அம்பானியின் ரிலையன்சில் சௌதி அரசின் அரம்கோ முதலீடு செய்வது ஏன்?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் செளதி அரம்கோ

பட மூலாதாரம், Getty Images

நன்கு அறியப்பட்ட செளதி அரேபிய அரசு நிறுவனமான அரம்கோ, ரிலையன்ஸின் பெட்ரோலிய எண்ணெயில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் வணிகத்தில் 20% பங்கு முதலீடு செய்யும்  என்று திங்களன்று நடைபெற்ற தனது நிறுவனத்தின் 42வது ஆண்டுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

அரம்கோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 75 பில்லியன் டாலர்கள். முகேஷ் அம்பானி, ஒழுங்குமுறை முகமைகளிடமிருந்து நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

"ரிலையன்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டிருப்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் மற்றும் செளதியின் அரம்கோ ஆகியவை நீண்டகாலம் கூட்டாக தொழில் நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.

ரிலையன்ஸின் வணிகம் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு நாளைக்கு 1.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.  

வருவாயில் மர்மம்

செளதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் வருவாய் நீண்ட காலமாக ஒரு மர்மமாக இருந்தது. அந்நாட்டு அரசு,  அதை எப்போதும் மறைத்து வைத்திருந்தது.

Aramco Reliance India

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அரம்கோ அந்த ரகசியத்தை அகற்றி, கடந்த ஆண்டு 111.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாகக் கூறியது. உலகில் எந்தவொரு நிறுவனமும் இந்தளவுக்கு வருவாய் ஈட்டவில்லை.

2018ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 59.5 பில்லியன் டாலர்கள் ஆகும். இதனுடன் சேர்ந்து, பிற எண்ணெய் நிறுவனங்களான ராயல் டச்சு ஷெல் மற்றும் எக்ஸானும் இந்த பந்தயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. அரம்கோ அதன் வருவாயை பகிரங்கப்படுத்தியதோடு அதன் திறன் என்ன என்பதை வெளிப்படுத்தியது.

அராம்கோவின் நிதித் தரவை வெளியிடுவது பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் 15 பில்லியன் டாலர் மூலதனத்தை திரட்டுவதற்கான ஓர் ஏற்பாடாகக் காணப்பட்டது.

சொத்தை பகிரங்கப்படுத்திய பின்னர், மூலதனத்தை திரட்டுவதற்கு அரம்கோவும் செளதி அரேபியாவும் மிகவும் தீவிரமான அணுகுமுறையை பின்பற்றலாம் என்று கூறப்பட்டது. செளதி அரேபியா, தனது வருமானத்திற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை மட்டுமே சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்கிறது.

பன்முகப்படுத்தப்பட வேண்டும்

செளதி அரேபியாவின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த வேண்டும், எண்ணெய் வணிகத்தையே முற்றிலும் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்று பட்டத்து இளவரசர் சல்மான் விரும்புகிறார். எனவே, செளதி அரேபியா தொழில்நுட்ப நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் செளதி அரம்கோ

பட மூலாதாரம், Getty Images

இதன் கீழ், உபேர் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களிலும் செளதி அரேபியா முதலீடு செய்துள்ளது. மேலும் மூலதனத்தை திரட்டுவதற்காக அரம்கோ தனது பங்குகளை விற்கவும் திட்டமிட்டது. இருந்தாலும், இந்த திட்டம் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு செளதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி படுகொலை செய்யப்பட்டதில் செளதியின் பங்கிற்குப் பிறகு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த தனது நாட்டை அந்த தாக்கத்தில் இருந்து மீட்டெடுக்க பட்டத்து இளவரசர் புதிய முதலீடுகளின் மீது கவனம் செலுத்துகிறார்.

அரம்கோ ஒரு பெரிய எரிசக்தி உற்பத்தியாளராக மாற விரும்புகிறது, அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் அதன் சில பங்குகளை விற்க முடிவு செய்தால், அது அதற்கு சாதகமாக இருக்கும்.

நிறுவனம் எரிவாயு துறையில் தீவிரமாக செயல்பட விரும்புகிறது, இதனால் எண்ணெய் போன்ற எரிவாயு தொழிலில் முதலிடம் பெற முடியும் என்று அரம்கோவின் தலைமை நிர்வாகி, அமீன் நசீர் தெரிவித்தார். 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் செளதி அரம்கோ

பட மூலாதாரம், Getty Images

அராம்கோவின் வருவாயை பார்த்தால்,  அதன் எதிர்காலமானது, எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வீழ்ச்சியைப் பொறுத்தது என்பதும் தெளிவாகிறது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச அளவில், எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது, அரம்கோவின் வருவாய் வெறும் 13 பில்லியன் டாலர்களாக இருந்தது.  

இருந்தாலும், அரம்கோ மற்றும் செளதியின் உறவு முதலீட்டாளர்களுக்கு எப்போதுமே ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன் ஆலோசனை நிறுவனமான யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் அய்ஹாம் கமல் சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் குறிப்பில் எழுதினார், "அரம்கோவின் வருவாய், ஆக்சன் மற்றும் செவ்ரான் போலல்லாமல், முற்றிலும் ஒரு நாட்டை மட்டுமே சார்ந்திருக்கிறது, இது அதன் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தானது."

கணக்கிட முடியாத மூலதனம்

அரம்கோவின் நிதித் தகவல்கள் திங்களன்று வெளியிடப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர், அது அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் பல நிறுவனங்களை கையகப்படுத்தும் சக்தி கொண்டது என்பது தெரியவந்தது. அரம்கோவுக்கு கணக்கிட முடியாத மூலதனம் இருப்பதாக மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் மேலாளர் டேவிட் ஜி. ஸ்டேபிள்ஸ் திங்களன்று கூறினார்.

Aramco

பட மூலாதாரம், Getty Images

எந்தவொரு கடனும் இல்லாமலும்,  பங்குகளை விற்காமல் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியுள்ளது என்று ஸ்டேபிள்ஸ் மற்றும் அவரது சக ஊழியர் ரெஹான் அக்பர் கூறுகின்றனர்.

2018ஆம் ஆண்டில், அரம்கோ செளதி அரசுக்கு 160 பில்லியன் டாலர்களை செலுத்தியது. அரம்கோ எண்ணெய் உற்பத்தியில் இருந்து அதிகம் சம்பாதித்துள்ளது என்று மூடிஸ் கூறுகிறது. அரம்கோ உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ளது மற்றும் அவற்றை மிகக் குறைந்த விலையில் பெற்றுள்ளது.

அரம்கோவின் இந்த நிதிபற்றிய தகவல் வெளியான பிறகு, செளதி அரேபியாவின் பெரிய எண்ணெய் வயல்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. செளதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கவார் மிகப்பெரிய எண்ணெய் வயல் ஆகும்.

இதன் பரப்பளவு சுமார் 193 சதுர கி.மீ. என்றால் அதன் பிரம்மாண்டத்தை புரிந்துக் கொள்ளலாம். சௌதி அரேபியாவின் மொத்த எண்ணெய் இருப்பில் இந்த எண்ணெய் வயல் சரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 48 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இங்கே உள்ளது.

அரம்கோ ஆயில் நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் இருந்தது. இது முதல் முறை பங்குகள் விற்பனைக்கு வெளியிடப்படுவதில் மிகப்பெரிய அளவு என்று அழைக்கப்படுகிறது.

விஷன் 2030

அரம்கோவின் ஐபிஓ முகமது பின் சல்மானின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் கீழ் அவர் செளதியை எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து வெளியேற்ற விரும்புகிறார். செளதி அரேபியாவில், ஓர் எண்ணெய் நிறுவனத்தைவிட ஆரம்கோ அரச குடும்பத்திற்கு முக்கியமானது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் செளதி அரம்கோ

பட மூலாதாரம், Getty Images

இந்த நிறுவனம் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. அரம்கோ அல்லது 'அரபு அமெரிக்கன் ஆயில் கம்பெனி' 1970களில் செளதியால் தேசியமயமாக்கப்பட்டது.

திங்களன்று, அரம்கோவின் வருவாய் அறிவிக்கப்பட்டது, அதன் அடிப்படையில், இது ஒன்றரை டிரில்லியன் டாலர் கொண்ட நிறுவனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இது போதாது, அரம்கோ இரண்டு டிரில்லியன் டாலர் நிறுவனமாக வளர வேண்டும் என பட்டத்து இளவரசர்  சல்மான் விரும்புகிறார். இந்தியா தனது பொருளாதாரம் ஐந்து டிரில்லியன் டாலர்களாக உயர்த்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரம்கோ தொடர்பாக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது-பின் சல்மானுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே பட்டத்து இளவரசர் கூட அதை பட்டியலிட முடியவில்லை. முகமது-பின் சல்மான் தனது பங்குகளில் ஐந்து சதவீதத்தை விற்க விரும்புகிறார், ஆனால் மன்னர் சல்மான் அதை ஏற்கவில்லை. 

சல்மானின் இந்த முடிவு அழுத்தம் கொடுப்பது   போன்றது என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன  இந்த நிறுவனத்தின் ஐபிஓவுடன் தொடர்புடைய பல கவலைகள் உள்ளன.

பொதுவாக பட்டியல்படுத்துவதற்கு, கண்காணிப்பு மற்றும் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இதனுடன், அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதலில் செளதியிடமிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டும், வழக்குகளும் ஐபிஓ பிரச்சினையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

1980 முதல் அரம்கோவை சொந்தமாகக் கொண்டுள்ளது செளதி அரேபியா. 1982 முதல், எண்ணெய் இருப்புத் துறையைப் பற்றி நிறுவனம் வைத்திருந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டன.

அரம்கோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டுமானால், அது விதிகளைப் பின்பற்றி,   எண்ணெய் இருப்பு பற்றிய தகவல்களைப் பகிர வேண்டும்.

இருப்பினும், அரம்கோவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டாலும், அதனிடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: