காவிரி நீர்: ஒகேனக்கலில் 3 லட்சம் கன அடி நீர்; மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை படத்தின் காப்புரிமை SALEM.NIC.IN
Image caption மேட்டூர் அணை (கோப்புப்படம்)

காவிரியின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் இன்று அதிகாலையில் 100 அடியைத் தாண்டிய நிலையில், பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அணையைத் திறந்துவைத்தார்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கன மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளிலுமிருந்து இரண்டு லட்சத்து 73 ஆயிரம் அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. திங்கட்கிழமை இரவில் ஒகேனக்கலுக்கு சுமார் மூன்று லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.

கடந்த 9ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 54 அடியாக இருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 46 அடி உயர்ந்து இன்று காலை சுமார் நான்கரை மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது.

மேட்டூர் அணை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் அணை திறக்கப்படவில்லை.

தற்போது நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியிருக்கும் நிலையில், காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அணையைத் திறந்துவைத்தார்.

முதற்கட்டமாக அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 10 ஆயிரம் அடியாக உயர்த்தப்படும். 137 நாட்களுக்கு அணை திறக்கப்பட்டிருக்கும்.

காவிரி அணை திறக்கப்பட்டிருப்பதால் டெல்டா பகுதியில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடந்த ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள முக்கொம்பு அணை சேதமடைந்தது. அதன் சில மதகுகள் உடைந்தன. இதன் மூலம்தான் காவிரியில் வரும் நீர் கொள்ளிடத்திற்கு மாற்றப்படுகிறது.

தற்போது சேதமடைந்த மதகு பகுதியில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இருந்தபோதும், அந்தப் பகுதி முழுமையாக மூடப்படாததால் அதன் வழியாக நீர் கொள்ளிடத்தில் பாய்ந்து கடலில் கலக்கும் என்ற அச்சம் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்