காஷ்மீர்:'பக்ரீத் பற்றி யாருக்கு கவலை? எங்கள் குடும்பங்கள் குறித்தே அறிய விரும்புகிறோம்''

பக்ரீத் படத்தின் காப்புரிமை Getty Images

வெண்மேகங்கள் வழியாக விமானம் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஜன்னல் வழியே பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாகக் காட்சியளிக்கிறது. மலைகளின் மீது வீடுகள், சுற்றிலும் மரங்கள், பசுமையான வயல்வெளிகள், காலியான சாலைகள். மேலே இருந்து பார்த்தால் எல்லாமே அமைதியாக இருப்பது போல, முழுமையான அமைதி நிலவுவதாகத் தெரிகிறது.

ஆனால் விமானத்திற்குள் பார்த்தால், அமைதியற்ற முகங்களைக் காணமுடிகிறது. தரையில் நிலைமை எப்படி இருக்குமோ என்பது பற்றி எதுவும் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

டெல்லியில் இரு்து புறப்பட்ட விமானம் ஸ்ரீநகரில் தரையிறங்க உள்ளது. தங்களுடைய நேசத்துக்கு உரியவர்களைச் சந்திக்கும் ஆர்வத்தில் இருப்பவர்களுக்கு, இந்த 75 நிமிடப் பயணம் அதைவிட நீண்டதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

''என் கைப்பையில் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளன. அவை பரிசுகள் அல்ல. நான் உணவுப் பொருட்களையும், பானங்களையும் மட்டும்தான் எடுத்து வருகிறேன்.''

''நான் யாருடனும் பேச முடியவில்லை. என் மனைவியுடனோ, என் பிள்ளையுடனோ, என் பெற்றோருடனோ, உறவினருடனோ ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள யாருடனுமோ என்னால் பேச முடியவில்லை.''

''உங்களிடம் உண்மையைச் சொல்வதானால், நான் பக்ரீத் கொண்டாடுவதற்காகச் செல்லவில்லை. என் குடும்பத்தினரைப் பார்ப்பதற்குத்தான் செல்கிறேன். இங்கே நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்வதற்காக அவர்களைச் சந்திக்கச் செல்கிறேன். ஏனென்றால் தகவல் தொடர்பு முற்றிலுமாக முடங்கிவிட்டது. நாம் இன்றைய நவீன காலத்தில் இல்லாமல், ஏதோ இருண்ட காலத்தில் வாழ்வதைப் போலத் தெரிகிறது.''

''அங்கே எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றனவா என்பது குறித்து தொடர்ந்து அச்சமாக உள்ளது. இதனால் எங்களால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை. மனம் பதற்றத்தில் இருக்கிறது. நீங்கள் பதற்றத்தில் இருக்கும்போது, கெட்ட எண்ணங்கள் வந்து வந்துபோகும். ஒருவேளை எல்லாமே நல்லதாகவே இருக்கலாம். ஆனால் அங்குள்ள நிலைமை பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. என் குடும்ப உறுப்பினர்களின் நிலை பற்றி அறியாமல் நான் அமைதியில்லாமல் இருக்கிறேன்.''

படத்தின் காப்புரிமை Getty Images

''அவர்களை தொடர்பு கொள்ள ஆயிரம் முறை முயற்சி செய்திருப்பேன். ஆனால் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரே சமயத்தில் எல்லா அலைபேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருக்காது. அதனால்தான் ஏதோ தவறான விஷயம் நடக்கிறதோ என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது.''

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து ஆசிப் ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் வந்துள்ளார். டெல்லியில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஆசிப், கடந்த சில தினங்களாக சரியாக தூங்கவோ, சாப்பிடவோ முடியாமல் உள்ளார்.

அவருடைய முகத்தில் சோர்வும் விரக்தியும் குடிகொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் வந்திருக்கும் அனைவருடைய முகங்களையும் கவனமாகப் பார்த்தால், அச்சம் பொதிந்து கிடப்பதைக் காணலாம்.

கடந்த திங்கள்கிழமை இந்திய அரசு, அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்து, இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் இந்திய அரசு பிரித்துவிட்டது.

ஆனால் அந்த அறிவிப்பைச் செய்வதற்கு முன்னதாக, அந்தப் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் வெளியுலகிற்குமான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அத்துடன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. அலைபேசி மற்றும் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹரியானா மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நான்கு காஷ்மீரி மாணவர்கள், அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தேர்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் இப்போது தங்கள் வீடுகளுக்கு அவசரமாக செல்கின்றனர்.

``தேர்வுகள் வருகின்றன. அதற்குத் தயார் செய்வதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. எங்கள் குடும்பத்தினருடன் எங்களால் பேச முடியவில்லை. மனதளவில் நாங்கள் பாதிக்கப் பட்டுள்ளோம். நிறைய பதற்றமாக உள்ளது. வகுப்புகளுக்குச் செல்லவோ அல்லது வேறு எதுவும் செய்யவோ எங்களால் முடியவில்லை. பக்ரீத் கொண்டாடுவதற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை. எங்கள் குடும்பத்தினரைப் பார்ப்பதற்குதான் செல்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

``காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை பற்றி இந்திய ஊடகங்கள் எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. அரசாங்கமும் சரியான எந்தத் தகவலையும் கூறவில்லை. உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை.''

அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் ஷாபுரா, உணவு மற்றும் பானங்கள் மட்டுமே தனது லக்கேஜ் மற்றும் கைப்பையில் எடுத்து வந்திருக்கிறார்.

''குழந்தை உணவு மற்றும் மரு்துகளை நான் கொண்டு வந்திருக்கிறேன். நான்கு நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பேசினேன். ஆனால் அதன்பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்றுகூட எனக்குத் தெரியாது,'' என்று அவர் கூறினார்.

''அச்சமான ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. அரசு செய்திருப்பதை, வேறு வகையில் செய்திருக்கலாம். கடந்த ஓராண்டாகவே நாங்கள் மத்திய அரசின் ஆட்சியில் தான் வாழ்ந்து வருகிறோம். வேறு பல மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. அவர்கள் அங்கிருந்து தொடங்கி, காஷ்மீருக்கு வந்திருந்தால், மக்கள் அதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் மத்திய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், காஷ்மீரில் ஏன் இதை முதலில் செய்தார்கள்? இதுதான் அவர்களுடைய நோக்கத்தின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கியதும், வீட்டுக்கு எப்படி செல்லப் போகிறோம் என்று ஷபுராவுக்குத் தெரியவில்லை. அவர் மட்டுமல்ல, ஸ்ரீநகருக்குச் செல்லும் யாருமே, தாங்கள் வீட்டுக்கு வருவதை குடும்பத்தினருக்குத் தெரிவிக்க முடியவில்லை.

மத்திய கல்வி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கண்ணீர் சிந்தியபடி ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்தார். அவருடைய துப்பட்டா கண்ணீரில் நனைந்திருந்தது. அவர் சோப்போர் செல்ல வேண்டும். ஆனால் வாகன வசதி இல்லை. எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதற்கு அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அங்கே செல்ல எந்த டாக்சி ஓட்டுநரும் விரும்பவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் மனம் உடைந்து போயிருப்பதைக் கண்டு, குப்வாரா செல்ல காத்திருந்த சில இளைஞர்கள், தங்களுடன் அவரை அழைத்துச் செல்வதாக உறுதி அளித்தனர். ஆனால் அவர்களும்கூட எப்படி செல்லப் போகிறோம் என்று தெரியாமல் இருந்தனர்.

பாதுகாப்பு சூழல் இவ்வளவு மோசமாக இருக்கும்போது அவர்கள் ஏன் வீட்டுக்குத் திரும்புகின்றனர்? இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த அவர்கள், "எங்கள் குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து, அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வந்திருக்கிறோம்'' என்று அவர்கள் பதில் அளித்தனர்.

பக்ரீத் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்களா என்று கேட்டபோது, "இந்தச் சூழ்நிலையில் யாரால் கொண்டாட முடியும்? எங்களுடைய முன்னுரிமை பக்ரீத் அல்ல. எங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வது தான் முக்கியம்'' என்று அவர்கள் பதில் அளித்தனர்.

சண்டிகரில் இருந்து கண்ணீருடன் வந்திருக்கும் ஒரு மாணவி, "என் கல்லூரியில் உள்ளவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு சமாதானம் ஏற்படவில்லை. என் பெற்றோர்களைப் பற்றி எனக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. என் தாயாருடன் பேசாமல் என்னால் இருக்க முடியாது. என்னுடைய படிப்பு பாதித்தாலும்கூட, இங்கு நிலைமை முன்னேறும் வரை நான் கல்லூரிக்குத் திரும்பிச் செல்லப் போக மாட்டேன்'' என்று தழுதழுக்கும் குரலில் கூறினார்.

மாணவியின் நண்பர் டெல்லியில் இருந்து வந்துள்ளார். அவர் மருந்துகள் கொண்டு வந்துள்ளார். அந்த மாணவியைப் போலவே, அவரும் துயரத்தில் இருந்தார். "என் தந்தை சர்க்கரை நோயாளி. அவருக்கான மருந்துகளை டெல்லியில் இருந்து நான் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நிலைமை இன்னும் எவ்வளவு நாட்களுக்குத் தொடரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

ஸ்ரீநகரில் பக்ரீத் ஆயத்தங்கள்

கடந்த ஐந்து நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த ஸ்ரீநகரில் சனிக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டது, இங்கு மூலைக்கு மூலை ஆயுதம் தாங்கிய காவல் படையினர் நிறுத்தப் பட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆயுதங்கள் ஏந்திய வீரர்களுடன் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், மோப்ப நாய்கள், கம்பிச் சுருள்களால் தடைகள் ஏற்படுத்த நிலையில், குடிமக்கள் சில வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

பக்ரீத்துக்காக ஆடு விற்பதற்காக வந்திருந்த ஓர் இளைஞர், ''இது பக்ரீத் அல்ல. இது துக்க நாள். இரண்டு நாட்களுக்கு நாங்கள் வெளியே வந்திருக்கிறோம். பக்ரீத்துக்குப் பிறகு நாங்கள் பேசுவோம். இது எங்கள் பூமி. எங்கள் நாட்டை வேறொருவருக்கு நாங்கள் எப்படி கொடுத்துவிடுவோம்?'' என்று கூறினார்.

''இஸ்லாமியர்களுக்கு பெரிய நிகழ்வுகள் எப்போது வந்தாலும், அப்போது கலவரங்களும், வன்முறைகளும் நடக்க வேண்டும். எங்களுடைய திருவிழா வருவதால் இந்துஸ்தான் இந்த நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது. தியாகம் செய்வது எங்கள் கடமை. எனவே நாங்கள் தியாகம் செய்வோம். என்ன நடக்கும் என்பதை இரண்டு நாட்களுக்குப் பிறகு நீங்கள் காண்பீர்கள்.''

''பக்ரீத்துக்கு முன்பு இங்கே எல்லாமே நிறுத்தப்பட்டுவிட்டன. ஒருவருக்கு ஒருவர் நாங்கள் பக்ரீத் வாழ்த்து பரிமாறிக் கொள்ள முடியாத நிலையில், பக்ரீத் கொணடாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது,'' என்று வேறொரு காஷ்மீரி இளைஞர் கூறினார்.

இந்தப் பள்ளத்தாக்கில் கிராமப் பகுதிகளில் ஆட்டு மந்தைகள் வைத்திருக்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களால் கால்நடைகளை விற்க முடியவில்லை. ஏனெனில் நகரம் முடங்கிக் கிடக்கிறது. அவர்கள் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை.

