ரஜினிகாந்த்: "பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக காஷ்மீர் இருக்கிறது"

ரஜினி படத்தின் காப்புரிமை ARUN SANKAR

காஷ்மீர் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் - அர்ஜுனர் எனக் குறிப்பிட்டது விவாதமாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "காஷ்மீர் விவகாரத்தை அவர்கள் ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள். கிருஷ்ணர் - அர்ஜுனர் என்று ஏன் சொன்னேன் என்றால், ஒருத்தர் திட்டத்தைக் கொடுப்பவர், மற்றொருவர் அதை செயல்படுத்துபவர்" என்று பதிலளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், "காஷ்மீர் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம்? அது இந்த நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அந்த காஷ்மீர், பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தாய் வீடாக இருக்கிறது. அவர்கள் ஊடுருவ 'கேட் - வே ஆப் இந்தியா' மாதிரி இருக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ராஜதந்திரமாக, முதல்ல 144 கொண்டுவந்துவிட்டு, வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, என்ன செய்கிறார்கள் எனத் தெரியாமல், முதலில் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டு, பிறகு மக்களவையில் செய்திருக்கிறார்கள். இது அருமையான ராஜதந்திரம். இதை விவாதிச்சு, எல்லா விஷயமும் தெரிந்து, அவங்க வந்து முழுச்சுக்கிட்டா விடமாட்டாங்க" என்று தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள் அவர் குற்றம்சாட்டினார். "தயவுசெய்து நம்ம அரசியல்வாதிகள் எதை அரசியலாக்குவது எனத்தெரிந்துகொள்ள வேண்டும். இது நம்ம நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. எதை அரசியலாக்குவது எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சித்திரை ஒன்றாம் தேதி ரஜினி துவங்கவிருக்கும் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமென சொல்லப்படுவது குறித்து கேட்டபோது, அதைப் பற்றி விரைவில் தெரிவிப்பதாகக் கூறினார். தமிழக அரசியலின் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் மாறுமா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று மட்டும் பதிலளித்தார்.

கடந்த வார இறுதியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராட்டினார். மேலும், பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் - அர்ஜுனர் போல செயல்படுவதாகவும் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியுமென்றும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: