மலைவாழ் பழங்குடியினர்: “மனித உயிர்கள் பலியானால் பொறுப்பேற்க முடியாது” - தமிழக வனத்துறை

படத்தின் காப்புரிமை Getty Images

தினமணி: "மனித உயிர்கள் பலியானால் பொறுப்பேற்க முடியாது"

வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது என தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி .

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவரான வி.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், அனைவருக்கு வீடு திட்டத்தின் கீழ், கீழ் ஆலந்துறை, களிமங்கலம் பகுதிகளில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் 2500 வீடுகளும், பச்சனவயல் கிராமத்தில் 70 வீடுகள் என மொத்தம் 4 ஆயிரத்து 710 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் பெருகி வருவதால், எங்களது குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. வனப்பகுதியில் தொடரும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் நிலச்சரிவு அபாயம், விலங்குகள் நடமாட்டம், இயற்கை வள பாதிப்பு, மழை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகள் சட்ட விரோதமாக கட்டப்படுவதால் இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக தமிழக வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்துக்காக தமிழக வனத்துறை வழங்கியுள்ள தடையில்லாச் சான்றிதழ் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தடையில்லாச் சான்றில் சில வித்தியாசமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆலந்துறை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 29 ஆயிரம் சதுர மீட்டருக்கு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இந்தப் பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இங்கு வீடுகள் கட்டினால் மனிதர்கள் விலங்குகள் மோதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தடையில்லாச் சான்று வழங்கப்படுகிறது.

யானைகளுக்குப் பிடித்தமான பயிர்களை இந்தப் பகுதிகளில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் குடியிருப்பைச் சுற்றி அகழி அமைக்க வேண்டும்.

வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கேமரா உள்ளிட்ட முன்னெச்சரிக்கை உபகரணங்களை இந்தப் பகுதிகளில் பொருத்த வேண்டும். குடியிருப்புகளைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். யானைகள் வந்தால் பொதுமக்கள் அவற்றை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வனவிலங்குளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையிலான தடைகளை ஏற்படுத்தவோ, இயற்கையான நீரோடைகளைத் தடுக்கவோ கூடாது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் கட்டடங்கள் சேதம் அடைந்தாலோ, மனித உயிர்களுக்கு பலி ஏற்பட்டாலோ அதற்கு வனத்துறை பொறுப்பேற்காது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையிடம் இழப்பீடு எதுவும் கேட்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன், ஒரு திட்டத்தால் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றால் மட்டுமே தடையில்லாச் சான்று வழங்கப்படும். ஆனால் பாதிப்பு இருக்கும் அந்த பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என வித்தியாசமான நிபந்தனைகளுடன் தடையில்லாச் சான்றை தமிழக வனத்துறையினர் வழங்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளதாகக் கூறி வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினத்தந்தி : "ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது"

படத்தின் காப்புரிமை Getty Images

தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் காணப்படுகிறது. இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக் கத்தில் இருந்து விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 582-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 656-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ(புதன்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.293-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 344-ம் உயர்ந்து இருக்கிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை குறைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளி விலையும் அதிகரித்து இருந்தது.

நேற்று மாலையில் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "நான்கு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு"

படத்தின் காப்புரிமை Getty Images

தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த நிர்வாகி கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

காப்பகத்தை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் (வயது41) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். காப்பகத்தில் தங்கி உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார்கள் எழுந்தன. மாவட்ட குழந்தைகள் நல குழு விசாரணை நடந்த்தியது.அங்கு தங்கி உள்ள சிறுவர் - சிறுமிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது 4 சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆதிசிவன் பலமுறை அவரது அலுவலகத்தில் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர்.

இந்து தமிழ்: "இருண்ட சக்திகளை முறியடிக்க..."

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா ஒரு ஆழமான நெருக்கடியில் தத்தளித்து வருகிறது, இருண்ட சக்திகளை முறியடிக்க சரியான முறையில் சிந்திக்கும் நற்சிந்தனையாளர்களின் ஒத்துழைப்பு இப்போது தேவைப்படுகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகே முதன்முறையாக மவுனம் கலைத்த மன்மோகன் சிங் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி குறித்த நினைவு கூட்டத்திற்கிடையே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது "இந்தியா என்ற கருத்து நீண்ட காலம் இருக்க வேண்டுமானால் உங்கள் குரல்களை எழுப்ப வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கு அரசு செய்திருப்பது நாட்டின் பலரின் ஆதரவைப் பெறாதது. இந்த மக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். நம் குரல்களை உயர்த்துவதன் மூலம்தான் இந்தியா என்ற கருத்தை நாம் நீண்ட காலத்துக்கு தக்க வைக்க முடியும். இது நமக்கு மிகவும் புனிதமானது தொடர்ந்து தக்க வைக்கப்பட வேண்டியது அவசியம்" என்றார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நினைவுக் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், "இந்தியா ஓர் ஆழமான நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆகவே நற்சிந்தனையாளர்கள் பலர் ஒத்துழைப்பு நல்குவது ஒன்றுதான் இந்த இருண்ட சக்திகளுக்கு சவாலாக இருக்க முடியும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங் தவிர மணி சங்கர ஐயர், சுபாத் காந்த் சஹாய், மற்ற மூத்த தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்