''இந்த முறை எந்த வேலையும் இல்லை. எங்கள் கால்நடைகளை விற்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லாமே மூடிக் கிடக்கின்றன. காலையில் இருந்து நாங்கள் பசியுடன் இருக்கிறோம்'' என்று ஆட்டு மந்தையாளர் ஒருவர் கூறினார்.

பதற்றத்துடன் கடைகள் திறப்பு

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பதற்கு சில வியாபாரிகள் கடைகளைத் திறந்தனர். அவர்களை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தபோது, காஷ்மீரி இளைஞர் எங்களைத் தடுத்தார். ''ஸ்ரீநகரில் எல்லாமே இயல்பாக உள்ளது என்றபது போல உலகிற்குக் காட்ட ஏன் விரும்புகிறீர்கள்? காஷ்மீர் மக்கள் காய்கறிகள், பழங்கள் வாங்குகிறார்கள் என்று காட்ட விரும்புகிறீர்களா?'' என்று அவர் கேட்டார்.

அவர் பேசி முடிப்பதற்குள், எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்தது. கற்கள் வீசப்படும் சப்தம் கேட்டதும், காய்கறி வியாபாரிகள் வண்டிகளைத் தள்ளிக் கொண்டு ஓடினர்.

வயதான ஒருவர் முழு பலத்துடன் தனது தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டிருந்தார். பள்ளத்தாக்கில் நிலவும் பதற்றத்தின் முழு பாரமும் அவருடைய வயதான கால்களின் மீது இறங்கிவிட்டதைப் போன்ற உணர்வை அது ஏற்படுத்தியது.

ராணுவத்தினர் குவிந்துள்ள நிலையில் இங்கிருந்து தால் ஏரிக்குச்சென்றபோது, சூழ்நிலை ஓரளவுக்கு இயல்பாக இருப்பதைப் போலத் தெரிந்தது. சில இடங்களில் வாகனங்களின் கூட்டத்தைக் காண முடிந்தது.

ஆனால் நூறடிக்கு ஒரு ராணுவ வீரர் நின்றிருந்தார்.

'காஷ்மீர் சிறைச்சாலையாக மாற்றப் பட்டுள்ளது'

தால் ஏரி அருகே அமர்ந்திருந்த சில இளைஞர்கள், சூழ்நிலை பற்றி கலந்து பேசிக் கொண்டிருந்தனர். ``காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றி, இரண்டு பேர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். காஷ்மீர் மக்களின் கருத்தை அவர்கள் முன்னர் கேட்கவில்லை. இப்போதும் கேட்கவில்லை. இப்போது மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியே வரத் தொடங்கும்போது, இந்த முடிவு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்'' என்று அவர்களில் இருந்த 30 வயது இளைஞர் ஒருவர் கூறினார்.

''இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் போது காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டாமா? காஷ்மீர் மக்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும்கூட சிறைவைக்கப் பட்டுள்ளனர்.''

படத்தின் காப்புரிமை Getty Images

``பண்டிகையை மதிப்பதாக மோதிஜி கூறியுள்ளார். மக்களை அவர்களுடைய வீடுகளுக்குள் பூட்டி வைத்து அவர் மரியாதை செலுத்துகிறார். எங்கள் வீடுகளிலேயே பக்ரீத் கொண்டாடுமாறு எங்களுக்குச் சொல்லப் பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்காமல் எப்படி பக்ரீத் கொண்டாட முடியும்? எல்லாமே இயல்பாகத்தான் இருக்கிறது என்பதைப்போல வெளி உலகிற்குக் காட்டப்படுகிறது. எல்லாமே இயல்பாக இருப்பதையா நீங்கள் பார்க்கிறீர்கள்?''

