வி.பி. சந்திரசேகர் தற்கொலை: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோக முடிவு

வி.பி. சந்திரசேகர் படத்தின் காப்புரிமை Facebook
Image caption வி.பி. சந்திரசேகர்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை

சென்னையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் (வயது 57). இவர் சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வர்புரத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு சந்திரசேகர் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வி.பி. சந்திரசேகர் அங்கு தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்கள் ஆடி, 4,999 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

மேலும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "11-ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பு"

படத்தின் காப்புரிமை Google

சுமார் 51 ஏக்கர் பரப்பளவை கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் உட்பகுதியில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்க வேண்டும் என்று கருதி அதற்கேற்றாற்போல் 11ஆம் நூற்றாண்டிலேயே கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடகிழக்கு பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக் கப்பட்ட திருப்பாற்கடல் என்ற குளம் தமிழக அரசால் தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தின் தெற்கு பகுதியில் ஒரு கால்வாய் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட இக்கால்வாய் முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்டு நீள் செவ்வக வடிவ கருங்கல் பலகையால் மூடப்பட்டு இருந்தது.

இக்கால்வாய் குளத்தின் மேற்குப்பகுதி வழியாக வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான கால்வாயோடு இணைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு, கால் வாய் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.

மழைநீரை சேகரிக்கும் வகை யில் அமைக்கப்பட்ட இக்கால்வாய் சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள யானைக் கால் மண்டபத்தின் அருகே தொடங்கி சுமார் 2,200 மீட்டர் வரை பூமிக்கடியில் வடக்கு நோக்கிச் சென்று திருப்பாற்கடல் மற்றும் தில்லை காளிக் கோயில் முன்பாக உள்ள சிவப்பிரியை குளத்தையும் இணைப்பதாக உள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "வேலூர் மாவட்டம் 3-ஆகப் பிரிக்க முடிவு"

படத்தின் காப்புரிமை FACEBOOK

தமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக நேற்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயரும் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூன்றாவது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது, வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வைத்தினான்குப்பம் எனப்படும் கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகா ஏற்படுத்தப்படும்" என்று முதல்வர் மேலும் கூறியதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்