"முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்" - கருணாஸ்

கருணாஸ் படத்தின் காப்புரிமை FACEBOOK

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ், இன்று புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து, தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளில் அரசியல் கட்சியினர் தலையீடு இருப்பதாக புகார் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாடானை தொகுதியில் 22 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தலையிடுவதாக எனக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகார்கள் குறித்து முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்து, நான் வெளிப்படையாகவே முதல்வரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையல்ல. அரசு கேபிள் டிவி தலைவர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து விமர்சனம் செய்ததால், அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதாக அதிமுகவின் தலைமை கூறுகின்றனர். எனவே காக்கை உட்கார்ந்து பனம் பழம் விழுந்த கதையாக, என்னால் அவர் பதவி பறிக்கப்பட்டது எனச் சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. அமைச்சர் நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்' என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் அவர் மறைந்துவிட்டார். எனக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி போதும். அதேபோல் பதவிகள் வரும்போது பணிவு இருக்க வேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு அவரது கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது எனக்கு வியப்பாகவும் அதேநேரத்தில் வேதனையாகவும் இருந்தது' என்று கருணாஸ் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்