அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு

நின்ற கோலத்தில் தரிசனம் வழங்கும் அத்திவரதர்
Image caption நின்ற கோலத்தில் தரிசனம் வழங்கும் அத்திவரதர்

அத்திவரதர் தரிசன காலத்தை நீடிப்பது குறித்து அரசும் அறநிலையத் துறையும்தான் முடிவுசெய்ய முடியுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவரும் அத்திவரதரை, மேலும் சில நாட்களுக்கு தரிசனம் அளிக்கச் செய்ய வேண்டுமெனக் கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன.

அத்திவரதர் வைபவம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. ஜூலை 1ஆம் தேதி தரிசனமளிக்க ஆரம்பித்த அத்திவரதர், ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார் என முன்னதாக முடிவுசெய்யப்பட்டிருந்தது.

ஆனால், நாளுக்கு நாள் பக்தர்கள் தரிசனம் அதிகரித்துவந்ததால், அத்திவரதர் தரிசனம் அளிக்கும் தினங்களை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை ஏற்க கோவில் நிர்வாகமும் அரசும் மறுத்துவிட்டது.

Image caption இரவில் வந்து அத்திவரதரை குடும்பத்தோடு தரிசித்த ரஜினிகாந்த்

இந்த நிலையில், தமிழரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் மேலும் பல பக்தர்கள் அத்திவரதரைத் தரிசிக்க விரும்புவதால் தரிசன காலத்தை இன்னும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். தன்னைப் போன்ற முதியவர்களால் அத்திவரதரைத் தரிசிக்க முடியாததையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழரசி அத்திவரதரைத் தரிசிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டுமென உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளம் எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது என்பது குறித்த வழக்கு ஒன்று நீதிபதி ஆதிகேசவலு முன்பாக புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், குளத்தை சுத்தப்படுத்த கோரிய வழக்கில், தரிசனத்தை நீட்டிக்க கோரும் மனுவை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது எனவும் கூறினார்.

Image caption தொடக்கத்தில் சயன கோலத்தில் அத்திவரதர் தரிசனம் அளித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏராளமான மக்கள் தரிசனம் செய்யாததால் பொது நலனைக் கருதி தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், தரிசனம் நீட்டிக்கப்பட மாட்டாது என அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியிருப்பது குறித்து அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விவகாரத்தை பொதுநல மனுவாகத் தாக்கல் செய்ய விரும்பினால் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு அதனைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தன் முன்பாக தொடர்ந்து வாதாடினார் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாகவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதற்கிடையில் புதன்கிழமையன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னைய்யா, அத்திவரதர் தரிசன காலம் நீட்டிக்கப்படமாட்டாது என உறுதிசெய்தார்.

வியாழக்கிழமையன்று ஆடி கருட சேவை இருப்பதால் கிழக்கு கோபுர வாசல் நன்பகல் 12 மணிக்கு மூடப்படும் என்றும் 12 மணிக்குள் கோவிலுக்கு உள்ளே வந்தவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிற்பகல் 4 மணிக்குத் துவங்கும் ஆடி கருட சேவை இரவு 8 மணிக்கு முடிவுறும். இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு கோவில் மூடப்படும்வரை பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவார் என்பதால் முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசனம் ஆகஸ்ட் 16 - 17ஆம் தேதிகளில் கிடையாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவோடு பொது தரிசனமும் நிறைவுக்கு வருகிறது.

ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று, அத்திவரதரை அனந்தசரஸ் குளத்திற்குள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்