``காஷ்மீர் மக்கள் வீடுகளில் முடக்கப் பட்டுள்ளனர். அவர்களுடைய மனங்களும் பூட்டப் பட்டுள்ளன. காஷ்மீர் மக்களுக்கு வேறு வழி இல்லை. நான் வளரும் போதே இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஊரடங்கு, தடை, வன்முறை என பார்த்திருக்கிறேன். அமைதியை ஒருபோதும் பார்த்தது இல்லை'' என்று வெறுப்பில் இருந்த ஓர் இளைஞர் கூறினார்.

``துப்பாக்கி முனையில் அரசு எதையும் செய்யலாம். எங்கள் நிலத்தையும்கூட அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இங்கே நடப்பது எதுவாக இருந்தாலும், அது துப்பாக்கியின் பலத்தால் நடக்கிறது. நிலத்தை அவர்கள் பறிக்கலாம். ஆனால் அவர்களால் அதை வாங்க முடியாது. ஆனால் இது இந்தியாவின் சாமானிய மக்களுக்காக செய்யப்படவில்லை. மாறாக யாருடைய பணத்தில் இந்திய அரசாங்கம் செயல்படுகிறதோ அந்தப் பெரிய முதலாளிகளுக்காக இவ்வாறு செய்யப் படுகிறது. காஷ்மீரிகளுக்கோ அல்லது சாமானிய மக்களுக்கோ இதில் எதுவுமே இல்லை'' என்று அவர் கூறினார்.

புயலுக்கு முந்தைய அமைதியா?

தெளிவான வானத்தின் கீழே அமர்ந்து கொண்டு தால் ஏரியில் தூண்டில் போட்டு சில இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அமைதி ஏற்பட்டுவிட்டதா? இந்தக் கேள்விக்கு,``இது புயலுக்கு முந்தைய அமைதி. காஷ்மீரில் புயல் வீசும். பக்ரீத் முடியட்டும். என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது'' என்று அவர்கள் கூறினர்.

``தொடர்ந்து முடங்கிக் கிடக்க நாங்கள் தயார். இது இப்போது எங்கள் வாழ்வில் பழக்கமாகிவிட்டது. ஆனால் காஷ்மீரை யாருக்கும் விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஒருபோதும் தர மாட்டோம். காஷ்மீர் எங்களுடைய சொர்க்கம். அதற்காக நாங்கள் எதையும் செய்வோம்'' என்று அவர்கள் கூறினர்.

நாங்கள் பேசிய காஷ்மீரிகள் அனைவருமே, காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்யலாம் என்று இந்தியத் தலைவர்கள் பேசியது பற்றி குறிப்பாக பொறுமை இழந்துள்ளனர்.

``எங்களுடைய நிலத்தையும் பெண்களையும் எடுத்துச் செல்வது பற்றி இந்திய மக்கள் பேசுகிறார்கள். நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்று அவர்கள் கேட்டார்கள்.

ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ளது. ஆனால் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படவில்லை. பதற்றத்துடன் உள்ளவர்கள் தங்கள் பாசத்துக்குரியவர்களைக் காண நடந்தே செல்கின்றனர்.

இப்படி நடந்து கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்மணி, ``எனது இளைய சகோதரி எப்படி இருககிறாள் என்பதைப் பார்ப்பதற்காக நான் செல்கிறேன். அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் வீட்டில் உணவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை'' என்று கூறினார்.

விமான நிலையம் செல்வதற்கு லிப்ட் கேட்டு ஏறிய காஷ்மீர் இளைஞர் ஒருவர், சென்னைக்கு டிக்கெட் எடுக்கச் செல்வதாகக் கூறினார். இப்போதைய சூழ்நிலைகள் காரணமாக ஸ்ரீநகரை விட்டு வெளியேறுகிறாரா?

``நான் வியாபாரம் செய்யப் போகிறேன். காஷ்மீருக்கு நான் தேவைப்பட்டால், திரும்பி வருவேன். காஷ்மீர் எங்கள் உயிர். அதற்காக நாங்கள் உயிரையும் தருவோம்'' என்று அவர் பதில் அளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

``நகரில் உள்ள சூழ்நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்று விமான நிலையத்தில் பாதுகாப்பு சர்க்கிளில் நிறுத்தப் பட்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் கேட்டார்.

