மருத்துவம்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். சேர முறைகேடு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். சேர முறைகேடு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

#முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: எம்.பி.பி.எஸ். படிப்பு - இருப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பான வழக்கு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த சில மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ்

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு முடிவடைந்து, வகுப்புகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்ட சிலர் கடந்த ஜூலை 14-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்ததாவது, "தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

மேலும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,800 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 562 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

கடந்த மாதம் 6-ந்தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 8-ந்தேதி எம்.பி.பி.எஸ். மாணவர்களுக் கான கலந்தாய்வு தொடங்கியது. 15-ந்தேதி தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக் கான கலந்தாய்வு தொடங்கியது.

இதில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

இதனால் நிர்வாக ஒதுக் கீட்டின்கீழ் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள்.

இதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. மேலும் இந்த ஆண்டு மாநில இடஒதுக்கீட்டின் கீழ் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர்.

எனவே தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் செயலாளர் 2019-2020-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற கலந்தாய்வை ரத்துசெய்து அறிவிக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, புதிதாக கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மனு தாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், "தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், சமீபத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று தங்கி இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதை ஏற்க முடியாது. அவர்களுடைய இருப்பிடச் சான்றுகளை சரிபார்க்கவும், வெளிமாநிலங்களில் அவர்களின் இருப்பிட சான்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவ கலந்தாய்வில் இருந்து அவர்களின் பெயர் களை நீக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, "வெளிமாநில மாணவர்கள் என்று கூறப்படும் 126 மாணவர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்" என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், அந்த மாணவர்கள் எந்த அடிப்படையில் தமிழக இடஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய் வில் பங்கேற்றனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிட சான்று குறித்தும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: 'பிஎச்.டி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு'

பிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிஎச்.டி. சேர்க்கைக்கு தகுதி பெறுவர்.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே, பிஎச்.டி. மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றபோதும், பல பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.

இந்தச் சூழலில் நாட்டில் தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அமைத்தது.

இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்புகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பித்திருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 35 சதவீதம் போலியானவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 2010 முதல் 2015 வரையிலான 5 ஆண்டு கால கட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 11 ஆயிரம் போலி ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இதுபோன்ற காரணங்களால், தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஆராய்ச்சிப் படிப்புகளில் மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்பு சேர்க்கையிலும் பல்வேறு புதிய நடைமுறைகளை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) கொண்டுவர உள்ளது.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

இந்து தமிழ்: 'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு'

சென்னையில் உள்ள பள்ளி்க் கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்துள்ள தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ்.

படத்தின் காப்புரிமை Facebook

சதுப்பு நிலங்களைப் பாது காக்க ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமித்து இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது பள்ளிக் கரணை மற்றும் கழுவேலி ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 1965-ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013-ம் ஆண்டு கணக் கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி யுள்ள மாநகராட்சியின் இரண்டு குப்பை கிடங்குகளால் நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தை 1,085 குடியிருப்புவாசிகள் ஆக்கிரமித் துள்ளனர். பறக்கும் ரயில் நிலைய தேவைக்காக மட்டுமே 100 ஏக்கர் அளவுக்கு சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.25 ஏக்கர் நிலம் தேசிய கடல்சார் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமி்க்கப்பட்டுள்ளது.

இதுபோல மத்திய காற்றாலை கள் நிறுவனம் மற்றும் பல தனியார் ஐடி நிறுவனங்களும் போட்டி, போட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள் ளன. அங்கு பதிக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கோபுரங்களால் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அரியவகை பறவை இனங்கள் தற்போது இல்லை.

எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர குப்பைக் கிடங்குகளை அகற்றுவதுடன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் என யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற உத்தரவிடவேண்டும்.

இதேபோல விழுப்புரம் மாவட் டம் திண்டிவனம் அருகேயுள்ள கழுவேலி சதுப்பு நிலப்பகுதி 600 சதுர கிலோமீட்டரில் இருந்து 75 சதுர கிலோ மீட்டராக சுருங்கிவிட்டது. அங்குள்ள சட்டவிரோத இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நாளைக்கு (ஆக.21) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி, புதுக்குளம் உள்ளிட்ட 47 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாகக் கூறி அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதாகவும், அந்த நீர்நிலைகளில் உள்ள மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரி கோவையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: காஷ்மீர் விவகாரம் - எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், திமுக பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் ஆகஸ்ட் 22ம் தேதி நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்க இருப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

"அமைதி திரும்புகிறது" என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து- தொலை தொடர்புகளை துண்டித்து - காஷ்மீரில் "அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை" செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :