காஷ்மீர் விவகாரம்: அரசமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் அதுசார்ந்த போலிச் செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: அரசமைப்பு சட்டம் 370 மற்றும் அதுசார்ந்த போலிச் செய்திகளும் படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அரசமைப்பு சட்டம் 370இன் படி, ஜம்மு & காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமை நீக்கப்படுவதாக சென்ற வாரம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நோக்குடன் பாரதிய ஜனதா அரசு அறிமுகம் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிராந்தியத்தை தனி யூனியன் பிரதேசமாகவும் உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

ஆனால் இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரி இருக்காது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்மொழிந்த மசோதாவின்படி ஜம்மு & காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக சட்டமன்றத்துடன் இருக்கும். ஆனால் லடாக் பிராந்தியத்துக்கு அந்த அந்தஸ்து கிடைக்காது.

மேற்கண்ட அறிவிப்புகளை கடந்த ஐந்தாம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் வெளியிட்டது முதல், இதுதொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் சில முக்கியமான தகவல்களை பிபிசி ஆராய்ந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

தகவல்: இந்திய அரசமைப்பு சட்டத்திலிருந்து பிரிவு 370 நீக்கப்பட்டது

உண்மை நிலவரம்: ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவோம் என்று 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 370, உட்பிரிவு 1இன் படி, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையிலான உத்தரவை இம்மாதம் ஐந்தாம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

"சட்டப்பிரிவு 370 என்பது இந்தியாவின் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று. ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கி வந்த அந்த சட்டப்பிரிவின் சிறப்புரிமைகளை அதை கொண்டே குடியரசுத் தலைவர் நீக்கினார்" என்று சட்ட வல்லுநர் பைசான் முஸ்தபா கூறுகிறார்.

"சட்டப்பிரிவு 370இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அதே சட்டப்பிரிவு திருத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தகவல்: இதற்கு முன்னர் இந்திய தேசிய கொடி காஷ்மீரில் பறக்கவிடப்படவில்லை

உண்மை நிலவரம்:கடந்த 67 ஆண்டுகளாக ஜம்மு & காஷ்மீரின் மாநில அரசின் கட்டடங்களிலும், நிகழ்வுகளிலும் இந்திய தேசிய கொடியுடன், அம்மாநிலத்தின் பிரத்யேக கொடியும் பறக்கவிடப்பட்டது.

ஆனால், தற்போது அரசமைப்பு சட்டப்பிரிவு 370இன்படி ஜம்மு & காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்திய நாட்டின் கொடி மட்டுமே அங்கு பறக்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை கொடுக்கப்பட்டு வந்தபோதிலும், அங்கு இந்திய தேசிய கொடியை அவமதிப்பது, நாட்டின் ஏனைய மாநிலங்களை போன்று சட்டரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

தகவல்: ஜம்மு & காஷ்மீருக்கு தனியே அரசமைப்பு சட்டம் இருந்தது. அங்கு இந்தியாவின் சட்டவிதிகள் அமல்படுத்தப்படவில்லை.

உண்மை நிலவரம்: இந்திய அரசின் மூலம் உருவாக்கப்படும் புதிய சட்டங்கள் எதையும் விரும்பாத பட்சத்தில், அதை நிராகரிக்கும் உரிமையை ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 370 வழங்கியது. ஆனால், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்து பிறகு, நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட பல்வேறு புதிய சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம், அரசமைப்பு சட்டப்பிரிவு 370இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜம்மு & காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, மத்திய புலனாய்வு அமைப்பு, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்றவை நாட்டின் மற்ற பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலும் அதன் சட்டப்பேரவையின் அனுமதியுடன் அமலுக்கு வந்தன.

தற்போது ஜம்மு & காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் உடனடியாக ஜம்மு & காஷ்மீரிலும் நடைமுறைக்கு வரும். இதற்கு முன்னர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு, ஜம்மு & காஷ்மீரில் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டங்கள் இனி அமலுக்கு வருவதாக மக்களவையில் தனது உரையின்போது அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இப்போது வரை ஜம்மு & காஷ்மீருக்கு தனியே அரசமைப்பு இருந்தது என்பது உண்மையே. இந்த சிறப்பு அரசமைப்பு 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. ஜம்மு & காஷ்மீரின் அரசமைப்பு என்பது, இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 370யின் கீழ் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

தகவல்: காஷ்மீரிகளுக்கு இரட்டை குடியுரிமை உள்ளதால் பாகிஸ்தானுக்கு எளிதில் செல்லலாம்.

உண்மை நிலவரம்: ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தின்படி இரட்டை குடியுரிமை அளிக்கப்படவில்லை.

இந்தியாவின் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் வாழும் அனைவருமே இந்தியாவின் குடிமக்கள். இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டை கொண்டு, மற்ற பகுதிகளை சேர்ந்த இந்தியர்களை போலவே முறைப்படி விசாவுக்கு விண்ணப்பித்துதான் பாகிஸ்தானுக்கு செல்ல முடியும்.

தகவல்: காஷ்மீரில் மட்டுந்தான் இந்தியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் நிலத்தை வாங்க முடியாது.

உண்மை நிலவரம்: ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் வாங்குவது தொடர்பான இந்த சிறப்புரிமை இந்தியாவின் மற்ற சில பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சட்ட வல்லுநர் குமார் மிஹிர், "உத்தராகண்ட், ஹிமாச்சல்பிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த சில பகுதிகள், அதிகளவில் பழங்குடியினர் வாழும் சில பகுதிகள் ஆகியவற்றிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், தற்போது ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புரிமை பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்த விதிகள் பொருந்தாது.

தகவல்: ஜம்மு & காஷ்மீரில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலில் இல்லை.

உண்மை நிலவரம்: இந்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம், இரண்டாண்டுகளுக்கு பிறகே மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் ஜம்மு & காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

எனவே, அரசமைப்பு சட்டப்பிரிவு 370இன் காரணமாக ஜம்மு & காஷ்மீரில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது தவறான தகவலாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்