டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 36 தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன.

இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவரவில்லை.

மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மாலை 5:22 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்தததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனை கூடங்கள் உள்ள teaching block-ல் முதலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த கட்டடம் தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு அருகில் உள்ளது.

இந்த கட்டடத்தில் நோயாளிகள் யாரும் வைக்கப்படவில்லை. எனினும் தீப்பற்றிய இடத்திற்கு அருகே இருந்த நோயாளிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

மாலை 4:30 மணி அளவில் டீச்சிங் ப்ளாக்கில் முதலில் தீப்பற்றியதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் விஷால் பாட்டில் தெரிவித்தார்.

"முதலில் இரண்டாவது தளத்தில் பற்றிய தீ, மூன்றாவது தளம் வழியே வேகமாக ஐந்தாவது தளத்திற்கு பரவியதாக" சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் அனந்த பிரகாஷ் தெரிவித்தார்.

"ஏ.சி வெடிக்கும் சத்தம் அவ்வப்போது கேட்டது. இதோடு, சுவர்களும் இடிந்து விழுந்தன. ஏசி இயந்திரத்தின் பாகங்கள் வெடித்து சிதறியதால் நிலைமை மோசமானது" என்று அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த ஒரு பொறியாளர் கூறுகையில், "ஏசி இயந்திரத்தில் அமோனியா இருக்கும். இது வேகமாக தீப்பற்றக் கூடியது. அப்படியிருக்கும் சூழலில், கட்டடத்தில் அதிகளவில் ஏசி-க்கள் இருப்பதால் வேகமாக தீப்பற்றியிருக்கும்" என்று தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கார்டியோ நியூரோ மையத்தின் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், இந்தக் கட்டடம் தீப்பற்றிய கட்டடத்தின் அருகில் இல்லை.

"தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயை அணைக்க முடிந்தவரை போராடி வருகிறார்கள். அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்