"காஷ்மீர் விவகாரத்தில் நடந்தது அரசியல் சட்டப்படுகொலை" - ஐஏஎஸ் பணியை விட்டு அரசியல் தலைவரான ஷா ஃபைசல் பேட்டி

படத்தின் காப்புரிமை FACEBOOK / SHAH FAESAL
Image caption ஷா ஃபைசல்

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் (ஜே.கே.பி.எம்.) தலைவராக உள்ள தாமும் மற்ற அரசியல்வாதிகளைப் போல விரைவில் கைது செய்யப்படலாம் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷா ஃபைசல் கூறியுள்ளார். காஷ்மீர் முழுக்க அச்சம் பரவியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிபிசியில் ஹார்டு டாக் நிகழ்ச்சிக்காக ஸ்டீபர் சைகர், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷா ஃபைசலுடன் நீண்ட நேர்காணல் நடத்தினார்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 2009ல் முதலிடம் பிடித்தவரான ஷா ஃபைசல் கடந்த ஆண்டு தமது பணியைத் துறந்து அரசியலில் நுழைந்தார். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் எட்டு மில்லியன் மக்களும் முடக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக இந்தப் பேட்டியில் அவர் கூறினார்.

போர்ச் சூழ்நிலை

``கடந்த பல நாட்களாக ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு அமலில் உள்ளது. காஷ்மீரின் எட்டு மில்லியன் மக்கள் பல நாட்களாக முடக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன, மார்க்கெட்கள் மூடிக் கிடக்கின்றன. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது சிரமமாக உள்ளது. தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. தொலைபேசிகளும், செல்போன்களும் செயல்படவில்லை. வெளியில் வாழும் காஷ்மீரிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்களுடைய குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவத்தினர் குவிக்கப் பட்டுள்ளனர். அங்கே போர் நடப்பதைப் போன்ற சூழ்நிலை இருக்கிறது. மக்கள் தங்கள் உறவினர்களைச் சந்திக்க முடியவில்லை. அனைத்து அரசியல் தலைவர்கள், பிரிவினையை ஆதரிப்போர் மற்றும் இந்தியாவை ஆதரிப்பவர்களும் கூட காவலில் வைக்கப் பட்டுள்ளனர்'' என்று ஷா ஃபைசல் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

``ஆகஸ்ட் 4 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் என்னைத் தவிர அனைவரும் காவலில் உள்ளனர். அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து நான் கிளம்பிய பிறகு, காவல் துறையினர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் நான் எப்படி விமான நிலையத்தை அடைந்து, டெல்லிக்கு வந்து சேர்ந்தேன் என்பது தனிக் கதை. தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டிருந்ததால், நான் அங்கிருந்து புறப்பட்டது தொடர்பாக அரசில் மேலதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை செய்ய முடியாமல் போனதால், இது சாத்தியமானது. ஆனால், இங்கிருந்து நான் சென்றதும், மற்றவர்களைப் போல என்னையும் கைது செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்'' என்றும் அவர் கூறினார்.

காஷ்மீர் தலைவர்கள் அனைவரும் காவலில் உள்ளனர்

அது இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி என்று அவர் கூறுவதால், தன் கட்சியினருக்கும், காஷ்மீரி மக்களுக்கும் என்ன தகவலை தெரிவிக்கப் போகிறீர்கள், தெருக்களுக்கு வந்து போராட வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

``ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்ன நடந்தது என்று பார்த்தீர்கள் என்றால், தேர்தல் அரசியலில் நம்பிக்கை கொண்டிருக்கும் என்னைப் போன்ற பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அவர்கள் மீது அமல் படுத்தியிருக்கிறார்கள். இதுவரை இரண்டு முன்னாள் முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் அரசின் காவலில் இருக்கிறார்கள். எனவே, மக்களை ஒருங்கிணைப்பது பற்றி பேசுவதாக இருந்தால், கடந்த ஒரு வாரமாக ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், போராட்டத்துக்காக மக்களை ஒன்று திரட்டுவது சிரமமான விஷயம்'' என்று ஷா ஃபைசல் பதில் அளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

'இதற்கு எதிர்ப்பு இருக்கும்'

``மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் பாதுகாப்புப் படையினர் எப்போது கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டாலும், அங்குள்ள மக்கள் இயல்பாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன். நான் சொல்வதையோ அல்லது வேறு எந்த காஷ்மீர் தலைவர் சொல்வதையோ அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்போதைக்கு அங்கு பெருமளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக யாரால் குரல் எழுப்ப முடியும்? ஆனால் நிச்சயமாக இதை மக்கள் எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.''

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் கொலை

படத்தின் காப்புரிமை Getty Images

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்று முந்தைய தேர்தல்களில் பாஜக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இப்போது அரசுக்கு மக்களின் வாக்குரிமை கிடைத்துள்ள நிலையில், இப்போது 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது ஏன் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று ஷா ஃபேசலிடம் கேட்கப்பட்டது.

