ரஜினிகாந்த் அத்திவரதர் தரிசனம்: நள்ளிரவில் வந்தார்

ரஜினிகாந்த்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நள்ளிரவில் வந்த நடிகர் ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் சிலை நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுவது வழக்கம்.

1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 17அம் தேதியன்று அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திவரதரைக் காணவரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரைக் காண்பதற்காக வந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் வரதராஜபெருமாள் கோவிலுக்கு தனது மனைவி லதாவுடன் வந்தார் ரஜினிகாந்த். சிறப்பு வழியில் அழைத்துச் செல்லப்பட்ட அவர் வசந்த மண்டபத்தில் அமர்ந்து அத்திவரதரை தரிசித்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த ரஜினிகாந்தைப் பார்த்து, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

45வது நாளான இன்றும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் அத்திவரதரைக் காண வரிசையில் நிற்கின்றனர். காலை முதல் சுமார் 50,000 பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளனர்.

நாளை மறுநாளுடன் அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுக்குவருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்