வைகோ :''இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்காது''

வைகோ படத்தின் காப்புரிமை வைகோ

இந்தியாவில் காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்காது என வைகோ நேற்றைய தினம் பேட்டியளித்தது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. இன்றைய தினம் சமூக வலைதளங்களில் அவரது கருத்து விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை ரஜினி வரவேற்றிக்கிறார். தலை வணங்குவதாகவும் கூறியிருக்கிறார் மோதியும் அமித்ஷாவும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் போல எனக் கூறியிருக்கிறார் இது குறித்து உங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் வைகோவிடம் நேற்றைய தினம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த வைகோ, '' காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரை நான் 30 சதவீதம் காங்கிரசை தாக்கியிருக்கிறேன். 70 சதவீதம் பாஜகவை தாக்கியிருக்கிறேன். காஷ்மீர் இந்தியாவில் இருக்காது. இந்தியாவின் சுதந்திரத்தை நூறாவது ஆண்டு கொண்டாடும்போது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என வரலாறு எழுத போகிறது. புதை மணலில் இந்தியாவை சிக்கவைத்துவிட்டார்கள். இதுதான் என் கருத்து'' எனக்கூறியுள்ளார்.

வைகோவின் பேட்டியை இங்கே பாருங்கள்.

வைகோவின் இந்த கருத்துக்கு ட்விட்டரில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

வைகோ விளம்பரத்துக்காக இப்படிச் செய்வதாக ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

''எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது - வைகோ. எதிர்காலம் இல்லாத நபரின் ஆருடங்கள் செல்லாக்காசு'' என பாஜக செய்தி தொடர்பாளர் நாரணயன் திருப்பதி தெரிவித்துளளார்.

வைகோவும் காஷ்மீர் விவகாரமும்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவும் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை ரத்துசெய்யவுமான மசோதாக்கள் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அப்போது மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். அந்தப் பேச்சில் அவர் காங்கிரஸ் கட்சியையும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் கடுமையாகத் தாக்கினார்.

"காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு வாக்குறுதியளித்தார். ஆனால், நடத்தப்படவில்லை. இதையடுத்து 1958ல் ஷேக் அப்துல்லா போராட்டம் நடத்தினார். அவர் கொடைக்கானலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதையே பொது வாக்கெடுப்பு என்று சொன்னார்கள். ஒரு மோசடியை காங்கிரஸ் கட்சி நிகழ்த்தியது.

எனக்கு நேருவின் மீது மரியாதை இருக்கிறது. அவர் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது.

ஆனால், பொது வாக்கெடுப்பு குறித்து அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 370வது பிரிவு, 35 ஏ பிரிவுகளின் மூலம் தனித்துவம் பாதுகாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும், இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது.

1980களில் நான் ஷேக் அப்துல்லாவைச் சந்தித்தபோது அவர் சொன்னார், நன்றி, நட்புணர்வு ஆகிய வார்த்தைகளே காங்கிரசின் அகராதியில் கிடையாது. தனியாக மாநிலம், தனியாக அரசியல்சாஸனம், தனியாக அரசியல் சாஸன அவை, தனியாக ஒரு பிரதமர் போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸால் அளிக்கப்பட்டன. இந்த வாக்குறுதிகளை பா.ஜ.க. அளிக்கவில்லை. நீங்கள் (காங்கிரஸ்) அளித்தீர்கள். அடிக்கடி அரசுகளைக் கவிழ்த்தீர்கள். நீங்கள் காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடினீர்கள்" என்று மாநிலங்களவையில் ஆவேசமாகப் பேசினார் வைகோ.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. கொண்டுவந்த மசோதாக்களுக்கு எதிராகப் பேசிவந்த நிலையில், வைகோ காங்கிரஸைத் தாக்கிப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கட்சித் தொண்டர்கள் விமர்சித்து வந்தாலும், தலைவர்கள் யாரும் இது தொடர்பாக பேசவில்லை.

இதற்கு நடுவில் பிரதமர் நரேந்திர மோதி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை வைகோ சென்று சந்தித்ததும் காங்கிரஸ் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வைகோவைக் கடுமையாகச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், " காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேச எடுத்துக்கொண்ட நேரத்தின் பெரும் பகுதியில் அவர் காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். வைகோவின் அரசியல் பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்வார்கள். 18 ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த தி.மு.க.வுக்கு பச்சை துரோகம் செய்தவர்" என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்தபோது அதற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியவர் வைகோ என்றும் 'தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. தளபதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகி விடக் கூடாது" என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார் அழகிரி.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, அழகிரி தன் மீது வன்மத்துடன் குற்றம்சாட்டுவதாகக் கூறினார்.

"தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி நான் காங்கிரஸின் தயவால் ராஜ்யசபாவுக்குச் சென்றதாகக் கூறியிருக்கிறார். இது தவறு. என் மீதுள்ள வன்மத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார். தி.மு.கவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு ராஜ்யசபா எம்.பியைத் தேர்வுசெய்ய 34 எம்எல்ஏக்கள் போதும்.

3 எம்பிக்களைத் தேர்வுசெய்ய 102 எம்எல்ஏக்கள் போதும். தி.மு.க. என்னைத் தேர்வுசெய்து அனுப்பியது. 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்திருக்கிறார்கள். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கிடையாது. அவர்கள் வாக்களித்து என்னை அனுப்பியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் என்னை அனுப்பவில்லை" என்றார். மேலும் , ஓர் இனத்தையே அழித்த பாவிகள் காங்கிரஸ் என்றும் குற்றஞ்சாட்டினார்.

மோதியைத் தான் சந்தித்தபோது நான் உங்களை எதிர்த்து வாக்களிப்பேன் என்று கூறியதாகவும் காங்கிரஸ் கட்சியில் மக்களவையில் 12 பேர் ஓட்டுப்போடாமல் ஓடிப்போய்விட்டார்களே, அவர்கள் எவ்வளவு காசு வாங்கினார்கள் என்றும் வைகோ கேள்வியெழுப்பினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்