``உலகில் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா மதிக்கப்படுகிறது. மோதி அதிகாரத்தில் இருந்தாலும், எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க பல அரசியல் சாசன அமைப்புகள் இருப்பதாக நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். அதனால் தான் பாதுகாப்பாக இருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் இது அமல் செய்யப்பட்ட நடைமுறை எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த 70 ஆண்டுகளில் அரசியல்சாசன வரலாற்றையும், 370வது சட்டப் பிரிவையும் நீங்கள் பார்த்தால், அரசியல்சாசன நடைமுறைகளை முறையாகப் பின்பற்றினால், 370வது பிரிவை நீக்குவது சிரமம் என்று அரசியல்சாசன நிபுணர்கள் அனைவரும் ஒரே மாதிரி கருத்தை தெரிவித்திருப்பதைக் காணலாம். அதனால் தான் 370வது பிரிவை ரத்து செய்வதற்கு, முழுவதும் சட்டவிரோதமான நடைமுறைகளைப் பின்பற்றி, நாடாளுமன்றத்தில் அரசியல்சாசனம் கொலை செய்யப் பட்டிருக்கிறது'' என்று அவர் பதில் அளித்தார்.

நாடாளுமன்றவாதிகள் பெரும்பான்மையின் குரலாக மாறிவிடக் கூடாது

370வது பிரிவை ரத்து செய்யும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டிருப்பது பற்றி சுட்டிக்காட்டியதற்கு, ``இந்தியா அற்புதமான பன்முகத் தன்மை கொண்ட நாடு. நாடாளுமன்றம் 130 கோடி மக்களின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது. பெரும்பான்மையின் குரலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறிவிடக் கூடாது.

இது நம்முடைய பிரச்சினை. இதுபோன்ற சூழ்நிலையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை யார் காது கொடுத்து கேட்பது? எதிர்காலத்தில் வேறொரு அரசால் இது நடக்கும். நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்கு நாடாளுமன்றம் ஊறு விளைவித்துவிட்டது. இதற்காக பெரும்பான்மை அளிக்கப் படவில்லை. நமது அடிப்படை அரசியல் சாசனத்தில் உள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். பல கட்சிகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன'' என்று ஃபைசல் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாஜகவின் நோக்கம்

யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு ஜம்மு காஷ்மீரில் அதிக வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நிதி முதலீடுகள் வரும் என்றும், இதனால் மக்கள் நேரடியாகப் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ``370வது பிரிவு ரத்து தொடர்பாக பொய்யான விவரங்கள் தெரிவிக்கப் படுவதாக நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான குறியீடு வேறு பல மாநிலங்களை விடவும் அதிகமாக உள்ளது. இன்று ஜி.டி.பி., தனிநபர் வருமானம், 1000 ஆண்களுக்கு எவ்வளவு பெண்கள் என்ற விகிதாச்சாரம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் ஆகியவை நாட்டில் பல மாநிலங்களைவிட ஜம்மு காஷ்மீரில் நல்ல நிலையில் உள்ளன'' என்று ஃபைசல் தெரிவித்தார்.

``நில சீர்திருத்த விவகாரங்களில் உத்தரவாதம் அளிப்பதாக 370வது சட்டப்பிரிவு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்ததைப் போல வேறு எந்த மாநிலத்திலும் நில சீர்திருத்தம் நடக்கவில்லை. நிறைய வாதங்கள் முன்வைக்கப் பட்டன. ஆனால் அவை எல்லாமே ``ஒரே அரசியல்சாசனம், ஒரே கொடி, ஒரே குடியரசுத் தலைவர், ஒரே பிரதமர்'' என்ற பாஜகவின் நோக்கங்களைக் குறிப்பிடும் திட்டத்தின் அம்சங்களாகவே உள்ளன. அனைவரையும் ஒரே தன்மை கொண்டவர்களாக ஆக்குவது என்ற சித்தாந்தத்தைக் கொண்டதாக அது இருக்கிறது. அதில் பன்முகத் தன்மைக்கு இடம் இல்லை. சிறுபான்மையினரையும், மற்ற கலாச்சாரங்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. குறிப்பாக அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள். அதுதான் இங்கே நடந்திருக்கிறது'' என்றும் ஃபைசல் கூறினார்.

