காஷ்மீர் பற்றி இந்தியாவில் பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள் - ஓர் அலசல்

  • நந்தினி சுந்தர்
  • பேராசிரியர், சமூக செயல்பாட்டாளர்
காஷ்மீர்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே, இவை பிபிசியின் கருத்துகள் அல்ல.)

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு திடீரென ரத்து செய்யப்பட்ட இரு தினங்கள் கழித்து, டெல்லியைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவருடன் நான் ஒரு பந்தயம் கட்டினேன். இன்னும் ஓர் ஆண்டில், ராணுவத்தினர் தேவைப்படாத அளவுக்கு காஷ்மீரில் நிலைமை 'சாதாரணமாகிவிடும்' என்று அவர் கூறினார்.

அதற்குப் பிறகும் அங்கு ராணுவம் இருந்தால், எனக்கு மஹிபல்பூரில் விருந்து வைப்பதாக அவர் கூறியிருக்கிறார். காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே அந்த மக்களின் நன்மைக்காகத்தான் செய்யப்படுகின்றன என்பது போன்ற நம்பிக்கைகள் இந்தியாவில் சாதாரண குடிமக்கள் மனதில் ஏற்படுத்தப் படுகின்றன.

அரசியல் சட்டப்பிரிவு 370 குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, காஷ்மீர் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைத் தருவதற்காக வரலாற்று முக்கியத்துவமான இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

''இப்போது இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளும், கடமைகளும் உள்ளன,'' என்று அவர் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியலிட்டார்.

இருந்தபோதிலும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய அமித் ஷாவும், மோதியும் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் கூறிக் கொள்கிறார்கள். அதனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்குப் பயன்தரக் கூடிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவற்றில் சிறிதுகூட சாத்தியம் உள்ளதா என தெரியவில்லை.

முதலில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களால் காஷ்மீர் மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நமக்குச் சொல்லப் பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் பட்டிருப்பதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளில் அது பலவீனப் படுத்தப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நாடோடி மக்களுக்கு வன உரிமைச் சட்டம் ஆகியவை விரிவுபடுத்தப்படும் என்பது பெரிய விஷயம் என்று கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்து, தாழ்ப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக பலவீனப்படுத்தாமல் இருந்திருந்தால் இது சாத்தியம்.

கத்துவாவில் இஸ்லாமிய நாடோடிக் குழுவான பகர்வால் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக செயல்படாமல் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் பாஜகவுக்கு அக்கறை இருக்கிறது என்று கூறுவது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.

இரண்டாவதாக, இப்போது தொழில் துறையினர் முதலீடு பெருகும் என்பதால், 370 ரத்து காரணமாக, காஷ்மீர் வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளனர். இந்தியாவின் பிற பகுதிகளில் முதலீடுகள் குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் காஷ்மீரில் முதலீடு செய்யத் தொடங்கும் என்பதை எப்படி நம்ப முடியும்? மிக எளிதாக தகவல் தொடர்பைத் துண்டித்துவிட முடியும் என்ற வாய்ப்புள்ள நிலையில், காஷ்மீரில் எந்த பி.பி.ஓ. நிறுவனம் முதலீடு செய்யும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

காஷ்மீரில் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு 370வது பிரிவுதான் தடையாக இருக்கிறது என்றால், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரெஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, குஜராத்தைக் காட்டிலும் ஜம்மு காஷ்மீரின் மனிதவள மேம்பாடுக்கான குறியீடு எப்படி அதிகமாக இருந்திருக்க முடியும்?

ஜம்மு காஷ்மீரின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட குறைவு. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தைவிட அது அதிகம். 370வது சட்டப்பிரிவு இருந்தபோதிலும், நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காஷ்மீரில் வேலைபார்த்து வருகின்றனர்.

சிறப்பு அந்தஸ்து இருந்த காரணத்தால்தான் காஷ்மீரில் நில சீர்திருத்தத்தை ஷேக் அப்துல்லாவால் அமல்படுத்த முடிந்தது. அதனால்தான் சராசரி காஷ்மீரியின் பொருளாதார நிலைமை உயர்ந்தது என்ற அசவுகர்யமான உண்மையை நாம் கொஞ்சம் மறந்து வைப்போம். காஷ்மீர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வேண்டும்தான். ஆனால், அவர்களின் மகிழ்ச்சிக் குறைவுக்கு மூல காரணம் பொருளாதாரம் சார்ந்தது அல்ல, அரசியல் சார்ந்தது.

மூன்றாவது, காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்தி, அனைத்துப் பயன்களையும் அனுபவித்து வந்த செல்வாக்குமிக்க மூன்று குடும்பத்தினர், பாஜாக எடுத்த தைரியமான நடவடிக்கை காரணமாக, இனி மக்களைத் தேடிச் செல்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாஜகவிலேயே குடும்ப அதிகார ஆதிக்கம் இருந்தால் அதுபற்றி கவலைப்படாதீர்கள்.

நான்காவதாக, 35-ஏ பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தைச் சாராதவர்களும் நிலம் வாங்க வகை செய்யப் பட்டிருப்பதால், உள்ளூர் மக்களுக்கு அதிக விலை கிடைக்கச் செய்திருப்பது மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான நடைமுறையை ஒழித்து காஷ்மீரி பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. 35வது பிரிவில் உள்ள பாலின அடிப்படையிலான பாகுபாடு குறித்த விஷயம் பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கே அதற்கு எளிதில் தீர்வு கண்டிருக்க முடியும்.

அழகிய நிறத்தில் உள்ள காஷ்மீரி பெண்களைத் திருமணம் செய்யலாம் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சியுடன் பேசியபோது பாலியல் ரீதியில் அத்துமீறல்கள் இருக்குமோ என்ள லேசான அச்சமும் ஏற்பட்டுள்ளதால் இணைப்பு என்று சொல்லப்படும் இந்த நடவடிக்கையால் உரிமைகள் கிடைத்துவிட்டதாக காஷ்மீரி பெண்கள் கொண்டாட முடியுமா என்று சிந்திப்பது கடினமாக உள்ளது.

நாடு முழுக்க தங்களது இந்து சகோதரர்கள் மற்றும் கணவர்களுக்கு எதிராக இந்துப் பெண்களுக்கு நில உரிமைகள் அமல் செய்யப்படும் அதே உறுதிப்பாட்டுடன் காஷ்மீரிலும் அதை பாஜக அமல் செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தங்கள் மாநிலத்தில் வேலை தர வேண்டும் என்று கோரி சிவசேனா போராட்டம் நடத்தியுள்ளது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் விற்கத் தடை செய்யும் சட்டங்கள் இமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ளன. நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்கள் இன்னும் அரசியல் சாசனத்தின் சிறப்புப் பிரிவுகளின் கீழ் தான் நிர்வகிக்கப் படுகின்றன.

காஷ்மீர் வளர்ச்சியில் அக்கறை காட்டும் மத்திய அரசு, இந்த மாநிலங்களைப் பற்றி ஏன் அதிக அக்கறை காட்டவில்லை என்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதம் குறைந்துவிடும் என்பது ஐந்தாவது விஷயமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. பண மதிப்பு நீக்கம் காரணமாக பயங்கரவாதிகளுக்குப் பணம் கிடைப்பது தடுக்கப் பட்டுவிடும், ஊடுருவல் தடுக்கப்படும் என்றெல்லாம் முன்பும் வாக்குறுதிகள் அளிக்கப் பட்டுள்ளன. ஆனால், தாக்குதல்கள் தொடர்கின்றன. குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ் நடந்த புல்வாமா தாக்குதலும் இதில் அடங்கும்.

காஷ்மீரிகள் தனிமைப் படுத்தப்பட்டு இருந்ததற்கான அனைத்து காரணங்களும் அப்படியே தொடரும். மனித உரிமை மீறல்கள் - கொலைகள், பெல்லட் எனப்படும் சிறிய உலோக குண்டு தாக்குதல்கள், தடுப்புக்காவல் மற்றும் சித்ரவதை சமீபத்தில் ஐ.நா. தூதர் குறிப்பிட்ட விஷயம் இது இவை அனைத்தும் புதிதாக உருவாக்கப்படும் யூனியன் பிரதேசத்தின் குடிமக்களுடைய நினைவுகளில் மறந்துவிடப் படாத விஷயங்களாகவே இருக்கும்.

துப்பாக்கி ஏந்தி இதற்குப் பதிலடி தர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆயுதங்கள் மற்றும் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்குச் செல்வார்கள். 370வது சட்டப் பிரிவு நீக்கப்படுவதால் புவியியல் எல்லையில் மாற்றம் வந்துவிடவில்லை. ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருப்பதால் தீவிரவாதத் தாக்குதல் கட்டுப்படுத்தப்ப டலாம். ஆனால் இது மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கப் போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகமே.

ஜம்மு காஷ்மீர் பிரிக்கப் பட்டிருப்பதை பெரிய ஊடகங்களும், கட்சி வித்தியாசமின்றி அரசியல் தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருப்பதும், காஷ்மீர் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் பற்றி மற்றவர்கள் மவுனம் காப்பதும், உண்மையில் இந்திய குடிமக்களுக்கு நிகராக காஷ்மீர் மக்களை அவர்கள் ஒருபோதும் கருதுவது கிடையாது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

அவர்களுக்கு அரசியல்சாசனத்தில் ஒருபோதும் நம்பிக்கை கிடையாது என்பதையும் அது காட்டுகிறது. குறிப்பிட்ட பகுதி மக்களைக் கேட்காமல் அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டை நீங்கள் கட்டாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது, அதிக உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.

(நந்தினி சுந்தர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பணியாற்றுகிறார்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: