 7.3 யுவான் மதிப்பு இருக்குமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 1,497.70 டாலர் என "புல்லியன் டெஸ்க்" தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது உயர்வான விலையாகும்.

ஆனால், 2013ம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,696 டாலராக இருந்த்து. ஆனால், உள்நாட்டு சந்தையில் அப்போது தங்கத்தின் விலை அதிகரிப்பு ரூ. 35 ஆயிரமாக அதிகரித்திருந்தது.

விற்கவா அல்லது வாங்கவா?

தங்கத்தன் விலை உயர்கின்றபோது, பொது மக்களிடம் பதற்றம் அதிகரிக்க தொடங்குகிறது. குழந்தைகளின் திருமணம் மற்றும் பிற நல்ல காரியங்களுக்காக தங்கம் வாங்குவதற்கு விரும்புகிறவர்கள் மிக விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

2013ம் ஆண்டு தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தை தாண்டியபோது, பலரும் தங்கம் வாங்கினர். ஆனால், அதற்கு பிறகு சர்வதேச சந்தையில் நிகழ்ந்த பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

தற்போதைய நிலைமையில், விரைவாக சென்று தங்கத்தை வாங்குவதைவிட தேவையின் அடிப்படையில் வாங்க முடிவெடுப்பது நல்லது. தங்கத்தை வாங்க தொடங்கினால், அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் என்று சதீஸ் மன்டாவா தெரிவிக்கிறார்,

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் சர்வதேச நிலைமையை ஆழமாக கண்காணித்த பின்னர், இது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

சிறிய அளவில் தங்க வாங்க முடிவு செய்வோர் அவர்களுக்கு இருக்கின்ற தேவையின் அடிப்படையில் வாங்க வேணடும் என்றும் அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: