அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்

arun jaitley படத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று, சனிக்கிழமை, மதியம் 12.07 மணியளவில், மரணமடைந்தார் என அந்த மருத்துவமனையின் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

1999 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சட்டம் மற்றும் நீதி, தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, 2014 தேர்தலில் நரேந்திர மோதி பிரதமரானபின் நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைசகராகவும் இருந்தார். அதே ஆட்சிக் காலத்தின் முதல் சில மாதங்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.

2018இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜெட்லி, உடல்நிலை காரணமாக புதிய அரசில் பொறுப்பு எதையும் தமக்கு வழங்க வேண்டாம் என்று 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலமின்மை காரணமாக, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் முதல் நிதியமைச்சர் பொறுப்பை அருண் ஜெட்லி கவனிக்காததால், அந்த அமைச்சரவையை கூடுதலாக ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் கவனித்து வந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பிற பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்று நலம் விசாரித்திருந்தனர்.

1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி, ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் மூலம் மாணவர் அரசியலுக்கு வந்தார்.

அருண் ஜெட்லி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் ஆவார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2009 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

அருண் ஜெட்லியின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்