ஸ்ரீநகர் விமான நிலைய புல்வெளிஅருகே லக்கேஜ்களுடன் ஒரு பெண் நின்றிருந்தார். அவர் விமான பணிப் பெண்.

``நான் 12 மணிக்கு இறங்கினேன். எப்போது வீட்டுக்குச் செல்வேன் என்று தெரியவில்லை. நான் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவள். நான் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், காவல் ஆணையர், மருத்துவமனை மற்றும் எல்லா இடங்களுக்கும் போன் செய்துவிட்டேன். ஆனால் யாருடனும் பேச முடியவில்லை'' என்று அவர் கூறினார்.

``ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாங்கள் வளர்ந்துவிட்டோம். ஆனால் இதுபோன்ற சூழ்நிலையை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். அனைத்து விதமான தொடர்புகளும் துண்டிக்கப் பட்டுள்ளன. இங்கு அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. இருந்தாலும் நான் வந்திருக்கிறேன். என் குடும்பத்தினரைப் பற்றி எதுவும் தெரியாமல் என்னால் வேலை பார்க்க முடியவில்லை என்பதால், இந்த ஆபத்தையும் எதிர்கொண்டு நான் வந்திருக்கிறேன்.''

காஷ்மீரி பெண்கள் பற்றிய கருத்துகளுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். ``காஷ்மீரி பெண்களைத் திருமணம் செய்யலாம் என்ற மீம்ஸ்களை நான் பார்த்தேன். அதைப் பார்த்த பிறகு டெல்லி மெட்ரோவில் பயணிக்கவே எனக்கு கூச்சமக இருந்தது'' என்று அந்தப் பெண்மணி கூறினார்.

நாங்கள் வருத்தமான சூழ்நிலையில் இருப்பதை நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் பற்றி பகடி செய்வதற்குப் பதிலாக அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எங்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஆனால் வேறு எங்கும் இந்த நிலையைக் காண முடியாது.''

தொழிலாளர்கள் வேலையை விட்டுவிட்டு திரும்புகின்றனர்

ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வரும் விமானங்களில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அவர்களைப் பொருத்த வரை இது இரு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியைப் போன்ற சூழ்நிலை. அவர்கள் வேலையை விட்டுவிட்டு வர வேண்டிய கட்டாயம். அதிக செலவு பிடிக்கும் விமானக் கட்டணத்துக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதும் மோசமான சூழ்நிலை.

விமானக் கட்டணங்களை ஒரு வரம்புக்குள் வைக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் உயர்த்தப்பட்ட விமானக் கட்டணங்களைச் செலுத்துமாறு, தொழிலாளர்கள் நிர்பந்திக்கப் பட்டுள்ளனர். பிகாரைச் சேர்ந்த சாதிக் உல் அலாம் என்பவர் என்னுடன் திரும்பி வந்தார். அவர் டெல்லி வருவதற்கு ஆறாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துள்ளார்.

அவருக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அதே டிக்கெட் எடுத்த இன்னொருவர் ரூ.4200 செலுத்தியுள்ளார்.

``இணையதள வசதி இல்லாததால், என்னைப் போன்றவர்கள் கவுண்ட்டரில் தான் டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. நேரம் போகப் போக டிக்கெட் கட்டணம் அதிகரிக்கிறது. நான் இரண்டு டிக்கெட்கள் வாங்கினேன் இது என் ஒரு மாத சம்பளம். வேலையை இழந்தது மட்டுமின்றி, இப்போது என்னுடைய சேமிப்பும் போய்விட்டது'' என்று அவர் கூறினார்.

விமானம் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டதும், கனமான மேகக் கூட்டங்களுக்கு மேலே செல்கிறது. அமைதியை இந்த மேகங்கள் அடையாளப் படுத்துவதைப் போல தெரிகிறது. தரையில் காணவோ உணர முடியாத அமைதியை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: