அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரி வழக்கு

அத்திவரதர்
Image caption அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் அத்திமரத்தாலான வரதராஜப் பெருமாளைக் காண பக்தர்கள் குவிவதால், அவர் தரிசனத்திற்கு வைக்கப்படும் நாட்களை அதிகரிக்க வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.

1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அத்திவரதரை குளத்திலிருந்து வெளியில் எடுக்க முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, 27ஆம் தேதி இரவு - 28ஆம் தேதி அதிகாலையில் அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரின் சிலை வெளியில் எடுக்கப்பட்டது.

இதற்காக குளத்தில் இருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அருகில் இருந்த மற்றொரு குளத்தில் நிரப்பப்பட்டது.

அத்திவரதரைக் காண்பதற்காக பக்தர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், ஒன்றாம் தேதியிலிருந்துதான் அவரை தரிசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டது.

ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து அத்திவரதர் வரதராஜப் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டார்.

Image caption கூட்டத்தை ஒழுங்கு செய்தபோது மயங்கி விழுந்த காவலர்கள்

குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சயன திருக்கோலத்திலேயே 31 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்துவருகிறார்.

அத்திவரதரை நிரந்தரமாக தரிசனத்திற்கு வைக்க வேண்டும், கூடுதலாக 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதரின் திருவுருவம் மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீருக்குள் வைக்கப்படுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னைய்யா நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞரான பிரபாகரன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக முறையீடு செய்தார்.

அத்திவரதரைக் காணக் கூட்டம் குவிந்துவருவதால், அனைவரும் அத்திவரதரை தரிசிப்பதற்கு ஏதுவாக மேலும் 48 நாட்களுக்கு தரிசனம் தர உத்தரவிட வேண்டுமெனக் கோரினார். இந்தக் கோரிக்கை மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டால் விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "40 வருடங்களுக்கு ஒரு முறைதான் அத்திவரதரை தரிசிக்க முடியுமென்பதால், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகிறது. போதிய வசதிகளைக்கூட மாவட்ட நிர்வாகம் செய்துதரவில்லை. அத்திவரதரைக் காணவரும் பக்தர்கள் இரண்டு நாட்கள் காத்திருக்கத் தயாராக வரும்படி மாவட்ட நிர்வாகம் கூறுவது அதன் திறமையின்மையையே காட்டுகிறது. இந்த நிலையில், மேலும் பல பக்தர்கள் அத்திவரதரைத் தரிசிக்க ஏதுவாக ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கத் தடைவிதிக்க வேண்டும். மேலும் ஒரு மண்டலம் - 48 நாட்கள் - அத்திவரதரை தரிசனத்திற்கு வைக்க வேண்டும்" என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்திவரதரின் திருவுருவம் ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுமென்பதால் அன்றைய தினம் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவுருவம் குளத்திற்குள் வைக்கப்படும்போது கோவிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் பெருமளவிலான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்