man vs wild நரேந்திர மோதி எப்படி தன்னை வெளிப்படுத்த விரும்பினார்? - மழை முதல் முதலை வரை

மோதி

டிஸ்கவரி சேனலில் வெளியான மேன் Vs வைல்ட் என்ற ரியாலிட்டி தொடர் உலக அளவில் மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்று.

அதன் அடிப்படை இதுதான்: நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் ஏதாவது ஒரு வனாந்திரத்தில் தனது குழுவினருடன் சிக்கிக்கொள்வார். அது பாலைவனமாகவோ, அடர்ந்த காடாகவோ, மலையாகவோ, சில சமயங்களில் கைவிடப்பட்ட தொழிற்சாலை பிரதேசமாகவோ இருக்கும். அங்கு உள்ள அபாயங்களை அவர் சமாளித்து எப்படி மீண்டும் மனிதர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்கு வருகிறார் என்பதுதான் இந்தத் தொடரின் மையமான விஷயம்.

பியர் க்ரில்ஸ் என்பிசி, நாட் ஜியோ தொலைக்காட்சிகளில் ரன்னிங் வைல்ட் என்ற நிகழ்ச்சி ஒன்றைச் செய்தார். பல பிரபலங்களுடன் இதே போன்ற சாகசத்தில் ஈடுபடுவார். இந்த ரன்னிங் வைல்ட் நிகழ்ச்சியில்தான் ஹாலிவுட் நட்சத்திரங்கள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க, மீண்டும் மேன் Vs வைல்ட் என்ற இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்ப்பட் தேசிய வனவிலங்குப் பூங்காவில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக இம்மாதிரி பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், சாகசங்கள் அதிகம் இருக்காது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் தங்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்கள் குறித்த தங்களுடைய பார்வை என்ன என்பதையும் பகிர்ந்துகொள்வார்கள். நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள், பியர் க்ரில்ஸின் தப்பிப் பிழைக்கும் திறன் குறித்து அறிவதைவிட, பங்கேற்கும் பிரபலங்கள் குறித்தே அதிகம் அறிந்துகொள்வார்கள். பிரதமர் மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியும் அப்படித்தான்.

ஜிம் கார்ப்பெட் வனவிலங்குப் பூங்காவில் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கும் பியர் க்ரில்ஸ், சிறிது நேரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்கிறார். பிறகு இருவரும் காட்டிற்குள் பேசியபடியே பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். நடுவில் ஒரு ஈட்டியைச் செய்கிறார்கள். நதி ஒன்றைக் கடக்கிறார்கள். பிறகு பிரதமர் மீண்டும் தன் பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறார்.

இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் பிரதமர் தன் சிறு வயது வாழ்வு, இயற்கை குறித்த தனது பார்வை, இமயமலைப் பிரதேசத்தில் தான் மேற்கொண்ட பயணங்கள், தன்னுடைய கடின உழைப்பு ஆகியவை குறித்து பேசுகிறார்.

தன்னுடைய இளமைப் பருவத்தில் மிக எளிய வாழ்க்கையையே வாழ்ந்ததாகச் சொல்லும் பிரதமர், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற தன் தந்தை கடினமாக உழைத்ததாகவும் அவருக்கு உதவும் வகையில் அவருடைய தேநீர் கடையில் தானும் அவ்வப்போது சென்று பணியாற்றியதாகவும் கூறுகிறார். அப்போதுதான், தேநீரை எடுத்துக்கொண்டு ரயில்வே பிளாட்பாரங்களில் தான் விற்பனை செய்ததாகவும் ரயில்வே என்பது தன் வாழ்வில் மிகப்பெரிய பங்கை வகித்திருப்பதாகவும் சொல்கிறார் பிரதமர்.

படத்தின் காப்புரிமை DISCOVERY

இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் மழை வரும்போதெல்லாம் 20 - 25 அஞ்சல் அட்டைகளை வாங்கிவரும் தன் தந்தை, மழை வந்த தகவலை அந்த அட்டைகளில் எழுதி உறவினர்களுக்கு அனுப்பச் சொல்வார் என்கிறார் மோதி. மழை அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு முக்கியம் என்பது அந்த வயதிலேயே தனக்கு உணர வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

பிரதமராவது என்ற கனவு உங்களுக்கு எப்போது ஏற்பட்டது என்ற கேள்விக்கு, 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த பிறகு, மக்கள் இந்தப் பொறுப்பை ஏற்கும்படி கூறியதாகச் சொல்லும் பிரமதர் மோதி, கடந்த பதினெட்டு ஆண்டுகளில் தான் எடுத்து முதல் விடுமுறை இதுதான் என்கிறார்.

மோதி - பியர் க்ரில்ஸ் உரையாடலில் இயற்கை, அதனைப் பாதுகாப்பது குறித்த பேச்சுகளே அதிகம் இருந்தன. 17 - 18 வயதிலேயே என்ன செய்வது என்று தெரியாமல், இமயமலைக்கு பயணம் செய்ததாகவும் அங்கு பல துறவிகளைக் கண்டதாகவும் சொல்கிறார் மோதி.

முடிவில் இயற்கையைக் காக்க வேண்டும் என்ற உரையாடலோடு அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி முடிகிறது.

இந்த நிகழ்ச்சியில் தன் சொந்த வாழ்வில் நடந்த பல தகவல்களை மோதி அளிக்கிறார் என்றாலும், பல தருணங்களில் அவருடைய கருத்துகள் ஒரு முனிவருடைய கருத்துகளைக் கேட்பதுபோல அமைந்தது.

காட்டிற்குள் சிறிது நேரம் நடந்ததும், புலிகளோ, அபாயம் ஏற்படுத்தும் விலங்குகளோ வந்தால் அவற்றை எதிர்கொள்ள ஒரு ஈட்டியைத் தயாரிக்கிறார் பியர் கிரில்ஸ். அதை பிரதமரின் கையில் கொடுக்கிறார் அவர். அதைப் பார்க்கும் பிரதமர், தான் பின்பற்றும் நம்பிக்கை யாரையும் கொல்ல அனுமதிப்பதில்லை என்கிறார்.

பியர் கிரில்ஸ் தன் நிகழ்ச்சியில் பூச்சிகளைப் பிடித்துத் தின்பது போன்ற அதிர்ச்சிதரத்தக்க செயல்களைச் செய்பவர். இந்த நிகழ்ச்சியில், யானைச் சாணத்தை எடுத்து வாயில் பிழிந்துகொள்ளப் பார்த்தார் மனிதர். பார்க்கும் நமக்கே அதிர்ச்சியாக இருந்தது.

சிறிது தூரம் சென்றதும், தான் சிறு பையனாக இருந்தபோது முதலைக் குட்டி ஒன்றை பிடித்து வீட்டிற்குக் கொண்டுவந்துவிட்டதாகவும், அதைக் கண்ட தன் தாயார் தன்னை மீண்டும் அந்த முதலைக் குட்டியை குளத்தில்விடும்படி சொன்னதாகவும் சொல்கிறார் மோதி.

நிகழ்ச்சி முழுவதும் ஒரு இயல்பான மனிதராக, தன் வாழ்க்கையை, தன் பார்வையை பகிர்ந்துகொள்ள விரும்பும் ஒரு மனிதராக இருக்க முயற்சிக்கிறார் மோதி. ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோதியையே நிகழ்ச்சி முழுக்க சந்திக்கிறோம்.

man vs wild | எனக்கு பயமா? - bear grylls-ஐ அதிர வைத்த Modi | 5 facts of Narendra modi |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்