படத்தின் காப்புரிமை PTI

நான் பொம்மையாக இருக்க மாட்டேன்

பிரிவினைவாதத்தை எதிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று எப்படி கூறினீர்கள் என்று கேட்டதற்கு, ``நான் மட்டுமல்ல. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று அனைவரும் நம்பினர். இப்போது அந்த சிந்தனை மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியலில் இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று நீங்கள் பொம்மையாக மாறிவிட வேண்டும் அல்லது பிரிவினைவாதியாக மாற வேண்டும். இப்போது மக்களின் அரசியல் பாதை மாறும். நான் பொம்மையாக இருக்கப் போவதில்லை. முதலில் அவர்கள் எங்கள் தாத்தா பாட்டிகளை, அவர்களின் பெற்றோர்களை ஏமாற்றினார்கள். இப்போது நாங்கள் ஏமாற்றப் படுகிறோம்'' என்று அவர் பதில் அளித்தார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாங்கள் சிறுமைப்படுத்தப்பட்டோம்

``சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற பிறகு நிர்வாகத் துறையில் பல ஆண்டுகள் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். பிரிவினைவாதத்துக்கு எதிராகப் பேசியுள்ளீர்கள். சுத்தமான தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குவது பற்றி பேசி இருக்கிறீர்கள். வளர்ச்சி பற்றி பேசி இருக்கிறீர்கள். நீங்கள் தவறாகப் பேசிவிட்டதாக நினைக்கிறீர்களா?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.

``காஷ்மீரி மக்களின் நம்பிக்கையைப் பெறாமல் அரசியல் சாசனம் திருத்தப்பட்ட போது, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாங்கள் சிறுமைப்படுத்தப் பட்டோம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவத்தினரைக் குவித்து, மக்களை வீடுகளுக்குள் முடக்கி இதைச் செய்தது எங்களை சிறுமைப்படுத்தியதாக உள்ளது. எதிர்ப்புக் குரல்கள் அடக்கப் பட்டுள்ளன. மக்களின் கருத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல், தன்னுடைய நோக்கத் திட்டத்தை மோதி திணித்திருக்கிறார்'' என்று ஃபைசல் கூறினார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK / SHAH FAESAL

பிரிவினைவாதமா அல்லது போர்க் குணமா?

போர்க்குணம் கொண்டவர்களை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, ``நான் அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். காஷ்மீரில் அகிம்சை வழி அரசியல் போராட்டங்களை நாங்கள் தொடங்குவோம். அதற்கு அவகாசம் தேவைப்படும். ஆனால் உலகில் அகிம்சை வழி எதிர்ப்புக்கு தான் வெற்றி கிடைத்திருக்கிறது என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அந்தப் பாதையில்தான் நான் செல்வேன்'' என்று அவர் பதில் அளித்தார்.

``தீவிரவாதிகளால் உங்கள் தந்தை கொல்லப்பட்டார். காஷ்மீர் மீண்டும் வன்முறைப் பாதைக்குத் திரும்பும் என்று நம்புகிறீர்களா'' என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.

``கடந்த முப்பது ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். தீவிரவாதத்தால் மூன்று தலைமுறைகள் அழிக்கப் பட்டுள்ளன. எதிர்கால தலைமுறையினர் தீவிரவாதத்தால் இறப்பதைக் காண நான் விரும்பவில்லை. ஜப்பானியர்களைப் போல காஷ்மீரிகள் விட்டுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். சிந்தனைகளை, எண்ணங்களை, தாயகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அழிக்கப்பட்ட அனைத்தையும் அவர்கள் மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்'' என்று ஷா ஃபைசல் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மனித உரிமை மீறல்களை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்

``இதை நாஜிக்களுடன் ஒப்பிட்டிருக்கிறார் இம்ரான் கான். உலகின் மற்ற நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கூட இந்த விஷயத்தில் மவுனம் காக்கின்றன. பாகிஸ்தானின் உதவியை நீங்கள் நாடுவீர்களா அல்லது உலகின் மற்ற நாடுகளின் உதவியை நாடுவீர்களா'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த ஷா ஃபைசல், ``சர்வதேச அளவில் வெளியான கருத்து வெளிப்பாடுகளால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். மூன்று அணுசக்தி நாடுகள் காஷ்மீருக்கு உரிமை கோருகின்றன. இது அணுசக்தியின் முக்கியமான விஷயம். உலகின் பெரிய நாடுகள் இதை மறந்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சினையை அவர்கள் கவனிக்க வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் இந்த மூன்று நாடுகள் அணுசக்திப் போரைத் தொடங்கலாம். இங்குள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் கவனத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறினார்.

``இந்த விஷயத்தில் பாகிஸ்தான் ஆதரவைப் பெறுவீர்களா'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.

``சர்வதேச அளவில் பாகிஸ்தான் உதவிகள் கிடைக்காத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இப்போது சர்வதேச தலையீட்டுக்கான காலம் வந்துவிட்டது. காஷ்மீரில் அமைதியைப் பராமரிப்பதில் இரு நாடுகளுக்கும் சர்வதேச சமுதாயம் உதவிட வேண்டும். காஷ்மீரி மக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்'' என்று ஃபைசல் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: