காவிரியில் 2. 4 லட்சம் கன அடி நீர்: அபாய அளவைத் தாண்டியது

கிருஷ்ணராஜசாகர் அணை படத்தின் காப்புரிமை kar.nic.in
Image caption கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்துவருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு சுமார் 2.4 லட்சம் கன அடியை எட்டியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று திறந்துவிடப்பட்ட நீர் ஞாயிற்றுக்கிழமையன்று பிலிகுண்டுலுவை அடைந்ததால் அந்தப் பகுதியில் உச்சபட்ட வெள்ள மட்டத்தைத் தொடும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்துவந்தது.

படத்தின் காப்புரிமை kar.nic.in
Image caption கபினி அணை

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் பதினைந்து அடி உயர்ந்து, 82 அடியை எட்டியது. மத்திய நீர் அணையம் நேற்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, காவிரிக்கு தற்போது ஒரு நாளைக்கு 15-20 டிஎம்சி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதனால், மேட்டூர் அணை தனது அதிகபட்ச உயரமான 120 அடியை இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் எட்டிவிடுமென கூறப்பட்டது.

ஆனால், தற்போது மேட்டூர் அணைக்கு சுமார் 2.4 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஹொகேனக்கல் அருவிகளை மூடியபடி தண்ணீர் பாய்ந்துவருகிறது.

இது தொடர்பாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, காவிரி நீர் தமிழகத்திற்குள் நுழையும் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை M. Niyas Ahmed
Image caption ஹொகேனக்கல் அருவிகளை மூடி நீர் பாய்ந்து வருகிறது. (கோப்புப்படம்)

இந்தப் பகுதியில் இதற்கு முன்பாக அதிக பட்சம் 265.7 மீட்டர் அளவுக்கு தண்ணீர் பாய்ந்ததே உச்சபட்ச அளவாக (HFL)இருந்தது. ஆனால், தற்போது கர்நாடகத்திலிருந்து பெருமளவு நீர் திறக்கப்பட்டிருப்பதால், நீர்மட்டம் பிலிகுண்டுலுவில் 266 மீட்டர் உயரத்தையும் தாண்டிப் பாய்ந்து வருகிறது.

தற்போது அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயத்திற்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்படுமென தமிழக முதலமைச்சர் கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

காவிரி டெல்டா பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் நீர்த்தேக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தால் அந்த நாளில் அணை திறக்கப்படவில்லை.

இப்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டும் 90 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 65 டி.எம்.சியாக உள்ளது. மேலும் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக உள்ளது.

படத்தின் காப்புரிமை salem.nic.in
Image caption மேட்டூர் அணை இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமெனத் தெரிவதாலும் தற்போதைய நீர் இருப்பை மனதில்கொண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தானே நேரில் சென்று அணையைத் திறந்துவைக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டத்திலும் அதனை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாலக்காட்டிலும் பெய்துவரும் மழையால் பவானி அணைக்கு வரும் நீரின் அளவுக்கு வெகுவேகமாக அதிகரித்துவருகிறது.

பைகாரா, பில்லூர், அப்பர் பவானி நீர்த்தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துவருவதால் அந்த நீர்த்தேக்கங்களிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் திருச்சியில் கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது இடிந்து விழுந்த முக்கொம்பு அணை, சரி செய்யாததால் காவிரியில் வரும் வெள்ள நீர் வீணாக கொள்ளிடத்தில் பாய்ந்து கடலில் கலக்குமெனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்