'மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை எச்சரிப்பது இந்து மதத்திற்கு எதிரானதா?'

மாணவர்கள் கையில் சாதிக் கயிறுகள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வண்ணத்திலான கயிறுகளைக் கட்டிக்கொண்டுவருவதைத் தடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கை அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஜூலை 30ஆம் தேதி கல்வித் துறை இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018ஆம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அணியப்படும் இந்தப் பட்டைகள், கயிறுகள், நெற்றியில் வைக்கும் திலகம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தங்களது சாதியை அடையாளப்படுத்துவதோடு, அவற்றை வைத்து ஒன்று சேர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரிகளுக்கு தகுத்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

இந்த சுற்றிக்கை சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, "கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

படத்தின் காப்புரிமை HRAJABJP

வேறு சில பா.ஜ.க பிரமுகர்கள் தாங்கள் கல்வியமைச்சருடன் பேசியதாகவும் எந்த மதத்தினரின் உணர்வுகளையும் அரசு புண்படுத்தாதென கல்வியமைச்சர் தெரிவித்ததாகவும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறித்து தெரியாது என்று கூறினார்.

"பள்ளிக்கூடங்களில் சாதி அடிப்படையில் மாணவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துவது போல செயல்பட்டால் அதனை சரிபார்க்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியது.

அதனை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வரவில்லை. ஆகவே, தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் இது தொடர்பாக மீண்டும் ட்விட்டரில் எழுதிய எச். ராஜா, "பள்ளிகளில் இந்து மத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்டுவதற்கும், நெற்றியில் திலகமிட்டுக்கொள்வதற்கும் தடையில்லை. ஆனால் நேற்றைய முன்தினம் அமைச்சர் அவர்களை கலக்காமல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்றும் கூறியுள்ளார். எனவே இந்துமத உணர்வுகள் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தார்.

இதையடுத்து சமூக வலைதங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சாதி ரீதியாக அணி திரள்வதற்காகக் கட்டப்படும் சின்னங்களை மதச் சின்னங்களாக குறிப்பிடலாமா என கேள்வி எழுப்பப்பட்டது. பா.ஜ.கவைச் சேர்ந்த எச். ராஜாவுக்கு கல்வி அமைச்சர் பணிந்து செல்கிறாரா என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அப்படி எங்கே சாதிப் பாகுபாடு இருக்கிறது என்றும் பத்திரிகையாளர்களிடம் கேள்வியெழுப்பினார்.

படத்தின் காப்புரிமை facebook
Image caption கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

ஆனால், இந்த விவகாரம் இதோடு முடியவில்லை. பள்ளிகளில் மாணவர்கள் சாதி ரீதியாக அணி திரள்வது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் விவகாரமாக இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பள்ளிக்கூட மாணவர்கள், சிவப்பு, பஞ்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கயிறுகளை தங்கள் சாதிக்கு ஏற்படி இரண்டு கயிறுகளாகவோ, ஒற்றைக் கயிறாகவோ அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு வருகின்றனர்.

இதன் மூலம் தங்கள் சாதியைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் காணுபவர்கள், விளையாட்டு வகுப்புகளிலும் பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும் சாதி அடிப்படையில் அணி திரள்கிறார்கள்.

விளையாட்டுகளில் எழும் சிறு மோதல்கள்கூட, பெரிய மோதல்களாக மாறுகின்றன. "தென் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் விவகாரங்களில் 60-65 வழக்குகள் பதிவாகின்றன," என்கிறார் மதுரை எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.

படத்தின் காப்புரிமை VINCENTRAJ/FB
Image caption எவிடன்ஸ் கதிர்

இம்மாதிரி கயிறு, பேண்ட்கள், பொட்டு ஆகியவற்றின் மூலம் சாதியை அடையாளம் செய்யும்போக்கு தற்போது அரசுப் பள்ளிக்கூடங்களைத் தாண்டி, தனியார் பள்ளிகளிலும் நுழைந்திருக்கிறது.

பள்ளிக்கூட மாணவர்கள் கயிறு கட்டி சாதியை அடையாளப்படுத்தும் போக்கு எப்போது துவங்கியது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது என்றாலும் 1990களின் மத்தியிலிருந்தே மாணவர்கள் இவ்வாறு கயிறுகளைக்கட்டி வருகின்றனர். 13-14 வயதில் அதாவது, எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இவ்வாறு அணிதிரள ஆரம்பிக்கின்றனர் மாணவர்கள்.

"இவ்வாறு கயிறு கட்டிவரக்கூடாது என ஆசிரியர்கள் எச்சரித்தால், அதை இந்து மதத்திற்கு எதிரான போக்கு என்கிறார்கள். நீட் தேர்வு எழுதச் செல்லும்போது கையில் கட்டப்பட்டிருக்கும் எல்லாக் கயிறுகளும்தானே அறுக்கப்படுகின்றன?" எனக் கேள்வியெழுப்புகிறார் கதிர்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவரும் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனுமான டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணமூர்த்தியும் கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கிறார்.

"கயிறு கட்டுவதும், திலகமிடுவதும் இந்து மதம் சார்ந்ததுதான். ஆனால் மத நம்பிக்கையில் மாணவர்கள் அணியவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் அது சாதிய அடையாளமாகவே அணியப்படுகிறது. மாணவர்களிடம் சாதி பிரிவினையை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்கதக்கது. அமல்படுத்த வேண்டும்" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இப்போதைக்கு இந்த விவகாரம் ஓய்ந்ததாகத் தெரிந்தாலும், இம்மாதிரி ஒரு சுற்றறிக்கை குறித்து தகவல் இல்லையென பள்ளிக் கல்வி அமைச்சரே தெரிவித்தது கல்வித் துறை அதிகாரிகளிடம் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும், தவறிழைக்கும் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்